ஹுனான், மே 5- சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா: சொகுசுக் கப்பலில்
ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் பலி
வெர்டே, மே 5- நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசு சுற்றுலாக் கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர்; மேலும் மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆர்ஜென்டீனாவிலிருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே தீவு நாட்டை நோக்கி 150 பயணிகளுடன் வந்த ‘எம்.வி.ஹோண்டியஸ்’ கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் நெதர்லாந்தைச் சேர்ந்த இணையர்கள் என்றும், மற்றொருவர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எலிகளின் எச்சம், சிறுநீர், உமிழ்நீர் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவும் இந்த ஹண்டா வைரஸ், மனிதர்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
காய்ச்சல், தசை வலி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தொடங்கி, இதயம் மற்றும் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 40 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது கேப் வெர்டே கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளைத் தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம், கப்பலில் உள்ள மற்ற பயணிகளின் ஆரோக்கிய நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களையும், அறிகுறி உள்ள மற்ற பயணிகளையும் விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கேப் வெர்டே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
