அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் நிழற்படம்
வாசிங்டன், ஏப். 29– அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாள் ஜூலை 4, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. சுதந்திரம் 250 (Freedom 250) என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட் டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக விழா ஒருங்கிணைப்பு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. சிறப்பு நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகள் போன்ற மாபெரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அமெரிக்கா அடைந்துள்ள முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப் படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அதிபர் டிரம்ப்பின் நிழற்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய சிறப்பு பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரையறுக்கப்பட்ட பதிப்பு முறையில் வெளியிடப்படும் இது, வாசிங்டன் பாஸ்போர்ட் ஏஜென்சியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய 100 டாலர் நோட்டுகளில் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை சரிவால் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்து!
சீனா, ஏப். 29- சீனாவின் மக்கள்தொகை 6 கோடி வரை குறையும் என Rhodium Group ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. இது பிரான்சுக்கு இணையான மக்கள்தொகை சரிவு என்றும், சீனாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த செழிப்பான கடலோர மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலீஷ் கால்வாயை கட்டுமரப் படகில் கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள்
லண்டன், ஏப். 29– இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இங்கிலீஷ் கால்வாயை, பழங்காலத்தைப் போலவே கட்டுமரப் படகுகள் மூலம் கடக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நவீன மோட்டார் படகுகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ‘செயில் லிங்’ (SailLink) என்ற நிறுவனம் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது.
17 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாய்மரப் படகில் ஒரே நேரத்தில் 12 பேர் வரை பயணிக்கலாம். ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு 110 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கால் வாயைக் கடக்க சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
எஞ்சின் சத்தம் மற்றும் கரும்புகை இல்லாத இந்தப் பயணம் குறித்து பயணிகள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பசுமைப் போக்குவரத்து முயற்சிகள் பன்னாட்டு அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன
இந்தோனேசிய
ரயில் விபத்தில் 14 பேர் பலி
பெகாசி, ஏப். 29– இந்தோனேஷியாவில் ஜகார்த்தா நகருக்கு வெளியே பெகாசிதிமூர் நிலையத்திற்கு வெளியே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனத்தின் மீது பயணிகள் ரயில் மோதியது. அந்த பாதையில் வந்த மற்றொரு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அந்த ரயில் மீது நீண்ட தூரம் செல்லும் ஆர்கோ ப்ரோமோ அங்க்ரெக் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், பயணிகள் ரயில், இருந்த 14 பேர் பலியாகினர். மேலும் 84 பேர் காயமடைந்தனர்.
சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு
பெய்ஜிங், ஏப். 29- தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் அமைந்துள்ள கின்சோ நகரில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரில் உள்ள பெரும்பாலான தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் (27.4.2026) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 270மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ளப்பெருக்கில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மூழ்கின.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் சிக்கியிருந்தவர்கள் மிதவை படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியிலேயே கனமழை பெய்து உள்ளது அரிதானது என்றும் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
