திருவனந்தபுரம், மே 27- கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடியில், கடையில் அரிசி திருடியதாகக் கூறி பழங்குடியின இளைஞர் மது அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாலக்காடு மாவட்டம் அட்டப் பாடி அருகே உள்ள முக்காலி பகுதி யைச் சேர்ந்தவர் மது பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் அரிசி திருடியதாகக் கூறி, ஒரு கும்பல் மதுவைக் கட்டி வைத்துச் சரமாரியாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித் திருந்தது. முனீர் என்பவருக்கு 3 மாத தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தண்டனையை எதிர்த்தும், தண்டனையை அதிகரிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரின் தண்டனை, தற்போது ஆயுள் தண்டனையாக உயர்த்தப் பட்டுள்ளது.
3 மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை பெற்றிருந்த முனீரின் தண்டனை 1 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்ற வாளியான உசேன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மதுவின் தாய் மல்லிக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018இல் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் தண்டனையை ஏற்றி வழங்கி பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு நீதியை நிலைநாட்டியுள்ளது.
