மேற்கு வங்கத் தேர்தல் களம் குடியரசுத் தலைவர் வருகையும், திட்டமிடப்பட்ட வாக்கு வங்கி அரசியலும்

3 Min Read

ஹவுரா, மே 05  தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு பல்வேறு ஜனநாயக –-அரசியலமைப்புச் சட்ட, மரபு விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் மேற்கு வங்காளத்தை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்று தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருந்த பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது

மேற்கு வங்கச் சட்டப் பேரவைக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கொண்ட மேற்கு வங்கப் பயணம், வெறும் அரசுமுறைப் பயணமாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது வட மற்றும் மத்திய வங்காளத்தின் தேர்தல் கணக்குகளை மாற்றியமைக்கும் ஓர் உத்தியாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்டது.

மொழி மாற்றமும் அடையாள அரசியலும்

டார்ஜிலிங், பிகான்நகர் மற்றும் கோஷைபூர் போன்ற பகுதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு பழங்குடியின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இந்தப் பகுதிகளில் உள்ள இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்களின் தாய்மொழியான சந்தாலி அல்லது மாநில மொழியான வங்காளத்தை விட, ஹிந்தியை முதன்மை மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மாநிலத்தின் அடையாளமாக இருக்கும் வங்க மொழியே இப்பகுதி மக்களுக்கு ஓர் அந்நிய மொழியாக மாறி வருவது, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் “ஒரே நாடு, ஒரே மொழி” எனும் கொள்கைக்குச் சாதகமான சூழலை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கூட்டணி மற்றும் பிரிவினைவாத ஆதரவு

“ஒரே நாடு, ஒரே தயாரிப்பு” என்று முழங்கும் ஒன்றிய அரசு, டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் கூர்க்காலாந்து அமைப்பின் ஆதரவை வெளிப்படையாகவே கோரியது. இதன் விளைவாக, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா போன்ற உள்ளூர் அமைப்புகளின் ஆதரவு, பாஜகவிற்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடமும்  பழங்குடியின மக்களிடையேயும் செல்வாக்கு மிக்க ஓர் ஆளுமையாகக் குடியரசுத் தலைவர் முன்னிறுத்தப்பட்டார். அரசியலமைப்புச் சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் பதவி என்னும் மாண்புக்கும் மாறான இந்த நடவடிக்கை அரசியல் பார்வையாளர்களின் எதிர்ப்பையும் முகச் சுழிப்பையும் ஏற்படுத்தியது. அங்குள்ள வாக்கு வங்கியைப் பெரிதும் பாதித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் நீக்கம்
எஸ்.அய்.ஆரின் தாக்கம்

பாக்டோக்ரா மற்றும் சிலிகுரி போன்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் எஸ்.அய்.ஆர். முறை மூலம் சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. (இதை Selective Inclusion & Removal என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது).

நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பான்மை யானோர் திரிணாமுல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத்தலைவரின் வருகை மூலம் பழங்குடியின வாக்குகளைத் திரட்டுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தன் எதிரணியின் வாக்குகளை பா.ஜ.க. நிர்வாக ரீதியாகக் குறைத்தது மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  குடியரசுத்தலைவரின் வருகை ஏற்படுத்திய உணர்ச்சிப்பூர்வமான தாக்கம் மற்றும் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட நுணுக்கமான மாற்றங்கள் ஆகியவற்றால், மம்தா தனது பாரம்பரியமான வடக்கு மற்றும் மத்திய வங்காளத் தொகுதிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இத்தகைய மாற்றியமைப்பதன் மூலமும் மேற்கு வங்கத்தின் தேர்தல் களம் தற்போது ஒரு மோசமான திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்தச் செயல்பாடுகள் தேர்தலில் நேரடியாக எதிரொலித்துள்ளதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. வடக்கு, மேற்கு வங்கப் பகுதியான டார்ஜிலிங்கில் (கூர்க்காலாந்து)  மொத்தமுள்ள 54 இடங்களில் பாஜக 47 இடங்களை வென்றுள்ளது.

முர்ஷிதாபாத், நதியா மற்றும் பிர்பூம் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மேற்கு வங்கப் பகுதியில் உள்ள 65 இடங்களில் 51 இடங்களில் பா.ஜ.க. வென்றுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தம் 206 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

குறிப்பாக வடக்கு வங்காளத்தில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜக 90%-க்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது. இதுதான் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசைவிட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிகம் பெற பா.ஜ.க.வுக்குப் பயன்பட்டுள்ளது.

– சரவணா ராஜேந்திரன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *