புதுடில்லி, நவ.5- வீட்டு உபயோகப் பொருள்களின் விலை 3 முதல் 7 சதவீதம் வரையிலும், பாரம்பரிய இனிப்புகளின் விலை 15 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்வு, இனிப்புகளின் விலை ஏற்றம் ஆகியவை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் பரிசு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
விழாக் காலங்களில் இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். ஆனால், இப்பொருள்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோகப்பொருள்களின் விலை 3 முதல் 7 சதவீதம் வரையிலும் பாரம்பரிய இனிப்புகளின் விலை 15 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஹையர், எல்ஜி, புளூஸ்டார் நிறுவனங்களின் தயாரிப்புகள் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் டிவி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன.
மூலப்பொருள்களின் விலை உயர்வு, விளைச்சல் பாதிப்பு, சரக்கு கட்டணச் செலவுகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றன.
பண்டிகையையொட்டி விற்பனைகள் அதிகரிக்கும் நேரத்தில் இந்த விலையேற்றமானது நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்த விலையேற்றமானது விழாக் காலங்களில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பரிசு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
