கிருஷ்ணகிரி, மே 20- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டா நிலத்தை அளவீடு செய்ய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், தனக்குச் சொந்தமான பட்டா நிலத்தை அளவீடு செய்யக் கோரி வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். ஆனால், நிலத்தை அளக்க அங்கிருந்த அரசு ஊழியர்கள் அவரிடம் பெருந்தொகையை லஞ்சமாகக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்ததால், அவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் ஊழியர்கள் அலட்சியப்படுத்தி, அலைக்கழித்துள்ளனர்.
“நாள்கணக்கில் அலைந்தும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.”
தீக்குளிப்பு
நீதி கேட்டு பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாற்றுத்திறனாளி, நேற்று முன்தினம் (18.5.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்துள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், உடனடியாகத் தீயை அணைத்து அவரை மீட்டனர்.
80 விழுக்காடு பலத்த தீக்காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, லஞ்சம் கேட்டு அலைக்கழித்த அரசு ஊழியர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு அலுவலகத்தில், ஒரு மாற்றுத்திறனாளி லஞ்சக் கொடுமையால் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
