புதுடில்லி, ஏப்.17 ஒன்றிய அரசின் கலாசார அமைச்சகம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தொடர்பான ஊடக விளம்பரங்களுக்காக சுமார் ரூ.76.13 லட்சம் பொதுப்பணத்தை செலவிட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்குக் கிடைத்துள்ள பதிலில் இந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவாக் சங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒன்றிய கலாசார அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
மொத்த செலவு: ரூ.76,13,000
ஒன்றிய கலாசார அமைச்சகம் பயன்பாடு: அச்சு மற்றும் ஊடக விளம்பரங்கள் அரசு சாராத, ஒரு குறிப்பிட்ட மத பின்புலம் கொண்ட ஒரு தனியார் அமைப்புக்கு, வரி செலுத்துவோரின் பொதுப்பணத்தை ஒன்றிய அரசு செலவிட்டது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “அரசு நிதி என்பது பொதுவான நலத்திட்டங்களுக்கும், அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கொண்டாட்டத்திற்கு அரசு பணத்தை பயன்படுத்துவது விதிகளுக்கு உட்பட்டதா?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபகாலமாக ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், குறிப்பிட்ட சில கலாசார நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஆர்.டி.அய். தகவல் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை அமைச்சகம் இன்னும் விரிவாக வெளியிடவில்லை.

