ஜெனீவா, மே 18 கரோனாவால் உலகம் கண்ட பேரழிவுக்குப் பிறகு, ஆப்பிரிக்காவின் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் புதிய திரிபுடன் வேகமாகப் பரவி வருகிறது.
காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, உகாண்டாவில் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 30 உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) பன்னாட்டு அக்கறைக்கான பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கரோனா பெருந்தொற்று, சுனாமி வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக 90% நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் உலக நாடுகள் ஒற்றுமையாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது உலகமே கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
காங்கோவின் இதூரி என்ற மாகாணத்தில் ‘பண்டிபுகியோ’ என்ற புதிய எபோலா வைரஸின் புதிய திரிபு வீரியத்துடன் பரவி வருகிறது. அந்த நாட்டில் மட்டும் 500க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொற்று அண்டை நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா வரை பரவியுள்ள நிலையில், அங்கும் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த தொற்று காரணமாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பை பன்னாட்டுச் சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
