பாட்னா, ஏப். 25- பீகார் அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செயல் தலைவருமான தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிதிஷ்குமார்
பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று (24.4.2026) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேஜஸ்வி கூறியதாவது:
“நிதிஷ் குமார் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பதை பாஜ விரும்பாது என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். 2030-ஆம் ஆண்டு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் நீடிப்பார் என்று பாஜ கூறி வந்தது. ஆனால், தற்போது அவரது அரசியல் வாழ்க்கையை பாஜ முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.”
எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அரசியல் நிலைப்புத்தன்மை என்பது மிக அவசியம். ஆனால், பீகார் மாநிலம் இதில் தனித்துவமானது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் பீகார் அய்ந்து வெவ்வேறு அரசாங்கங்களைக் கண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். “லாலு பிரசாத் யாதவின் மாணவரான சாம்ராட் சவுத்ரி முதலமைச்சரானதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஆழமாக வேரூன்றியவர்களிடம் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.என்று ஆர்ஜேடி செயல் தலைவர்.தேஜஸ்வி கூறியுள்ளார் நிதிஷ் குமார் கூட்டணியை மாற்றிய பிறகு நடைபெற்ற இந்த விவாதம் பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

