தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன என்ற பாடப்புத்தக விளக்கம் தவறாக இருக்கலாம் என்கின்றனர் பின்லாந்திலுள்ள துர்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். குளோரோபில் ஒளியைப் பிரதிபலிப்பதை விட, இலையின் உள் கட்டமைப்பில் ஒளிச் சிதறல் ஏற்படுவதே இதற்குக் காரணம். இலைகள் மிகக் குறைவாகவே பச்சை ஒளியை பிரதிபலிக்கின்றன. ஆனால், நமது கண்களின் அதிகப்படியான உணர்திறன் காரணமாகவே அவை அடர் பச்சையாகத் தெரிகின்றன.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டை 70 சதவீதம் வரை குறைக்கும் நுண்-மின்னணுச் சில்லை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனித மூளையிலுள்ள நியூரான்களைப் போலவே இச்சில்லு ஒரே இடத்தில் தகவல்களைச் சேமிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வல்லது.
