ஒரு நீதிபதி இப்படிப் பேசலாமா?

3 Min Read

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மாணவர்கள் பண்பாட்டு வேர்களுடன் இணைக்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NLUs) மாணவர்கள் ‘மனுஸ்மிருதி’ ‘அர்த்த சாஸ்திரம்’ போன்றவற்றை கட்டாயமாக படிக்க வேண்டுமென்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“சட்டக் கல்வியை இந்தியமயமாக்க மனுஸ்மிருதி மற்றும் பிற மத நூல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கூறியிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களில் இருந்து விலகி, மீண்டும் பழைய வர்ணாசிரம முறைக்கே பின்னோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.

கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மைகளை, வெறும் “கலாச்சார வேர்கள்” சார்ந்த ஒரு நெருக்கடியாக சுருக்குவது, ஜாதி, வர்க்கம் மற்றும் நீதிக்கான அணுகல் ஆகியவற்றின் எதார்த்தமான கள உண்மைகளை மறைப்பதாக அமைகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி – அதுவும் தலைமை நீதிபதியாக இருக்கக் கூடியவர், இப்படி ஒரு குறிப்பிட்ட மத நூல்களைப் பாடத் திட்டத்தில் சேர்க்கச் சொல்லுவது பெரும் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ‘மதச் சார்பற்ற’ (Secular) என்ற சொல் நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

1976ஆம் ஆண்டு 42 ஆவது சட்டத்தின் மூலமே ‘‘மதச் சார்பற்ற’’ என்ற தத்துவச் சொல் சேர்க்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் 28ஆவது விதி கல்வி நிறுவனங் களில் மதபோதனைகள் செய்யத் தடை விதிக்கப்பட் டுள்ளது.

கற்றறிந்த ஒரு நீதிபதிக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாதிருக்கும் என்று கருத முடியாது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிருதியாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் குருநாதர்
எம்.எஸ். கோல்வால்கரின் கருத்தாகும் (“Bunch of Thoughts”)

மனு நீதி என்பது ஒரு குலத்துக்கொரு நீதி பேசுவ தாகும். பிறப்பிலேயே பிராமண,சத்திர, வைசிய, சூத்திரர் என்ற வருணபேதத்தைக் கடவுள் பிர்மாவே ஏற்படுத்தினார் என்று கூறுவதுதான் மனுதர்ம சாஸ்திரமாகும்.

‘‘அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார்’’ (மனுதர்மம் அத்தியாயம் 1  – சுலோகம் 87).

இப்படிப் பிறப்பால் பேதம் பேசும் மனுதர்மத்தை
மாணவர்களுக்குச்சொல்லிக்கொடுக்க வேண்டுமா?

‘மனுஸ்மிருதி’ என்பது – பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1772ஆம் ஆண்டில் வாரன் ேஹஸ்டிங்ஸ் ‘‘இந்துக்களுக்கு இந்துச் சட்டம்’’ என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். மனுஸ்மிருதி மொழி பெயர்க்கப்பட்டு, நீதிமன்றங்களில் பயன்பாட்டுக்கு வந்தது. 1772 முதல் 1860 வரை பிரிட்டீஷ் காலத்தில் குற்றவியல் தவிர்த்து, இந்துத் தனி நபர் சட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 1955–1956 வரை இந்துத் திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட காலம்வரை தொடர்ந்தது.

‘‘சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் குறித்தும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்’’ என்று தலைமை நீதிபதி சொல்லியிருக்கிறார்.

அர்த்தசாஸ்திரம் மக்களிடம் இருந்து பணத்தைப் கறக்க பல தந்திரங்களைச் சொல்கிறார்.

எடுத்துக்காட்டாக ‘ஒரு ‘புனித’மான இடத்தில் அல்லது சிலையிலிருந்து தானாகப் பால் வடிகிறது அல்லது ஏதோ ஓர் அற்புதம் நடக்கிறது என வதந்தியைப் பரப்பி, அதைப் பார்க்க வருபவர்களிடம் காணிக்கை வசூலித்தல், ஒற்றர்கள் மூலம் ஊரில் ஒரு திருவிழா அல்லது பெரிய சடங்கு நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசுக்குக் கொண்டு வருதல் போன்ற – மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் தந்திரோபாயங்களைச் சொல்லிக் கொடுக்கும் நூல்தான் ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற (சாணக்கியன் என்னும்) கவுடில்யரால் எழுதப்பட்ட நூலாகும்.

இவற்றை எல்லாம் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமா? விரிவாகக் கூறாவிட்டாலும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தேசிய பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி  ‘‘மதச் சார்பின்மைக்கு விரோதமான மதம் சார்ந்த நூல்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்குமாறு ஒருவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கொண்டு கூறலாமா?’’ என்ற நியாயமான, சட்ட நீதியான கேள்வியைக் கேட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *