கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளை மறுப்பதா? திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு – அறவழிப் பரப்புரைப் பயணத்துக்குத் தடை விதிப்பது கண்டனத்திற்குரியது! குவியும் கண்டனக் கணைகள்!

6 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆகஸ்ட் 1 திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்ததுடன்  பெரியார் திடலில் காவல்துறையைக் குவித்ததற்குப் பல் வேறு கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்களும், கலைஞர் களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மஜக)

‘நீட்’ தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் சார்பிலே ஏற்பாடு செய்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டு மக்களுடைய கொள்கை முழக்கமாக இருக்கிறது. நீட் தேர்வை ஆதரித்து தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசியல் இயக்கமும் பேச முடியாத நிலையில்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் கோரிக்கையாக இது மாறி, இப்பொழுது இந்தியா முழுக்க முதன்மை கோரிக்கையாகவும் உருமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகமும் ‘இந்த கோரிக்கையை ஆதரிக்கிறோம்’ என்று சொல்லியிருக்கக்கூடிய நிலையிலும், திராவிடர் கழகம் ஜனநாயக வழியில், அமைதி வழியில், முறையான அனுமதியோடு நடத்தவிருந்த அந்த நீட் எதிர்ப்பு பேரணிக்கும் அணிவகுப்புக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது ஏற்கத்தக்கது அல்ல. ஒருபுறம் ‘பெரியாரை தங்களுடைய கொள்கைத் தலைவர்’ என்கிறார்கள்; இன்னொரு புறம் பெரியார் திடலைச் சுற்றிலும் காவல்துறையை குவித்து ஓர்  அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். திராவிடர் கழகத்தினர் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் ஜனநாயக வழியிலே தொடர்ச்சியாக தங்களுடைய நடவடிக்கைகளை, போராட்டங்களை, எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையிலே தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுப் பூர்வமான ஒரு விவகாரத்தை மய்யமாக வைத்து அவர்கள் சார்பில் நடத்தவிருந்த நீட் எதிர்ப்பு பேரணியை தடுத்திருப்பதன் மூலமாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் முதலமைச்சரும் என்ன செய்தியை தமிழ்நாட்டுக்கு சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்க விரும்புகின்றோம். அதாவது எல்லோருக்கும் நல்லவர்கள் என்று  ஒருபக்கம் ‘நீட்டை எதிர்க்கிறோம்’ என்றும்; இன்னொரு பக்கம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களையும் பேரணிகளையும் அனுமதி மறுத்து தடுக்கிறார்கள் என்று சொன்னால், யாரை திருப்திப்படுத்த இத்தகைய வேலைகளை செய்கிறார்கள் என்பதை நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.

இவ்வாறு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

 ஜைனுல் ஆபிதீன் (ம.ம.க.)

‘நீட்’க்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த திராவிடர் கழகத்தின் தலைமையகமான பெரியார் திடலை முற்றுகையிடும்  காவல் துறைக்கு வன்மையான கண்டனங்கள்.

தமிழ்நாடு அரசு நீட் தொடர்பாக தனது நிலைப் பாட்டை தெளிவாக விளக்க வேண்டும். புறவாசல் வழியாக பாஜகவுடன் உறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.” இவ்வாறு வழக்குரைஞர்  ஜைனுல் ஆபிதீன் (தலைமை நிலைய செயலாளர், ம.ம.க.)  கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் 

நீட் தேர்வை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட இருந்த பரப்புரைப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தேர்தல் அரசியலுக்குள் வராமல், பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்து, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து களத்தில் போராடி வரும் தமிழ்நாட்டில் மதிப்பிற்குரிய மக்கள் இயக்கமான திராவிடர் கழகத்தின் சமூகப் பொறுப்புணர்வுமிக்க அறவழிப் பரப்புரைப் பயணத்தைத் தடுப்பது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகவே மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.

மேலும், பேச்சுரிமை, கருத்துரிமை என்பது அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகளை மறுத்து பரப்புரைக்குத் தடை விதிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசானது திராவிடர் கழகப் பரப்புரைப் பயணத்திற்கு விதித்த தடையை நீக்கி, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் (தலைமை நிலையச் செயலாளர், ம.நீ.ம.) கூறியுள்ளார்.

இரா.அதியமான் (ஆதித் தமிழர் பேரவை)

‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இடஒதுக்கீட்டையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர்_கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர்_பாசறை சார்பில் 30.07.2026 முதல் 02.08.2026 வரை தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி உரிய முறையில் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, கருத்தைப் பரப்பும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை ஜனநாயக உரிமைகளை இவ்வாறு நிர்வாக அதிகாரத்தின் பெயரில் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத சனநாயக விரோத நடவடிக்கையாகும்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதாகவும், சமூக நீதிக்கு எதிரான உயர்ஜாதி இடஒதுக்கீட்டை விமர்சிப்பதாகவும் கூறி வரும் நிலையில், அதே கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு சமூக இயக்கத்தின் பரப்புரைப் பயணத்திற்கு அனுமதி மறுப்பது இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடாகும்.

கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிப்பதும், சமூகநீதி சார்ந்த அரசியல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் ஒரு சனநாயக அரசின் அடிப்படைப் பொறுப்பாகும். ஆனால், இன்று காவல்துறை நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவு, சமூகநீதி இயக்கங்களின் குரலை ஒடுக்க முயலும் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது.

‘நீட்’ தேர்வு ஏழை, கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் அநீதித் திட்டம். அதைப் போலவே உயர் ஜாதி இடஒதுக்கீடு சமூக நீதியின் அடித்தளமான வரலாற்று ஒடுக்குமுறையை மறைத்து, முன்னேறிய சமூகங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் அரசியல் கருவியாகும். இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது குற்றமல்ல; அது சமூக நீதிக்கான ஜனநாயகக் கடமையாகும்.

எனவே, திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். கருத்துரிமையைப் பறிக்கும் காவல்துறையின் தடையாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், இது சமூக நீதி இயக்கங்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறையாகவே தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் கூறியுள்ளார்.

முஹம்மது ஷிப்லி (இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

திராவிடர் கழகத்தின் ‘நீட்’ எதிர்ப்பு பரப்புரைக்கு விஜய் அரசு தடை விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச் செயலாளர் A. முஹம்மது ஷிப்லி” கண்டனம் தெரிவித்துள்ளார்.

வே.மதிமாறன்

பொதுசொத்துக்களுக்குப் பிரச்சினை இல்லாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசைவிட அதிகக் கவனம் கொண்ட ஆசிரியர் வீரமணி அவர்கள் தலைமையிலான திராவிடர் கழகப் பேரணிக்கே இந்த அரசில் அனுமதி இல்லை.

திமுக ஆட்சியின்போதே பொதுசொத்துக்களைச் சேதப்படுத்திய பொதுமக்களுக்குத் தொல்லைத் தந்த, 41 பேர் நசுங்கி மரணிக்கக் காரணமான தவெகவின் நிகழ்ச்சிகளை மட்டும் அனுமதிப்பது ஏன்?

இவ்வாறு எழுத்தாளர் வே. மதிமாறன் கூறியுள்ளார்.

ரோகிணி – தமுஎகச

‘நீட்’ தேர்வுக்கு எதிராக கடந்த பத்து ஆண்டு காலமாக  தமிழ்நாட்டில் நாம் போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மன்றத்தில் கடந்த தி.மு.க. அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். நீட் தேர்வு தாள் கசிவினால் கொந்தளித்து அண்மையில் ‘சிஜேபி’ என்ற கட்சி மிகப் பெரிய தன்னெழுச்சியான ஒரு பெரிய போராட்டம் நடந்தி இருக்கின்றனர். அதில் இளைஞர்கள், மாணவர்கள் சங்கங்கள், பெரியவர்கள், எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என எல்லாருமே கலந்து கொண்டார்கள்.அறவழியில் போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு எனவும், போரட்டங்களை தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சமயத்தில் அறவழிப் போராட்டமாக,  திராவிடர் கழகம் சார்பாக பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு  நீட் தேர்வுக்கு எதிராக, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கு எதிராக நடக்கவிருந்த பரப்புரையை தமிழ்நாடு காவல்துறை தடுத்திருப்பது சரியல்ல. எனவே இந்த அறவழிப் போராட்டத்திற்கு பாதுகாப்புத் தரவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். அறவழியில் போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது அதைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ரோகினி (தமுஎகச) கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *