சென்னை, மே 16- இந்தியாவில் கடந்த 4 ஆண்டு களாக மாற்றமில்லாமல் இருந்துவந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று (15.5.2026) அதிரடியாக உயர்த்தியுள்ளன. லிட்டருக்கு 3 ரூபாய்க்கும் அதிகமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ. 100.84-லிருந்து ரூ. 3.14 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 103.98-க்கு விற்பனை செய்யப் படுகிறது.
டீசல் விலை: ஒரு லிட்டர் ரூ. 92.39-லிருந்து ரூ. 3.11 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 95.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வுக்கான பின்னணி
இந்தியாவில் பன்னாட்டு கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக 5 மாநிலத் தேர்தல் நடைபெற்று வந்ததால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப் படாமல் இருந்தது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 1,600 கோடி முதல் ரூ. 2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வந்தது.
நிதி நெருக்கடி: தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில், இந்த கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே ஒன்றிய அரசின் அனுமதியோடு இந்த விலை உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால் பன்னாட்டு சந்தையில் ஏற்படும் சிறிய விலை மாற்றம் கூட இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உயர்ந்த பணவீக்கம்!
ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங் களின்படி, ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் (WPI) 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் இல்லாத மிக அதிக அளவிலான பணவீக்கமாகும். கடந்த மார்ச் மாதம் இந்த பணவீக்கம் 3.88 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய எரிபொருள் விலை உயர்வு காரணமாக, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 9 சதவீதத் தைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கமும் (CPI) 5.5 சதவீதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 70 சதவீதத்திற்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து சாலை மார்க்கமாகவே நடைபெறுகிறது. தற்போது டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளதால் லாரிகளின் வாடகை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
இதன் நேரடித் தாக்கமாக பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
