‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கரூர் ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர்.
அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
அப்போது நீதிபதிகள், “பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்! பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்களான சக்திவேல், செந்தில், வேலு ஆகியோர் நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இது சாமி கும்பிடுவதா, கூடாதா என்பதல்ல பிரச்சினை!
ஒருவருக்குள்ள உரிமை இன்னொருவருக்கு ஏன் இல்லை என்பதுதான் பிரச்சினை!
ஜாதியின் காரணமாகத் தான் இந்த வேறுபாடு என்றால், ஒரு ஜனநாயக நாட்டில், ஒருவருக்கு உள்ள உரிமை இன்னொருவருக்கும் உண்டு என்பதை மறுப்பது ஜாதியால் என்றால், அந்த ஜாதியைக் கெட்டிப்படுத்தலாமா என்பதுதான் கேள்வி.
ஒரு கால கட்டத்தில் கோயிலுக்குள் குறிப்பிட்ட ஜாதி மக்கள் நுழையக் கூடாது என்ற நிலைகூட இருந்ததுண்டு.
அந்த நிலை இப்பொழுது மாற்றப்படவில்லையா? மாற்றம் என்பதுதானே மாறாதது!
ஒன்றை இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தக் கடவுளும், மதமும் ‘கொழுக்கட்டையும்’ எதற்குப் பயப்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான கேள்வி.
கடவுள்கூட ஜாதிக்குள் அடைக்கப்பட முடியும் என்றால் அது என்ன கடவுள் – மண்ணாங்கட்டி? கடவுளால் தீர்க்க முடியாது… நீதிமன்றத்தால்தான் தீர்க்க முடியும் என்றால்,. யாருக்குச் சக்தி என்ற கேள்வி பகுத்தறிவின் அடிப்படையில் எழ வேண்டாமா!
இந்த இலட்சணத்தில் சர்வ சக்தி வாய்ந்தவர் கடவுள் என்ற கித்தாப்பு வேறு! கடவுளை மற – மனிதனை நினை என்று சொன்னாரே – அறிவு ஆசான் தந்தை பெரியார் – அதனைப் பக்தி மயக்கத்தில் உள்ளவர்களும் எண்ணிப் பார்க்கட்டும்! ஜாதியைக் காரணம் காட்டி கோயில் விழாவில் குறிப்பிட்ட ஜாதியினர் ஒதுக்கப்படுவார்களேயானால், அதற்குக் காரணமானவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (PCR ACT) நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.