புதுவை மாநிலத்திலும் ஹிந்தித் திணிப்பா?

3 Min Read

ஒன்றிய பிஜேபி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் ‘மும்மொழி’ என்ற பெயரால் ஹிந்தியை (சமஸ்கிருதத்தை)த் திணிப்பதுதான்.

என்ன ஆட்டம் போட்டாலும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் மட்டும் அது எடுபடாது. காரணம் ஹிந்தி என்ற ஒரு மொழிமீது உள்ள வெறுப்பல்ல – அதன்  பின்னணியில் உள்ள பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு என்பதுதான்.

என்னென்ன அழுத்தங்களை எல்லாம் கொடுக்க முடியுமோ, அவ்வளவையும் செய்து பார்த்து விட்டனர். கல்விக்காக முறைப்படி கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்க மறுத்து விட்டனர்.

இப்பொழுது தேர்தல் நடந்து முடிந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தங்கள் வேலையைக் காட்டி விட்டனர். ஏன், தேர்தலுக்கு முன்னதாக இதனைச் செய்திருக்க வேண்டியது தானே?

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை  ஒட்டிய மண்ணின் குணம்தான் வீசும்.

ஒன்றிய பிஜேபி அரசின் ஹிந்தி மொழித் திணிப்பால் ஏற்படப் போகும் பின் விளைவைப் போகப் போகத்தான் அனுபவிக்கும்.

ஹிந்தியைத் திணிப்பதோடு நிற்கவில்லை. புதுவை மாநிலத்தின் மண்ணோடு கலந்த பிரெஞ்சு மொழியை வெளியேற்றியிருக்கிறது. பிரெஞ்சுக் கலாச்சாரம் என்பது ஆதிக்க நோக்குடையதல்ல; அவர்களின் சகோதரத்துவ உணர்வோடு ஒன்றியது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் பிரெஞ்சு பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  (MOU – Memorandum of Understanding) கொண்டுள்ளன. இதன் மூலம் மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் மேற்படிப்புகள் கிடைக்கின்றன.

புதுச்சேரி மாநிலத்திற்கும் பிரெஞ்சு மொழிக்கும் உள்ள கலாச்சார தொடர்புக்கு ஒரு நீண்ட,  மிக ஆழமான வரலாற்றுப் பின்னணி உண்டு. அது இன்றும் புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் ஒரு தனித்துவமான கலாச்சாரக் கலவையாகும்.

  1. வரலாற்றுப் பின்னணி

1673-ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி, வாலிகண்டபுரத்தின் அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்று புதுச்சேரியில் வணிக மய்யத்தை நிறுவியது. பிரான்சுவா மர்த்தன் என்பவரின் முயற்சியால், ஒரு சாதாரண மீனவ கிராமம் ஒரு முக்கிய துறைமுக நகரமாக மாறியது.

பல அய்ரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் (டச்சு, ஆங்கிலேயர்) கை மாறி மாறி வந்தாலும், நீண்ட காலம் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இது 1954 வரை நீடித்தது.

  1. மொழி மற்றும் மக்கள் தொடர்பு

புதுச்சேரியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினர், தமிழ் மற்றும் பிரெஞ்சு என இரு மொழிகளையும் கலாச்சாரங்களையும் தங்கள் அடையாளமாகக் கொண்டுள்ளனர்.

1954-இல் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தபோது, அங்கு வாழ்ந்த மக்களுக்குத் தங்கள் விருப்பப்படி இந்திய அல்லது பிரெஞ்சு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, இன்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலர் பிரெஞ்சு குடியுரிமையுடன் பிரான்சுக்கும் புதுச்சேரிக்கும் இடையே வலுவான பிணைப்பைப் பேணி வருகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில், குறிப்பாகச் சில பகுதிகளில் மக்கள் பிரெஞ்சு மற்றும் தமிழ் கலந்த ஒரு விதமான மொழியைப் பேசுகிறார்கள். சில தமிழ் சொற்கள் பிரெஞ்சு உச்சரிப்பிலும், பிரெஞ்சு சொற்கள் தமிழ் வழக்கிலும் கலந்துள்ளன.

  1. கலாச்சார மற்றும் கட்டடக்கலைத் தாக்கம்

புதுச்சேரியின் ‘வெள்ளை நகரம்’ பகுதி, பிரெஞ்சு நகரக் கட்டமைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இன்றும் உள்ளது. செங்குத்தான சாலைகள், காலனித்துவ காலத்துக் கட்டடங்கள் மற்றும் பெரிய தோட்டங்களைக் கொண்ட வீடுகள் இதற்குச் சான்று.

பிரெஞ்சு பேக்கரிகள், கஃபேக்கள் மற்றும் பிரெஞ்சு உணவு முறைகள் புதுச்சேரியின் கலாச்சாரத்தில். கலந்துள்ளன. இது புதுச்சேரியை இந்தியாவின் ‘சிறிய பிரான்ஸ்’ என்று அழைக்க வைக்கிறது.

முதல் உலகப் போரில் பிரெஞ்சு ராணுவத்திற்காகப் போரிட்ட இந்திய வீரர்களைப் போற்றும் வகையில் கட்டப்பட்ட ‘பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம்’ (French War Memorial) போன்ற இடங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று உறவைப் பறைசாற்றுகின்றன.

  1. கல்வி மற்றும் கலை

இன்றும் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் பள்ளிகள், ‘அலியான்ஸ் பிரான்சே’ போன்ற கலாச்சார மய்யங்கள் மற்றும் நூலகங்கள் மூலம் பிரெஞ்சு மொழி மற்றும் கலைத் தொடர்புகள் உயிர்ப்புடன் பராமரிக்கப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், புதுச்சேரி என்பது பிரெஞ்சு மற்றும் இந்திய பாரம்பரியங்கள் ஒன்றோடொன்று கலந்து, ஒரு தனித்துவமான ‘இந்தோ-பிரெஞ்சு’ அடையாளம்  நிலை பெற்றுள்ள ஓர் இடமாகும். இது வரலாற்றையும் நவீனத்தையும் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலமாக உள்ளது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, பிரஞ்சு மொழியைக் கல்வித் திட்டத்திலிருந்து நீக்கி, பார்ப்பனிய, சமஸ்கிருத கலாச்சாரத்தின் சின்னமான ஹிந்தியைத் திணிக்க முயல்வதன் பாரதூர விளைவுகளை ஒன்றிய பிஜேபி அரசு சந்திக்க நேரும் என்று எச்சரிக்கின்றோம்.

‘புதுவை மாநிலப் பிரச்சினை தானே என்று தமிழ்நாடு கண்டும் காணாமல் போய்விடும்’ என்று நினைத்தால் அதைவிட அவர்களுக்கு ஆபத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளட்டும்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *