சென்னை, ஜூலை 19 சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப் பிரிவில், பொதுமக்கள் நாள்தோறும் தங்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது, அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்துக் காப்பாற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் காவல்துறைப் பாதுகாப்பு நேற்று (18.7.2026) முதல் கணிசமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
