புதுக்கோட்டை, மே 19- தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் நாள்தோறும் அரங்கேறி வரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தொடர் குற்றச் சம்பவங்களால் பொது மக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கி யுள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்துள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.
பேச முடியாத மாற்றுத் திறனாளிப் பெண்
புதுக்கோட்டை மாவட்டத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வழக்கம் போல தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில நபர்கள் அந்தப் பெண்ணை வழிமறித்து, ஆள்நடமாட்ட மற்ற பகுதிக்கு இழுத்துச் சென்று கொடூரமாகக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவரைப் காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்ற வாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப் பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை
கடந்த சில நாட்க ளாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச்செயல்களால் பெண்களுக்கும் சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“பகல்-இரவு பாராமல் தொடரும் இதுபோன்ற கொடூர நிகழ்வுகளால், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட் டுள்ளது.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
