நடந்து முடிந்த தமிழ்நாடு தேர்தலில் ஜோசப் விஜய்யின் வெற்றி திராவிடக்கொள்கைக்கும், கடந்த அய்ம்பது ஆண்டுகால அதன் செயல்பாட்டிற்கும் கிடைத்த ஒருவகையான வெற்றியே! திராவிடத்தால், இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்கப்பெற்று, ஜாதி, மத, வேறுபாடின்றி அனைவரும் உயர்ந்திருக்கும் நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில், முந்தைய திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் இத்தகைய வளர்ச்சியை யதார்த்தமாகக் கருத ஆரம்பித்துவிட்டனர். திராவிட இயக்கத்தின் கடுமையான உழைப்புத்தான் இவ்வளர்ச் சியின் காரணி என்பது இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் பலதரப்பட்ட வளர்ச்சி இலக்குகள் அனைத்திலும் முதலிடம் என்ற நிலையை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? நீர் பாய்ச்சியவர் யார்? இன்று அறுவடையின் பயனை அனுபவிக்கும் இக்கால இளைஞர்களுக்கு தெரியவில்லை; அறியாமல் போனது ஏன்?
இன்றைய அரசியல் மாற்றம் திராவிடத்தின் தொய்வு என்று கூறுகிறவர்கள், ஒரு சாரர் அறிவிலிகள், மற்றொரு, சாரார், ‘அய்யோ, அனைத்தும், அனைவருக் கும் கிடைக்கிறதே’ என்று வயிற்றெரிச்சல் படும் மக்கட் பதர்கள். அறிவிலிகளுக்கு நாம் பாடம் எடுக்க வேண்டும். திராவிடக் கொள்கையையும், திராவிட வரலாற்றையும் இளைஞர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற இணையத்தின் மூலம் கொண்டு செல்லுதல் இன்றியமையாத காலத்தின் கட்டாயமும், நமது கடமையும் ஆகும்.
மக்கட் பதர்களை, திராவிட முறம் கொண்டு பிரித்து, ‘மனிதகுல எதிரிகள் யார்’ என்று அடையாளம் காட்ட வேண்டும்.
திராவிடம் என்பது ஒரு மனிதநேய சித்தாந்தம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் விரிந்த, உயர்ந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த திராவிடக்கொள்கையை வளரவிடக்கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சிலர் காலம் காலமாகத் திராவிடக் கொள்கையைத் திரிபுவாதம் செய்து வருகின்றனர். திராவிடம் எந்த ஒரு மக்கட்பிரிவிற்கும். இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல. அனைவருக்கும் உரிய பங்கு அனைத்திலும் கொடுப்பதே திராவிடம்.
– லெ. தமிழ்ச்செல்வன்,
அரியக்குடி
