ஒன்றிய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது!
தமிழ்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருப்பது, திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் எழுச்சி அடையாளமான கருப்புக்குக் கிடைத்த சிறப்பு வெற்றி!
சிதம்பரம், ஏப்.18 ஒன்றிய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருப்பது, திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் எழுச்சி அடையாளமான கருப்புக்குக் கிடைத்த சிறப்பு வெற்றி! என்று செய்தியாளர்களிடையே கூறினார், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று (17.4.2026) தேர்தல் பரப்புரைக்காக சிதம்பரத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமறு:
ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உங்களை எல்லாம் சிதம்பரத்திலே சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைக்கு குறிப்பாக, ஜனநாயகம் தோற்கவில்லை; இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும்; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும் – அந்த இடத்திலே மனுதர்மத்தை அமரச் செய்வதற்கான முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று அவசர அவசரமாக மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்ற கட்டத்திலேயே மூன்றே நாள்கள் அவகாசத்தைக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி அரசு மூன்று மசோதாக்களைக் கொண்டு வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அந்த மூன்று மசோதாக்களிலே நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு என்பதற்கான மசோதா ஒன்று. ஏற்கெனவே அது நிறை வேற்றப்பட்டுவிட்ட மசோதா. அம் மசோதா எப்போது அமலாகும் என்பதுதான் கேள்வி.
அவசர கோலத்தில்
அள்ளி தெளித்ததைப் போல…
மற்ற இரண்டும் பொதுவாக தொகுதி மறு வரையறை செய்யக்கூடிய சட்டம் என்றும், பொதுவாக நாடாளு மன்றத்தினுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்ற ஒரு சட்டம். இந்த மூன்று மசோதாக்களையும் ஒரே நேரத்திலே திடீரென்று அவசர கோலத்தில் அள்ளி தெளித்ததைப் போல, கொண்டு வருவதற்கு நியாயமான காரணங்கள் என்ன என்று சொல்ல எதுவும் இல்லை.
ஒரே நோக்கம், இந்தத் தேர்தலிலே, எப்படியாவது இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலேயும் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். ஆகவே, அம் மாநிலங்களை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்கான உள்நோக்கத்தோடு இந்த மூன்று மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன.
மூன்றில், இரண்டு பங்கு
ஆதரவு இருக்க வேண்டும்!
ஏற்கெனவே அதை நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதிலே கவனமாகக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொன்று என்னவென்றால், இதில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இதில் போய் இணைக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால், அம்மூன்றும் தனித்தனி. ஆனால், அம்மூன்றையும் இணைத்தார்கள். இதனுடைய உள்நோக்கம் என்னவென்று சொன்னால், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றால், அரசியலமைப்புச் சட்டத்தினுடைய விதிமுறைப்படி, சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது; அவைக்கு வந்தவர்களில், மூன்றில், இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும். அந்தக் கணக்கெல்லாம் அவர்களுக்குத் தெரியும். தெரியாமல் அவர்கள் இம்மசோதாக்களைக் கொண்டு வரவில்லை.
நீண்ட நாள்களாக விவாதம் செய்யக்கூடிய மிக முக்கியமான பிரச்சினையில், திடீரென 24 மணி நேரம், 48 மணி நேரத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்கும் வகையில் இம்மசோதா கொண்டு வரப்பட்டது. அப்படி வந்த மசோதா இன்று தோற்கடிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்.சினுடைய
உள்நோக்கம்!
ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தே அவர்கள் இறங்கினார்கள். தொகுதி மறுவரையறை, நாடாளுமன்றத்தினுடைய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்ற இரண்டு மசோதாக்களை தனியாகக் கொண்டு வருவதற்குப் பதிலாக, வேண்டுமென்று முன்னாலேயே நிறைவேற்றப்பட்டுவிட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்னிலைப்படுத்தினார்கள். ஏன் என்றால், அதை முன்னிலைப்படுத்தித் தோற்றுப் போனால், ‘‘பாருங்க, இவர்கள் எல்லாம் மகளிருக்கு ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொல்றாங்க. மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க மாட்டேன் என்று சொல்றாங்க’’ என்று சொல்லி, இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். மோடி அரசினுடைய திட்டமாகும். அந்தத் திட்டம்தான் இப்பொழுது நிறைவேறி இருக்கிறது. அது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய உள்நோக்கம்! அதற்காகத்தான் தொகுதி மறுவரையறையுடன் சேர்த்து கொண்டு வந்தார்கள்.
குழந்தையை மனித கேடயமாகப்
பயன்படுத்துவது மாதிரி….
அதனை, எல்லாத் தலைவர்களும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். நாங்களும், தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதற்கு நான் உதாரணம் சொல்லும்போது கூட ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். அது என்னவென்றால், திரைப்படங்களில் ஒரு காட்சியைப் பார்த்திருப்போம். வில்லனைத் தேடிக்கொண்டு காவல் துறை போகும்போது, வில்லன், ஒரு குழந்தையை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவான். அப்படி குழந்தையை மனித கேடயமாக பயன்படுத்துவது மாதிரி , தொகுதி மறுவரையறை மசோதாக்களுடன், மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் காட்டினார்கள்.
ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களுக்கு அதிக இடங்களை கொடுத்து, ஹிந்தி பேசாத மாநிலங்களில் தொகுதிகளைக் குறைப்பது; தென்மாநிலங்களுக்கு அதிக இடமில்லாமல் ஆக்குவது; அதே நேரத்தில் வடகிழக்கு, கிழக்கு இவற்றிற்கும் இடமில்லாமல் ஆக்குவது என்ற திட்டத்தையும் முன்னால் வைத்துக்கொண்டு, அம் மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டால், உடனே ஒரு பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார்கள்.
பிரச்சாரம் செய்வதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார்கள்!
‘‘பார்த்தீர்களா, மகளிருக்கு எதிராக இருக்கக்கூடியவர்கள்தான் இந்தியா கூட்டணியினர்; மகளிருக்கு எதிராகத்தான் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்; மகளி ருக்கு எதிராகத்தான் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஓட்டளித்தார்கள்’’ என்று இந்தியா கூட்டணிக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம். வெற்றி பெற்றால், ஏதோ ஒரு பெரிய வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லியிருப்பார்கள். தோற்றால், உடனே அதைத் தங்களுக்குச் சாதகமாகவும், மற்றவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் நினைத்தார்கள். அதிலே அவர்கள் தோற்றுப் போனார்கள்.
மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி இது – சாதாரணமானதல்ல! பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், 543–லயே கொடுக்கலாம். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்? வெறும் நாடாளுமன்றத்தைக் கூட்டி, அதை முதலில் செய்கிறோம் என்று முன்பு சொன்ன மோடி அரசு, இன்றுவரையில், அதை எப்போது அமல்படுத்துவோம் என்பதைப் பற்றியே சொல்லவில்லை. 2029 ஆம் ஆண்டிலும் அது நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குறிதான் என்று எதிர்கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் கேட்டிருக்கிறார்கள்.
மனுதர்மப்படி, அடுக்கு ஜாதி முறையில் பெண்கள் மிகக் கீழானவர்கள்; ‘நமோ சூத்திரர்கள்!’
இந்த 33% இட ஒதுக்கீட்டை, 543–லேயே நடை முறைப்படுத்த நாளைக்கே உத்தரவு போடலாம். ஆர்டினன்ஸ் (Ordinance) கொண்டு வரலாம். இப்பொழுது நடைபெற விருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் வரலாம். ‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’ – அவர்களுடைய நோக்கம் அதுவல்ல. ‘நாரி சக்தி’ என்று சும்மா சொல்வார்களே தவிர, அவர்களுடைய நோக்கம் மனுதர்மப்படி, பெண்கள் அடுக்கு ஜாதி முறையில், மிகக் கீழானவர்கள்; ‘நமோ சூத்திரர்கள்’ என்று மனுதர்மம் சொல்லுகிறது.
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகத்தான், நம்முடைய முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். தேர்தல் நேரத்தில் நம்முடைய கவனம் எல்லாம், தேர்தல் பணிகளில் இருக்கும்; எதிர்த்து ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற ஒரு சூட்சுமம் உள்ளடங்கி இருந்தது.
நம்முடைய உணர்வுகளை
அறவழியிலே காட்டினோம்!
எங்களுக்குத் தேர்தல் முக்கியம்; அதே நேரத்தில தமிழ்நாட்டில், சுயமரியாதை முக்கியம்; மாநில உரிமைகளும் மிக முக்கியம் என்ற அடிப்படையிலேதான், தெளிவாக நேற்று (16.4.2026) நம்முடைய உணர்வுகளை அறவழியிலே காட்டுவதற்காக, உடனடியாக எல்லோரும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று சொன்னார்கள்.
பிறகு கருப்புச் சட்டமாக இருக்கக்கூடிய இந்தச் சட்டத்தை, கருப்புச் சட்டை அணிந்துகொண்டு, அந்த மசோதாவின் நகலைக் கொளுத்துகிறோம் என்று சொல்லி, கொளுத்தி சாம்பலாக்கினோம்.
இன்றைக்குக் கிடைத்திருக்கிற வெற்றிதான் மிக முக்கிய மானது. ஆகவே, தமிழ்நாடா? டில்லியா? என்று கேட்ட நேரத்தில், டில்லி தோற்றுப் போயிருக்கிறது; தமிழ்நாடும், ஜனநாயக சக்திகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மறுவரையறை என்று சொல்லிக்கொண்டு, 850 இடங்கள் வரையில் கொண்டு போகலாம் என்று அவர்கள் சொல்லுவதினுடைய உள்நோக்கம் என்ன என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவருமே இணைந்து, இம்மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள்!
இப்பொழுது இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மிக முக்கியமாக இந்த விதிமுறைகளில், 50 சதவீத ஆதரவு இருந்தாலும், வெற்றி பெற்றிருந்தாலும், ‘ஆர்டினரி மெஜாரிட்டி’ – சாதாரண மெஜாரிட்டி மூலமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது. மூன்றில் இரண்டு பகுதி இருக்கவேண்டும். எனவே அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் செய்த அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டாட்சி என்பதை நீக்க வேண்டும்; இப்பொழுது இருக்கிற நாட்டாட்சி – கூட்டாட்சியை மாற்றி, அதிபர் முறை என்ற பெயரால், சர்வாதிகார காட்டாட்சியை உண்டாக்குவதற்காகதான் அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. அனைவருமே இணைந்து, இம்மசோதா வைத் தோற்கடித்திருக்கிறார்கள். இது தெரிந்தேதான், ‘‘நாங்கள் தோற்று போவோம் என்று தெரிந்துதான் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கடைசி நேரத்தில், அமித்ஷா போன்றவர்கள் கொஞ்சம் ஜாடை காட்டக்கூடிய அளவுக்கு, வாக்கெடுப்புக்கு முன்னால் சொல்லி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிராகவே
இது வெடித்துவிட்டது!
இதை அவர்கள் தெரிந்தே செய்திருக்கிறார்கள். தங்களு டைய பிரச்சாரத்துக்கு ஓர் உத்தியாக ஆக்கியிருக்கிறார்கள். பெண்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இதில் அவர்களுடைய முதல் குறிக்கோள்– இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்தாயிற்று! அது என்னவென்றால், தமிழ்நாட்டில் அவர்களால் வர முடியாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். மேற்கு வங்காளத்தை எப்படியாவது அதைப் பிடிக்க வேண்டும்; அங்கே மம்தா தலைமையில் இருக்கிற ஆட்சியை மாற்ற வேண்டும் என்று நினைக்கிற போது, பெண்களின் ஆதரவு வாக்குகள் அதிகமான அளவிற்கு இருக்கிறது அந்த அம்மையாருக்கு! ஆகவே, அந்த ஆதரவைக் குறி வைப்பதற்காக, ‘‘பாத்தீங்களா, உங்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவைத் தோற்கடித்துவிட்டார்கள். இவர்களுக்கு நீங்கள் ஆதரவு காட்டலாமா?” என்று, வருகிற 23ஆம் தேதி, 29 தேதி தேர்தல் என்று இரண்டு கட்டமாக அங்கே தேர்தல் நடைபெறவிருக்கிறதே, அதற்குப் பயன்பட வேண்டும் என்று, இதை ஒரு தந்திரமான சூழ்ச்சியாகக் கையாண்டார்கள், ஆனால் அவர்களுக்கு எதிராகவே இது வெடித்துவிட்டது.
தமிழ்நாட்டில் நடப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சி. சற்று நேரத்திற்கு முன்பாகக் கூட தேனியில் முதலமைச்சர் அவர்கள், ‘‘வெற்றி’’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதிலே ஒரு மகிழ்ச்சியான இன்னொரு செய்தி என்னவென்று சொன்னால், இது ஓர் அச்சார வெற்றி! 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்களித்து, மே 4 ஆம் தேதி மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் இரண்டாவது முறை என்பது அறுதியிட்டு இருக்கின்ற நேரத்தில், அந்த வெற்றிக்கு, இது அச்சார வெற்றி! மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்.
செய்தியாளர்: 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதைத் திருமாவளவன் வரவேற்கிறேன் என்று சொல்லி யிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த மசோதாவும் தோல்வி அடைந்திருக்கிறது அல்லவா?
பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு
இட ஒதுக்கீடு இல்லை!
தமிழர் தலைவர்: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்று ஒன்றிய பா.ஜ.க. சொல்லியிருக்கிறதா? பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், எந்த மசோதா தோல்வியடைந்தது என்றால், தொகுதி மறுவரை யறை மசோதாதான். அந்த மசோதாவைக் கொண்டு வந்து, நாடாளுமன்ற எண்ணிக்கையை வட மாநிலங்களில் அதி கப்படுத்தி, தென் மாநிலங்களில் உள்ளவர்களின் குரல் வெளிவரக்கூடாது என்று திட்டமிட்ட அந்தச் சூழ்ச்சிக்குத்தான் தோல்வி.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அவர்கள் அமல்படுத்தினால், அதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். அதில்கூட அவர்கள் ஒரு மிகப்பெரிய தவறைச் செய்தி ருக்கிறார்கள். சமூகநீதியின்படி இட ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சினுடைய இந்தத் திட்டத்தில், அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு கொடுத்து, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் இல்லை. அதற்கு இடமே கொடுக்கவில்லை. சமூகத்தில் அதிகமாக இருக்கிறவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்.
அதை நேற்று (16.4.2026) சிறப்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். தெளிவாகச் சொல்லிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. எதிர்கட்சியில் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். அது போலவே குறிப்பாக, இந்தத் தொகுதியினுடைய (சிதம்பரம்) நாடாளுமன்ற உறுப்பினரும், எழுச்சித் தமிழரு மான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு மாவளவன் அவர்கள், “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக நீங்கள் அதைப் பயன்படுத்துகிறீர்கள்; அதற்கு மாறாக, அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்” என்று சொல்லிருக்கிறார்கள். அந்த ஒரு குறைபாட்டை நீக்க வேண்டும்.
‘ஆப்பசைத்த குரங்கு மாதிரி’
அவர்களுடைய நிலை ஆகிவிட்டது!
33 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக்கவேண்டும் என்றுதான் பெண்கள் கேட்கிறார்கள். அது பெரியார் சொன்ன கருத்து. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 50% இட ஒதுக்கீட்டை உள்ளாட்சித் துறையில், பெண்களுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆகவேதான், பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு யாரும் எதிரானவர்கள் அல்ல. எல்லோரும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்றுதான் சொல்லக்கூடியவர்கள். ஆனால், பி.ஜே.பி.யினர் மாதிரி இதைத் திரிக்க வேண்டும் என்பவர்களுடைய முயற்சியை, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். ஆகவேதான், ‘ஆப்பசைத்த குரங்கு மாதிரி’ அவர்களுடைய நிலை ஆகிவிட்டது.
செய்தியாளர்: ஹிந்தி பேசும் மாநிலங்களில், நாடாளு மன்றத் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்கள்; ஆனால், ஹிந்தி பேசாத தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கிறார்களே?
மகளிருக்கு நல்ல தெளிவு இருக்கிறது!
தமிழர் தலைவர்: அதாவது சதவிகிதத்தில் குறைவு; அதிலேயேகூட மோடி சொன்னது வேறு; அமித்ஷா சொன்னது வேறு. தெளிவான ஒரு விளக்கமே இல்லை. 850 என்று ஒருவர் சொல்கிறார்; அதற்கும் கீழே 816 என்று இன்னொருவர் சொல்கிறார்.
ஆனால், எத்தனை சதவிகிதம் கொடுப்போம் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மேற்கு வங்காளத் தேர்தலிலும், தமிழ்நாட்டுத் தேர்தலிலும், மகளிருக்கான திட்டங்கள் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது; மகளிருக்கு நல்ல தெளிவு இருக்கிறது. மகளிருக்கு வரவேற்பு இருக்கிறது. தி.மு.க. கூட்டணிதான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெல்லும் என்று சொல்லக்கூடிய நிலை தெளிவாக ஏற்பட்டுவிட்டதே, அதை மாற்றுவதற்கு, கடைசி நேரத்தில் ஏதாவது அவதூறுப் பிரச்சாரத்தை செய்ய, ஓர் ஆயுதம் தேவை. அதற்குரிய ஓர் ஆயுதமாகத் தான் இதனை எடுத்தார்கள். அதிலும் அவர்களுக்கு எதிர்விளைவுதான் வந்ததே தவிர, அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை இல்லை. இதன் மூலமாக ‘ஆப்பசைத்து’ மாட்டிக்கொண்டார்கள் அவர்கள்.
செய்தியாளர்: வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.பி.,க்களின் உள்நோக்கம் என்ன?
அவர்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கே
அதில் உடன்பாடு இல்லை!
தமிழர் தலைவர்: சொந்தக் கட்சியிலே கூட இதற்கு உடன்பாடு இல்லை என்றுதான் அதற்கு அர்த்தம். அதில் ஒன்றும் உள்நோக்கம் இல்லை. அங்கேயும் புத்தி சாலித்தனம்தான்.

எனவே, அவர்களுடைய இந்தத் திட்டத்தை, அவர்களுடைய சொந்தக் கட்சியான பா.ஜ.க.வே கூட ஏற்கவில்லை, அவர்களுடைய தேசிய ஜனநாயக முன்னணி யினரே ஏற்கவில்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசு மைனாரிட்டி அரசாங்கம். ஆகவே, அவர்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கே அதில் உடன்பாடு இல்லை. இவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். அதனால்தான் அவர்கள் வாக்களிக்கவில்லை.
இன்று நடந்திருப்பது, தமிழ்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருப்பது, திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் எழுச்சி அடையாளமான கருப்புக்குக் கிடைத்த சிறப்பு வெற்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

