மகா பெரியவா பற்றி அறிய வா! (3)

- Advertisement -

நேற்றைய (24.11.2026) தொடர்ச்சி வருமாறு

வர்ண தர்மம்

வைத்யனைப் பார்த்து நாம், “அவனுக்கு ஒருவித மருந்து, எனக்கு வேறுவித மருந்து ஏன்? அந்த ஊர் டாக்டர் செய்கிற சிகித்ஸை மாதிரி ஏன் செய்யக்கூடாது?” என்றால் அவன், “பேசாமலிரு. உனக்கொன்றும் தெரியாது” என்பான். எல்லாவற்றிற்கும் ஜலமே மருந்து என்று ஒருவர் சொல்லுகிறார். அது ஒரு வழி. அது இருக்கட்டும். மலையாளத்தில் நவரக்கழி என்று சொல்லுகிறார்கள். அதற்குக் கடுமையான பத்யங்கள் வேண்டியிருக்கின்றன. வைத்யன் சொல்லுகிறபடி நாம் பத்யம் இருக்கவேண்டியது அவசியந்தான். ஓரு வைத்யனுக்கே வ்யாதி வந்துவிட்டால் அவன் மற்றொரு வைத்யனுடைய சொற்படி கேட்டு மருந்து சாப்பிடுகிறான். உடம்பு வைத்யத்திற்கே இப்படியானால் ஆத்ம வைத்யத்தில் எவ்வளவு நம்பிக்கையும் அந்த வைத்யனிடத்தில் எவ்வளவு பக்தியும் இருக்கவேண்டும்?

மற்ற மதங்களில் உள்ள விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. நமக்குள்ளும் அப்படிப் பொதுவான விதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொதுதர்மம் என்றும் ஸாமான்யதர்மம் என்றும் சொல்லுவோம். எல்லோரும் செய்யவேண்டியது ஸாமான்யதர்மம். தர்மசாஸ்த்ரத்தில் ஸாமான்யதர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவுக்கு ஏற்பட்ட வ்யாதி உடம்பு. அந்த ஆத்ம வ்யாதியைப் போக்கும் வழிகளைச் சொல்லும் சாஸ்த்ரத்தில் எல்லா வ்யாதிஸ்தர்களுக்கும் பொதுவாகச் சில பத்யங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அப்படிச் சொல்லும் ஆத்ம வைத்யர்களுள் மநு என்பவர் பெரிய வைத்யர்

अहिंसा सत्यमस्तेयं शौचमिन्द्रियनिग्रहः ।

एतान् धर्मान् समासेन चातुवंण्येऽब्रवीन्मनुः ॥

(மனுஸ்ம்ருதி, X-63]

என்பது ஓரு ச்லோகம். இதில் நான்கு வர்ணங்கள் என்று சொல்லியிருந்தாலும் வ்யாக்யாநகாரர்கள் அதற்கு ஸகலஜாதிகள் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். சில பேர் வேதத்தில் நான்கே ஜாதிகள் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அது உண்மை அல்ல. தர்ம சாஸ்த்ரத்திலும் வேதத்திலும் உள்ள ஜாதிகள் இப்பொழுது காணப்படவில்லை. யஜுர் வேதத்தில் 3-வது அஷ்டகத்தில் 4-ம் ப்ரச்நத்தில் நரமேத ப்ரகரணத்தில் நரமேதயாகத்தைப் பற்றிச் சொல் லப்பட்டிருக்கிறது. மனிதப்பிறவியிலுள்ள பல ஜாதிகள் அங்கே சொல்லப்படுகின்றன.

பிரதானமானவை நான்கு வர்ணங்கள். இவைகளுக்குள் சில கலப்பு விவாஹங்கள் சாஸ்த்ரங்களாலேயே அநுமதிக்கப்பட்டிருக்கின்றன; சில தடுக்கப்பட்டிருக்கின்றன. அநுமதிப்படி கலந்து உண்டான ஜாதியினர் அநுலோமர் எனப்படுவார்கள். விதியை மீறி உண்டானவர் ப்ரதி லோமர், ப்ரதிலோமர்களுக்கே தீட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி உண்டான பல ஜாதிகளுக்கும் தனித்தனியே தொழில்கள் அமைத்திருக்கிறார்கள். இஹலோகத்துக்கு உபயோகமாக அந்தத் தொழில்கள் வகுக்கப்பட்டன. ஆத்ம க்ஷேமத்துக்காக அவர்களுக்கு உரிய மார்க்கங்களைத் தர்மசாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன.

ஸப்த ஸ்வரங்கள் பல வகையாகச் சேர்ந்து 72 மேளகர்த்தாக்களும் மற்ற இராகங்களும் உண்டானது போல நான்கு வர்ணங்கள் தமக்குள் கலந்து பெருகிய ஜாதிகள் பல. இவ்வளவு விரிவுகளும் அவைகளுக்குரிய தர்மங்களும் கர்மகாண்டத்திற் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஞாநகாண்டத்தில் ஒரு உயர்ந்த அய்க்ய நிலையை அடைந்தால் வேதமே வேதமில்லாமற் போகும். தேவர் தேவரில்லாமற் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கூஜா, டம்ளர், குடம், செம்பு முதலிய பலவற்றில் உள்ள ஜலத்தைக் குளத்திற் கொண்டுபோய்க் கலந்துவிட்டால் வித்யாஸமின்றிக் கலந்துவிடுகிறது. அப்பொழுது கூஜா, டம்ளர் முதலிய வித்யாஸம் கிடையாது. கூஜா, டம்ளர் இவைகளைப் போன்றன காணும் உடல்கள்: ஜலத்தைப் போன்றது உள்ளிருக்கும் அறிவு; குளத்தைப் போன்றது பரம்பொருளென்னும் பேரறிவு; பேரறிவிற் கலந்தபோது வேற்றுமைகள் அற்றுப்போகின்றன.

ஞாநநிலையில் வேதம் வேதமல்லாமற் போகிறது என்று உபநிஷத் சொல்லுகிறது. அந்த உயர்ந்த நிலையில் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனில்லாமற் போகிறான்; சண்டாளன் சண்டாளனில்லாமற் போகிறான் என்று அந்த வேதமே சொல்லுகிறது.

முன்பு நான் கூறிய மநுஸ்ம்ருதியில் பொது தர்மங்கள் பல சொல்லப்படுகின்றன.

ஸத்யம் என்பது ஒரு சிறந்த தர்மம். பொய் சொல்லக்கூடாது. தாயாரிடம் பக்தி, தகப்பனாரிடம் பக்தி, குருவினிடம் பக்தி, தெய்வத்தினிடம் பக்தி, முதலியவை வேண்டும். பிறருக்கு நம்மாலான உபகாரங்களைச் செய்ய வேண்டும். இந்த்ரியங்கள் போனவழி போகாமல் அவற்றை அடக்கவேண்டும். நமக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு மட்டும் செலவு செய்துகொண்டு மிச்சத்தை மற்றவர்களுக்காக உபயோகிக்க வேண்டும். இவைகள் ஸத்யம். ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸை, அஸ்தேயம், அபரிக்ரஹம் என்னும் பேர்களாற் சொல்லப்படுகின்றன.

நமக்கு வேஷ்டி வேண்டுமானால் இரண்டு ரூபாயில் ஒரு வேஷ்டி இருக்கிறபோது, 10 ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்காமல் அந்த 2 ரூபாய் வேஷ்டி வாங்கிக்கொண்டு 4 பேருக்கு 2 ரூபாய் வேஷ்டிகள் வாங்கிக் கொடுக்கவேண்டும். நாம் அதிக விலையுள்ள அன்னபாநங்களை உபயோகிப்பதால் அதிகச் செலவு ஆகிறது. அந்தச் செலவில் கோதுமைக் கஞ்சி செய்து நாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வது அபரிக்ரஹம் எனப்படும். இவற்றைப்போன்ற தர்மங்கள் ஸாமான்யதர்மம் என்று சொல்லப்படும்.

இவைகளைத் தவிர விசேஷ தர்மங்களென்று சில உண்டு. ஈச்வரன் நம்மை எந்த ஜாதியில் எந்தக் குடும்பத்தில் எந்த இடத்தில் எந்த நிலையில் பிறப்பித்திருக்கின்றாரோ அதற்காகச் சில தர்மங் களுண்டு. அவைகளைத்தான் விசேஷ தர்மங்களென்று சொல்வார்கள். ப்ராஹ்மணனாகப் பிறந்ததற்காக அவன் செய்யவேண்டிய சில காரியங்கள் உண்டு. பறையனாகப் பிறந்ததற்காக அவன் செய்யவேண்டிய காரியங்கள் சில உண்டு. அவை வர்ணதர்மம் என்று சொல்லப்படும். பொதுவாக உள்ள தர்மங்களுக்குமேல் ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான சில தர்மங்கள் உண்டு. அந்தத் தர்மத்துக்காக அவர்களுக்குச் சில ஸௌகரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாருக்கும் எல்லாம் பொதுவானவை என்றால் கஷ்டம்தான் அதிகமாகும்.

நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு ஸ்த்ரீ தரிசனத்துக்கு வந்தாள்: வாசலில் இருந்தவன் உள்ளே போகக்கூடாது என்றான். “அவர் உள்ளே போயிருக்கும்போது நான் ஏன் போகக்கூடாது? காங்கிரஸ்காரர்கள் பறையர்களைக் கூடக் கோயில்களிற் போகவேண்டும் என்று சொல்லுகிற இந்தக் காலத்தில் இப்படிச் சொல்லுவது தப்பு. நான் போகத்தான் போவேன்” என்று சொல்லி உள்ளே வந்துவிட்டால். நான் என்ன செய்வது? நான் அநுஷ்டாநம் செய்யும்பொழுது, “ஸ்வாமிகள் எல்லோருக்கும் பொதுத்தானே? ஏன் நாம் இப்பொழுது போகக்கூடாது?” என்று எல்லோரும் உள்ளே புகுந்துவிட்டால் நான் எப்படி அநுஷ்டாநம் செய்வது! டிக்கட் கொடுக்கும் இடத்தில் எல்லாரும் புகுந்துவிட்டால் டிக்கட் கொடுப்பவன் என்ன செய்வான். ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் சில ஸௌகரியங்கள் இருக்கவேண்டும்.

ஒரு பொதுக் குடும்பத்தில் ஒருவருக்கு வ்யாதி உண்டானால் அவருக்குச் சில ஸௌகரியங்கள் செய்து கொடுக்கிறோம். மற்றவருக்கும் அப்படி வேண்டுமென்பது ந்யாயமா? தாயார் தூரமாக இருக்கிறாள். ஒரு தனி இடத்தில் அவள் இருக்கிறாள். “உனக்கு மட்டும் ஏன் தனியிடம்? நானும் வருகிறேன்” என்றால் அது ஸரியா? எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்கு சில ஸௌகரியங்கள் வேண்டுமல்லவா? வாஸ்தவத்தில் அவை ஸௌகரியங்களல்ல. அவர்களுக்குள்ள அந்த விசேஷ தர்மத்தையும் அதற்கு வேண்டிய சில ஸ்வதந்த்ரங்களையும் எல்லோரும் அங்கீகாரம் செய்யவேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல; எல்லோருக்கும் ஸௌக்யம் உண்டாவதற்காகவே அவர்கள் தங்கள் விசேஷ தர்மங்களை அனுஷ்டிக்கிறார்கள்.

ஹ்ருதயத்தில் அன்பும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். சேர்ந்து சாப்பிடுவதால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்து கொண்டு மற்றவர்களுடைய காரியங்களும் நடக்கும்படி செய்து மனஸில் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சேர்ந்து சாப்பிடாவிட்டால் த்வேஷம் என்று நினைப்பது தவறு. மாமனாரிடம் மருமகள் பேசுவதில்லை; மரியாதைக்காக அப்படி இருக்கிறாள்; ஏதாவது த்வேஷம் உண்டா? ஒருவருக்கு ஏதாவது தீட்டு வந்துவிட்டால் அவரோடு சாப்பிடுவதில்லை; அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டா? இந்தமாதிரி உள்ளவைகளை த்வேஷமென்று சொன்னால் சொல்பவர்பால் ஏதோ தோஷம் இருக்கும். நமக்குள்ள மனக் கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தோற்றுகின்றன. எவ்வளவுக் கெவ்வளவு நியமங்கள் அதிகமாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு ஸௌக்யம் அதிகம். பத்யம் கடுமையாக இருந்தால் வ்யாதி சீக்கிரம் குணமாகும்.

நம்முடைய விசேஷதர்மங்கள் அரசனில்லாமலே தேசம் நன்றாக இருக்க உபயோகப்பட்டு வந்தன. க்ராமப் பஞ்சாயத்தில் ஜாதிக்கட்டு குறையக் குறைய அக்ரமங்கள் அதிகமாகின்றன. அதனால் கலஹம் உண்டாகிறது. ஜாதிக் கட்டுப்பாடு இருந்தபோது அக்ரமத்தில் பயம் இருந்தது. ஜாதிப்ரஷ்டம் பண்ணிவிடுவார்கள் என்பதனால் அந்தப் பயம் உண்டாகும். அது குறையவே குற்றங்கள் அதிகமாகின்றன. ஜாதிக் கட்டுப்பாட்டால் குற்றங்களே நடக்காமல் இருந்தன. அரசன் தண்டனை அதிகாரம் செய்யவேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. அவனுடைய வேலை மேன்மேலும் ச்ரேயஸை உண்டாக்குவது தான். இப்பொழுது இவ்வளவு போலீஸ், ராணுவம், ஜெயில் முதலியவை இருப்பதற்குக் காரணம் என்ன? ஜாதிக் கட்டுப்பாடு போனதும் வர்ணா ச்ரமதர்மத்தின் குறைவுமேயாகும்.

மற்ற மதங்களில் எல்லோருக்கும் ஒரே தர்மம் இருக்கின்றது. அதனால்தான் அவைகள் அதிகப் பெருமை அடைந்திருக்கின்றன என்று நாம் நினைக்கலாம். அவை ஒரு ஸமயம் ஒரே அடியாக ஏறி நிற்கும்; ஒரு ஸமயம் இருந்த இடம் தெரியாமற் போனாலும் போய்விடும்.

ஒரு பனைமரம் இருந்தது. அதன்மேல் ஓர் ஓணாண்கொடி கிடுகிடென்று படர்ந்தது. சில மாதத்திற்குள் பனைமரத்திற்குமேல் வளர்ந்து விட்டது. அப்பொழுது அந்த ஓணான்கொடி, ”இந்தச் சில மாதமாக இந்தப் பனைமரம் ஓர் அங்குலம்கூட உயரவில்லையே! இது உபயோகம் இல்லாதது” என்று சொல்லிச் சிரித்தது. பனை மரம் சொல்லிற்று: “நான் பிறந்து பதினாயிரம் ஓணான் கொடியைப் பார்த்திருக்கிறேன். நீ பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொருவரும் இப்படித்தான் கேட்கிறார்கள். எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.” இந்த மாதிரித்தான் நம் மதமும் பிற மதங்களும் இருக்கின்றன.

சரித்ரத்தைப் பார்த்தால் பிற மதங்கள் நம்முடைய தேசத்தில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு காரணத்தை முன்னிட்டுப் பரவியதாகத் தெரிகின்றது. பஞ்சகாலத்தில் ஆசை காட்டுவதால் சில மதங்கள் பரவுகின்றன. ஆகவே அவைகளின் அடிப்படை தத்வமில்லாமற் போகிறது. யுத்த காலத்தில் கலவரத்தால் சில மதங்கள் பரவின. அதிக பலசாலி ஏற்பட்டால் அவை போகவேண்டியவைதான். இப்படி எல்லோருக்கும் ஒரே தர்மமாக இருக்கும் மதங்கள் வீழ்ந்தால் அடியோடு வீழ்ந்துவிடும். தனித்தனி பிரிந்த தர்மங்கள் இருந்தால் அவைகள் தங்களுக்குள்ளே ஒன்றையொன்று காப்பாற்றிக்கொண்டு இருக்கும். ஆகாயக்கப்பல்களில் காற்றுப்பையை (Gas bag) ஒன்றாக அமைத்தார்கன். அப்பொழுது அதில் ஓர் ஓட்டை விழுந்துவிட்டால் முழுவதும் கெட்டுவிடும். அதனால் பின்பு பல பைகளை வைத்தார்கள். ஒன்று ஓட்டையாகிவிட்டாலும் மற்றவைகள் நன்றாக இருக்கும் அந்தப் பைகளெல்லாம் தனித்தனியே இருந்தாலும் ப்ரயோஜனம் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில் ஒன்றையே தாங்கிக்கொண்டே தனித்தனியாக இருக்கவேண்டும். அதுபோல நம்முடைய தர்மங்கள் தனித்தனியே இருந்தாலும் அவற்றுள் ஓர் ஒற்றுமை இருக்கவேண்டும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேறு வேறு விதமான தர்மங்கள் இருந்தாலும் இந்தத் தர்மாநுஷ்டாநங்களில் எல்லோருக்கும் பலன் தான் உண்டாகின்றது. ஸமமான பலமும் உண்டாகிறது.

ஒரு ஸமூஹத்தாரை ஒரே தர்மாநுஷ்டாநத்தோடு இரு என்று புதிதாக ஒரு ராஜாங்கத்தாரால் ஏற்படுத்தி வைக்க முடியரது. அப்படிச் செய்தால் அது நிலைத்துமிருக்காது. ஒருவரை உள்ளே வரக்கூடாது என்று பலகாலம் விலக்கி வைக்கமுடியாது. ஒருவர் ஒரு நாளில் செய்யாமல் தானே பிரிந்து பிரிந்து ஏற்பட்டிருப்பதனாலும், இந்தத் தர்மத்தால் இஹலோக பரலோகங்களில் க்ஷேமம் உண்டாவதால் அநாதிகாலந் தொடங்கி நமது தர்மம் நிலைத்திருக்கிறது. இதர மதங்களைப்போல எல்லோரும் ஒரே தர்மத்தை அநுஷ்டித்திருந்தாலும். அசட்டுத்தனமாகத் தனித்தனி வர்ணத்திற்கேற்பட்ட தர்மங்களை எல்லோரும் அநுஷ்டித்திருந்தாலும் நமது மதம் இவ்வளவு தீர்க்காயுஸாக இருந்திருக்க முடியாது.

வரவு ஒரு வீட்டில் நான்கு ஸஹோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவன் வீட்டில் இருந்துகொண்டு பூஜை செய்கிறான். அடுத்தவன் பண செலவுகளைக் கவனித்துக்கொள்கிறான். மற்றொருவன் வீட்டிற்கு வேண்டிய ஸாமான்களை வாங்கிப் போடுகிறான். கடைசி ஸஹோதரன் வயலுக்குப் போய் வ்யவஸாயத்தைக் கவனித்து வருகிறான். இப்படி வீட்டுக் காரியங்களைத் தனித்தனியே பிரித்து நடத்துதல் எல்லாருடைய க்ஷேமத்திற்காகவே. வீட்டுக் காரியங்களும் ஸுலபமாக நடக்கின்றன.

இப்படி இல்லாமல் எல்லாரும் எல்லாம் செய்ய ஆரம்பித்தால் என்ன ப்ரயோஜனம்? வீணாகக் கஷ்டந்தான் உண்டாகும். குடும்பமே நன்றாக நடக்காது. ஒருவன் செய்வது எல்லோருக்கும் நன்மை தரும். சாதுர்வர்ண்யமும் இப்படித்தான் உள்ளன. ப்ராஹ்மணன் தன் கர்மாக்களைப் பண்ணுவது எல்லாரையும் உத்தேசித்துத்தான். பறையனுடைய குழந்தையின் க்ஷேமத்தையும் அவை குறித்தவைதான். க்ஷத்ரியன் அரசாள்வது எல்லாருடைய நன்மையின்பொருட்டே.. வைச்யன் வ்யாபாரமும் இப்படியே. இந்த நியமத்தால் லோகவ்யவஹாரங்கள் ஸுலபமாக நடைபெறுகின்றன: க்ஷேமம் உண்டாகிறது. இது மாறினால் லோகக்ஷேமமும் மாறும். பூஜையும் கர்மாநுஷ்டாநமும் பண்ண அதிக நியமம் உடையது. அந்த நியமத்தால் யாவரும் பயனை அடைகிறார்கள். மற்றவர்கள் ஒதுங்கி நிற்பது தங்களுக்கும் ஒரு ச்ரேயஸை உண்டாக்கத்தான். நாம் செய்யும் ச்ராத்தத்திற்கு ஒரு நிமந்த்ரண ப்ராஹ்மணன் மடியாக வந்தால், நாம் விழுப்பாக இருந்துகொண்டு, நீ மட்டும் மடியாக இருப்பது என்ன? நான் உன் மேற் படுவேன்” என்று சொல்லி அவ்வாறு செய்தால் யாருக்கு நஷ்டம்? இருவருக்குமல்லவா?

ஆகையால் ஒரே தர்மம் பலவகையாகப் பிரிந்து இருப்பதில் பல அநுகூலங்கள் இருக்கின்றன. நம்முடைய தர்மம் என்றும் சாவாமல் இருக்க, முதலில் வேற்றுமையும் வேண்டும்; ஒற்றுமையும் வேண்டும். ஒரேயடியாகப் பிரிந்தே இருக்கக்கூடாது: ஒரேயடியாகப் பிரிக்கப் பார்க்கிறார்கள்: சிலர் ஓரேயடியாகச் சேர்க்கப் பார்க்கிறார்கள்; இவ்விதமாக இரண்டும் வேண்டாம் என்று தர்மசாஸ்த்ரம் சொல்லுகிறது. நான் அதற்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அதனால் தான் வேற்றுமையும் வேண்டும். ஒற்றுமையும் வேண்டும், ஓரேயடியாக இரண்டும் கூடாதென்று சொல்லுகிறேன்.

தொடாமல் இருப்பது மரியாதையைக் காட்டுமேயொழிய த்வேஷத்தைக் காட்டாது. பலர் ஒன்று சேர்ந்து சாப்பிடுவது அவசியமில்லையென்றும், ஜாதிவிட்டு வேறு ஜாதியில் கலப்புக் கல்யாணம் செய்வது அவசியமில்லை யென்றும், இவைகள் இல்லாமலே ஜனங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடுமென்றும் முக்யமான ராஜீயவாதிகள் கூறுகிறார்கள். தொடுவதும் அவசியமில்லை என்று நான் சொல்லுகிறேன். ஒன்றாகச் சாப்பிட்டுக்கொண்டும். ஒன்றாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டும், ஒன்றாகத் தொட்டுக்கட்டிப் புரண்டுகொண்டும் இருக்கும் மேல்நாட்டு ஜாதிகளில் எவ்வளவு போட்டிகளும் சண்டைகளும் காணப்படுகின்றன.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *