நெதர்லாந்திலிருந்து மீட்கப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் காட்சிப்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!

சென்னை, மே 18- நெதர்லாந்து பிரதமரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப் படவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்பேடுகளை’ தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அதன் தாய்மண்ணான நாகப்பட்டினத்தில் நிரந்தர மாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (17.5.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆனைமங்கலம் செப்பேடு

நாகப்பட்டினத்தில் கடாரத்து மன்னரான சிறீமாற விஜயோத்துங்க வர்மனால் அவரது தந்தையின் நினைவாக “சூடாமணி வர்ம விகாரை” என்ற பவுத்த மடாலயம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மடாலயத்தின் பராமரிப்பிற்காக, மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் “ஆனைமங்கலம்” என்ற கிராமத்தை வரியில்லா நிலமாக வழங்கினார். இதற்கான சான்றான ஆனைமங்கலம் செப்பேடுகள், 18ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்திலிருந்து நெதர்லாந்து நாட்டிற்கு அபகரித்துச் செல்லப்பட்டன.

மீட்பு நடவடிக்கை

“இந்தச் செப்பேடுகள் சாதாரண தகடுகள் அல்ல; ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்து மகத்துவம், கடல் கடந்து விரிந்த அரசியல்-நட்பு மற்றும் தமிழர் பண்பாட்டின் சாட்சிகளாக விளங்குபவை.” என்று ஜவாஹிருல்லா புகழாரம் சூட்டியுள்ளார்.

300 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகளை நெதர்லாந்து பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கவிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இச்செப்பேடுகளை மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன்படி, ஒன்றிய அரசிடமும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அனைவரின் கூட்டு முயற்சிக்கு பலன் கிடைத் துள்ளது.

ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் நாகப்பட்டினம் தான் என்பதை உணர்ந்து, ஒன்றிய அரசு அதனை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் உரிய முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்களை அதன் தாய்மண்ணான நாகப்பட்டினத்திற்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில், இச்செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் நிரந்தர மாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தங்கம் தென்னரசு

ஆனைமங்கலம் செப்பேட்டை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது: நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும்.

இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *