சென்னை, மே 11- அதிமுகவில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 34 பேர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளனர்.
அவர்களது ஆதரவுக் கடிதத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்க சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலில் அதிமுக 47 இடங் களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது. பல தொகுதிகளில் 3ஆம் இடத்துக்கு சென்றதுடன், பலர் டெபாசிட்டையும் இழந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கையெழுத்து வேட்டை
இதனால், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தோல்விக்குப் பொறுப்பேற்று பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் இதர சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 34 பேர் சி.வி.சண்முகம் தலைமையில் தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத் துள்ளனர்.
முன்னதாக, நேற்று (10.5.2026) காலை பழனிசாமி தலைமையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், சி.வி.சண்முகத்தின் நடவடிக்கை தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில், சி.வி.சண்முத்துடன் சமாதானப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பழனிசாமி தரப்பில், சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியதில், ‘‘பழனிசாமி சரியான கூட்டணி அமைக்கவில்லை.
வேட்பாளர்களுக்கு கட்சி நிதியும் போதிய அளவு வழங்கவில்லை. கட்சியின் தோல்விக்கு அவர்தான் காரணம். அதனால், அவர் பதவி விலக வேண்டும். தவெகவுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று சி.வி.சண்முகம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
அதிமுக சட்டமன்ற உறுப் பினர்கள் 34 பேரின் ஆதரவுக் கடிதமும் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றில் 2 பங்கு, அதாவது 32 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சித் தாவல் சட்டம் பாயாது என சட்ட ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. 34 பேரின் ஆதரவுக் கடிதத்துடன், முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்க சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப் படுகிறது.
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.
