மேற்கு வங்கத்தில் ராகுல சாங்கிருத்யாயன் சிலையைச் சேதப்படுத்திய காவிகள்!

5 Min Read

‘‘பயணம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அறிவையும் மனிதநேயத்தையும் விரிவுபடுத்தும் செயல்’’ என உலகுக்குச் சொன்னவர் ராகுல சாங்கிருத்யாயன்.  ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதிய ராகுல சாங்கிருத்யாயன் இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர்.  எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தத்துவவாதி, தமிழ் உட்பட பல மொழிகளை அறிந்தவர் எனப் பல பரிமாணங் களைக் கொண்ட ஆளுமையாகவும் விளங்கினார்.

‘ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் அவர், இந்தியா, திபெத், ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து,  அரிய பவுத்தக் கையெழுத்துப் பிரதிகளைத் தேடி மீட்டவர். சுமார் 30 மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும்  பெரும்பாலும் ஹிந்தி மொழியிலேயே நூல்களை எழுதினார்.

பவுத்தத்தின்பால் அவர் கொண்ட ஈடுபாடு காரணமாக பவுத்தத் துறவியானார். பின்னர் லண்டனில் வசிக்கும்போது துறவு வாழ்க்கையைத் துறந்து திருமணம் செய்துகொண்டார். இந்தியா திரும்பிய பின்னர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவருடைய நூல்கள் காலம் கடந்தும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இன்றளவும் புகழ் பெற்று விளங்குபவை.

வரலாறு, பவுத்தம், மொழியியல், தத்துவம், சமூகவியல், பொதுவுடைமைச் சிந்தனை உள்ளிட்ட பல துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அவரது  ‘ஊர்சுற்றிப் புராணம்’ மற்றுமொரு சிறந்த படைப்பு.

‘‘பயணம் மனிதனைச் சுதந்திரமான சிந்தனை யாளனாக்கும்;  ஜாதி, மத, மொழி வேறுபாடுகளை உடைக்கும்; புத்தகங்களில் கிடைக்காத அறிவை மக்களிடமிருந்து பெறலாம்; இளைஞர்கள் உலகத்தை நேரில் காண வேண்டும்’’ என தனது ‘ஊர் சுற்றிப் புராணம்’ நூலில் கூறுகிறார். குடும்பம், மரபு, சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குள் சிக்கிக்கொள்ளாமல், உலகத்தை அறியும் ஆர்வத் துடன் வாழ வேண்டும் என்கிறார். காலம் முழுவதும் இந்தியாவையும் பிற நாடுகளையும் சுற்றிவந்த ராகுலுக்கு இதைச் சொல்லும் தகுதி முழுமையாக உண்டு.

ராகுல சாங்கிருத்யாயனின் பார்வையில், மனித நாகரிக வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் ஊர்சுற்றிகளே!! மனிதன் ஓர் இடத்தில் மட்டுமே தேங்கி வாழ்ந்திருந்தால் உலக அறிவும், பண்பாட்டுப் பரிமாற்றமும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகியிருக்காது என்று அவர் வலியுறுத்துகிறார்.

1958 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விரு தையும், 1963 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷண் விருதையும் பெற்றார். அவரது ஆழ்ந்த புலமைக்காக, அவர் வாழ்ந்த காலத்திலேயே ‘மகாபண்டிதர்’ என அழைக்கப்பட்டவர்.

இத்தகைய புகழுக்குச் சொந்தக்காரராகிய பொதுவுடைமைவாதி ராகுல சாங்கிருத்யாயனின் சிலை மேற்கு வங்கத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அங்கு நிகழும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்கவேண்டி இருக்கிறது.

1994 ஆம் ஆண்டு, ராகுல சாங்கிருத்யாயனின் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்கத்தின் ராணிகஞ்சில் ராகுல சாங்கிருத்யாயனின் 9 அடி உயரச் சிலை நிறுவப்பட்டது.  ‘ராகுல சாங்கிருத் யாயன் பிறந்தநாள் விழாக்குழு’ நிறுவியிருந்தது.

ராகுல சாங்கிருத்யாயன் சிலை இடிக்கப்பட்டது இது குறித்து, அவரது மகன் பேராசிரியர் ஜேதா சாங்கிருத் யாயன்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

‘‘இரண்டு நாள்களுக்கு முன்பு, காலை சுமார் 11.30 மணியளவில், ராணிகஞ்சிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ராணிகஞ்சில் அமைந்திருந்த ராகுலஜியின் சிலை அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். என் மறைந்த தந்தையின் மதிப்பிற்குரிய அறிவுசார் பாரம்பரியத்திற்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரமான அவமதிப்பு குறித்து குடும்பத்தின் சார்பில் நான் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தற்போது எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வை மன உறுதியை இழக்காமல் தாங்கிக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியுடன் மிக நெருக்கமாக இந்தச் சம்பவம் தொடர்புடையது. அதனுடன் சேர்ந்து, சங் பரிவார் என் தந்தையின் வாழ்க்கை, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, ஹிந்தி இலக்கியத்திற்கு அவர் செய்த மகத்தான சேவை ஆகிய அனைத் தையும் பின்னுக்குத் தள்ளுகிறது.

இந்தச் சம்பவத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது. ஏனெனில் இது என் தந்தையின் நினைவாக வைக்கப்பட்ட சிலை. திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக அது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய நேரத்தில், அவருடைய மகன் என்ற முறையில் மக்கள் என்னிடம் பேச விரும்பும்போது, என் தந்தைக்கான கடமையிலிருந்து நான் விலக முடியாது. கடுமையான சிறுநீரக நோய்க்கு டயாலிசிஸ் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்று காரணம் கூறி நான் ஒதுங்கவும் முடியாது.

ராணிகஞ்சில் ராகுலஜியின் நினைவுச் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதல், வலுவான நிலக்கரி தொழிலாளர் சங்கங்கள் பலவீனப்படுத்தப்படுவது, ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் புதிய ‘ஆற்றல் பெருமுதலாளிகள்’ (Energy Barons) வசம் ஒப்படைக்கும் முயற்சி ஆகியவை அனைத்தும் காவி அலைக்கான இன்னொரு வெளிப்பாடு.

திரிபுராவில் காவி ஆட்சி வந்தபின் லெனின் சிலை இடிக்கப்பட்டதுபோலவே, என் தந்தையின் சிலையும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதைத்தான் விரும்புகிறது’ என்பதன் அடையாளம். ராகுலஜி வாழ்நாள் முழுவதும் எதற்காகப் போராடினாரோ, எதைப் பற்றி எழுதினாரோ, குறிப்பாக ஹிந்தி பேசும் பகுதிகளில் இன்றும் இளைஞர்களை ஊக்குவித்து வரும் அவரது சிந்தனைகளை முற்றிலும் அழிக்கவே அவர்கள் விரும்புகின்றனர். ‘ராகுல்’ என்பதற்குப் பதிலாக ‘ராம்’ என்பதைக் கொண்டு வரவும், முற்போக்குச் சிந்தனையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும் திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது.

நான் தற்போது 72 வயதுடைய ஒரு சாதாரண மனிதன். என் உடல்நிலையும் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள் அமைப்புகள், ஹிந்தி இலக்கிய உலகம், விழிப்புணர்வு மிக்க அறிவுஜீவிகள் ஆகியோரிடம் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்க்கும் அளவுக்கு எனக்கு தனிப்பட்ட வசதியோ இயக்கங்கள் போன்ற பரந்த அணுகுமுறையோ இல்லை.

எனவே, அவர்களின் ஒற்றுமை, நல்லெண்ணம், அறிவார்ந்த பொறுப்பு ஆகியவற்றை நம்பியே நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தக் கொடூரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்” என அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க உழைத் தவர் ராகுல சாங்கிருத்யாயன். அறிவு என்றால்
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அறவே ஆகாது. அதன் விளைவு தான் ராகுலஜியின் சிலை உடைப்பு!

– கவின் மலர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *