கோட்டை என்பது ‘திராவிட மாடலு’க்கு உரியதாகத்தான் அமையும்; மற்றவர்கள் கட்டுவது என்பது மனக்கோட்டைதான்!
புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்!
சென்னை, ஏப்.29 ‘‘கோட்டை என்பது ‘திராவிட மாடலு’க்கு உரியதாகத்தான் அமையும்; மற்றவர்கள் கட்டுவது என்பது மனக்கோட்டைதான்! புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (29.4.2026) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள். கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமறு:
தந்தை பெரியாரால் ‘புரட்சிக்கவிஞர்’ என்று
பெயர் சூட்டப்பட்டவர்!
தந்தை பெரியார் அவர்களால், புரட்சிக்கவிஞர் என்று பெயர் சூட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களுடைய 136 ஆவது பிறந்த நாள் – பெருவிழா – திருவிழா!
இந்த நாளை, ஒரு நாள் அல்ல – ஒரு வாரமாக, தமிழ் வாரமாக, செம்மொழித் தமிழ் சிறந்தோங்கி வளருவதற்கு இலக்கியத்தின் மூலமாகத் தொண்டறம் செய்த புரட்சிக்கவிஞர் அவர்களின் பிறந்த நாளை – ஒரு வாரம் தமிழ் வளர்ச்சி நாளாகக் கொண்டாடவேண்டும் என்று உலகத் தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஆண்டு உத்தரவிட்டார், ஆணையிட்டார்.
‘தமிழ் வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிப்பு!
அதன்படி, உலகம் முழுவதும் இன்றைக்குப் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பிறந்த நாளை ‘தமிழ் வளர்ச்சி நாளாக’க் கொண்டாடுகிறார்கள்.
அதற்காக ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில், புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்ன கருத்து, உலகம் தழுவிய ஒரு கருத்தாகும்.
‘‘புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’’ என்றார்.
அது இன்றைக்கு எவ்வளவு தேவை என்பதை உலக மக்கள் உணருகிறார்கள்.
அதுபோலவே, ‘‘எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம்’’ என்று சொன்னார்.
புரட்சிக் கவிஞர் காண விரும்பிய
புது உலகை அமைக்க சூளுரைப்போம்!
அதுபோல, இன்றைக்குச் சமூகநீதி எல்லோராலும் கோரப்படக்கூடிய, போராடக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காண விரும்பிய புது உலகத்தை அமைக்க நாம் சூளுரைப்போம்!
போரினால், உலக மக்கள் அத்துணை பேரும் இன்றைக்கு அவதியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
போரில்லா புது உலகத்தை அமைப்பதற்கு கருத்துக் களம் கண்ட புரட்சிக்கவிஞர் வாழ்க!
புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்!
செய்தியாளர்: மே 4 ஆம் தேதி வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
தமிழர் தலைவர்: தேர்தல் முடிவுகள் தெளிவாக இருக்கும். மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அதுவரை, அவரவர் கனவு காணுவது, மே 3 ஆம் தேதி இரவோடு முடிந்துவிடும் என்றாலும், ஊடகங்கள் மிகப்பெரிய அளவிற்கு, அவரவர்களுக்குத் தோன்றி யதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது தொடர்ந்து மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்.
கோட்டை என்பது ‘திராவிட மாடலு’க்கு உரியதாகத்தான் இந்த முறையும் அமையும். மற்றவர்கள் கட்டுவது என்பது மனக்கோட்டைதான்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
