கோவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!

- Advertisement -

அழிவுலகத்தை நோக்கிப் போவதைத் தடுக்க
‘பெரியார் அறிவுலகங்கள்’ எங்கெங்கும் தேவை!

கோவை, நவ.5 அழிவுலகத்தை நோக்கிப் போவதைத் தடுக்க  ‘பெரியார் அறிவுலகங்கள்’ எங்கெங்கும் தேவை! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாரின் 148ஆம்  பிறந்த நாள் விழா – கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க நேற்று (4.11.2026) கோவைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘பெரியார் அறிவுலக’த்தைப் பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத்

தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நெறியாளர்: ‘பெரியார் அறிவுலகம்’ போன்று, இன்னும் எவ்வளவு தேவை?

தமிழர் தலைவர்: அறியாமை எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அதனுடைய கடைசிப் புள்ளி இருக்கின்ற வரையில், பெரியார் அறிவுலகம் உலகமெல்லாம் தேவை.

எனவே, அறியாமையை அகற்றி, மூடநம்பிக்கையை ஒழித்து ஜாதி, மத வெறிகளுக்கு இடமில்லாமல், அனைவரும் சமம்; அனைத்து மக்களும் ஒரு நிறை – உலகம் ஓர் குலம் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகின்ற அவசியமும், அவசரமும் வருகின்ற இடங்களில் எல்லாம், பெரியார் அறிவுலகம் தேவை.

அறிவுலகம் வந்தால்…

‘பெரியார் அறிவுலகம்’ வந்தால், நிச்சயம் அழிவுலகம் வராது. ஆகவேதான், அழிவுலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற சமுதாயத்தை மாற்றி, அறிவுலகத்தை உண்டாக்கவேண்டும். இதை உலகமெல்லாம் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றார். அதற்கு திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியின் சாதனை இது!  அதற்குப் பாராட்டு விழாவாக பெரிய சரித்திர நிகழ்வாக நடைபெறுகிற இந்நிகழ்வுக்காக  கோவைக்கு  வந்திருக்கிறார்.

விடுமுறை நாள்களில்
10 ஆயிரம் பேர் வருகை

கோவைதான், பெரியாருடைய பொது வாழ்க்கை யினுடைய தொடக்கம். அப்படிப்பட்ட கோவையில், ஏழு அடுக்கு கட்டடத்தில், வெறும் நூலகமாக மட்டுமல்ல; அறிவியல் உள்பட எல்லோருக்கும் மிகப்பெரிய அளவிற்கு ஒவ்வொரு நாளும் பாடமெடுக்கக் கூடிய வகையில் ‘பெரியார் அறிவுலகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கோ செல்லக்கூடிய மக்கள், ‘பெரியார் அறிவுலக’த்தை வந்து பார்க்கவேண்டும். ஏற்கெனவே, வார நாள்களில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகிறார்கள்; விடுமுறை நாள்களில் 10 ஆயிரம் பேர் வருகிறார்கள் என்று சொன்னார்கள். இந்த எண்ணிக்கைப் பெருக வேண்டும்; அறியாமை ஒழிய வேண்டும். அறிவுலகத்தால் நாம் வெல்லவேண்டும்.

மனிதன் இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணமே, அறிவுதான். அந்த ‘‘அறிவை விரிவு செய்; அகண்ட மாக்கு, விசாலப் பார்வையில் விழுங்கு உலகத்தை’’ என்று சொன்னார்  புரட்சிக்கவிஞர். அதைச் செய்து காட்டியிருக்கிறார், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சராக திகழ்ந்த திராவிட மாடல் ஆட்சியினுடைய திராவிட நாயகர்.

அறியாமைக்கு இடமில்லாமல், அறிவுலகம் நிச்சயமாக, பகுத்தறிவு உலகம், சுயமரியாதை உலகம் மக்களுக்கு வழிகாட்டும்.

இணைந்தே இருக்கும் கைகள்

இன்றைக்கு அவரோடு நான் பெரியார் அறிவுலகத்தைச் சேர்ந்து பார்த்தேன். என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே அழைத்துச் சென்றார் எல்லா இடங்களுக்கும். வெளியில் வந்து விடைபெறும் வரை என்னுடைய கையை விடவில்லை.

இந்தக் கை, இப்போது பிடிக்கப்பட்டது அல்ல; 1976 ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில், சிறைச்சாலையில் அவர் தாக்கப்பட்டு விழுந்தபோது, தாங்கிப் பிடித்த கை. எனவே, இந்தக் கரங்கள் எப்போதும் பலமாக இருக்கும்.

அறிவால் மனிதர்கள் வாழ்ந்தால், நிச்சயம் இடர்கள் ஏற்படாது.

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

நெறியாளர்: புதிய அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், நீங்கள்?

தமிழர் தலைவர்: புதிய அரசு, பழைய அரசின் திட்டங்களைத் திறந்து வைத்தால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்களை உருவாக்கியவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

அதோடு இரண்டாவதாக, புதிய அரசு என்பது, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய அரசு. ஆகவே, அதனைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

அடிக்கட்டுமானத்தை அமைத்தவர்கள் மீது சங்கடத்தை உருவாக்கக் கூடாது. அந்த அடிக்கட்டு மானத்தின் மூலமாக, இதை மேலும் விரிவாக்கலாம்.

வெறும், ‘மாற்றம், மாற்றம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. கோவையில், ‘பெரியார் அறிவுலகம்’ எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதைப் பார்த்து, இதைவிட சிறப்பான இன்னொரு பெரியார் அறிவுலகத்தை உருவாக்குகிறோம் என்று போட்டி போட்டால், அதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டியாகும்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *