தொல்லியல் என்பது மாந்தரின் கடந்த காலத்தைப் பற்றிய கல்வி மட்டுமன்று; அது வரலாற்று உணர்வையும், அறிவியல் நோக்கையும், ஆய்வுத் திறனையும், பண்பாட்டுப் பொறுப்புணர்வையும் வளர்த்தெடுக்கும் ஒரு சிறந்த கருவியாகும்.
தமிழ்நாடு செழுமையான தொல்லியல் மரபுச் செல்வத்தைக் கொண்டு திகழ்கிறது. தொன்மையான குடியிருப்புகள், பெருங்கற்காலச் சின்னங்கள், கல்வெட்டுகள், கோயில் கட்டடக்கலை, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகங்கள், மரபார்ந்த கைவினை மய்யங்கள் எனப் பலவும் இதில் அடங்கும்.
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொற்ப னைக்கோட்டை, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற இடங்கள், பண்டைய சமூகங்கள், தொழில்நுட்பங்கள், வணிகத் தொடர்புகள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தொல்லியலைக் கல்வியில் ஒருங்கிணைப்பதன் வழியாக, மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தவும், இந்த மரபுச் செல்வத்தைப் பொறுப்புடன் பாதுகாப்பதை உறுதி செய்யவும் இயலும்.
பள்ளிக் கல்வியில் தொல்லியல்
மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப, தொல்லியல் கருத்துகள் படிப்படியாக அறி முகப்படுத்தப்பட வேண்டும். தொடக்கப்பள்ளி மாணவர்கள், உள்ளூர் வரலாறு, மரபார்ந்த கலைகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் மரபிடங்கள் பற்றி கதைகள், படங்கள் மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகள் வழியாகக் கற்றுக் கொள்ளலாம். நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மட்பாண்டங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், பழங்காலக் குடியிருப்புகள் மற்றும் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றி ஆராயலாம். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்கள், நிழற்படங்கள், நிலப்படங்கள் மற்றும் எழுத்து வழிக் குறிப்புகள் அடங்கிய ஆவணப்படுத்தும் செயல்திட்டங்களை ஆசிரியர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளலாம். தொல்லியலை வரலாறு, புவியியல், கணக்கியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்களுடனும் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு, அறிவியல் காலக் கணிப்பு, பொருள்களின் பகுப்பாய்வு, நிலப்பரப்பு மாற்றங்கள், அளவீடுகள் மற்றும் எண்ம நிலப்படமாக்கல் ஆகியவற்றை மாண வர்கள் புரிந்துகொள்ள உதவும். தமிழ்நாடு அரசு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் தொடர்புடைய துறைகளுக்கும், நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களுடனும் வயதுக்கேற்ற தொல்லியல் கற்றல் தொகுதிகளை உருவாக்குவதற்கு வழிகாட்ட வேண்டும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொல்லியல்
கல்லூரிகளில் இந்தியத் தொல்லியல், தமிழ்நாட்டின் பாரம்பரியம், கல்வெட்டியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு (பாதுகாப்பியல்), பாரம்பரிய சுற்றுலா, எண்ணிமத் தொல்லியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விருப்பப் பாடங்கள் (Elective Subjects), சான்றிதழ் படிப்புகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். வரலாறு, புவியியல், கட்டடக்கலை, கணினி அறிவியல், சமூக அறி வியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் துறைகளுக்கிடையிலான பல்துறைக் கற்றலில் (Interdisciplinary Learning) பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற வேண்டும். பல்கலைக்கழகங்கள் புவித்தகவல் அமைப்பு (GIS), தொலையுணர்வு (Remote Sensing), ட்ரோன் ஒளிப்பட அளவையியல் (Drone Photogrammetry), முப்பரிமாண மாதிரியாக்கம் (3D Modelling), தரையூடுருவும் ரேடார் (Ground-Penetrating Radar), அறிவியல் முறைக் காலக்கணிப்பு (Scientific Dating), ஆய்வகப் பகுப்பாய்வு, எண்ணிம ஆவணப்படுத்தல், செயற்கை நுண்ணறிவு உதவியுடனான தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் தொல்லியல் ஆய்வை வலுப்படுத்த வேண்டும். குறைந்த வளங்களைக் கொண்ட கல்வி நிறுவனங்களுக்குப் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய பொது ஆய்வகங்களும், பயிற்சி வசதிகளும் உதவியாக இருக்கும். அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறு வனங்களில் முன்னோடித் தொல்லியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யங்களை (Pilot Centres) நிறுவ வேண்டும்; மதிப்பீட்டுக்குப் பின் வெற்றிகரமான மாதிரிகளை விரிவுபடுத்த வேண்டும்.
அருங்காட்சியகங்கள், களப்பணி மற்றும் சமூகப் பங்கேற்பு
அருங்காட்சியகங்களும் தொல்லியல் களங்களும் வெறும் காட்சிக்கூடங்களாக மட்டுமின்றி, கல்வி மய்யங்களாகச் செயல்பட வேண்டும். பள்ளி–அருங்காட்சியகக் கூட்டுறவுகள், மாவட்ட பாரம்பரிய வரைபடங்கள், இருமொழிக் களப்பணி கையேடுகள், மெய்நிகர் அருங்காட்சியகங்கள், எண்ணிமக் கண்காட்சிகள் ஆகியவை தொல்லியல் அறிவை, குறிப்பாகக் கிராமப்புற மற்றும் தொலைதூர மக்கள் எளிதில் பெற உதவும்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாரம்பரியக் கழ கங்களை (Heritage Clubs) அமைத்து, வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் உள்ளூர் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள், மரபுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த வேண்டும். களப்பணி, நடைமுறையிலுள்ள சட்டங்கள், பாதுகாப்புத் தரநிலைகள், அனுமதி தொடர்பான விதி முறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டே மேற் கொள்ளப்பட வேண்டும். நிறுவப்பட்ட தொல்லியல் சான்றுகளையும் அனுமானங்களையும் முரண்பாடான விளக்கங்களையும் மாணவர்கள் வேறுபடுத்தி அறியக் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பங்கேற்பு பாரம்பரியப் பாதுகாப்புக்குத் துணைநிற்க வேண்டும்; அது அனுமதியின்றி அகழ்வு செய்வதையோ தொல்லி யல் பொருள்களை அகற்றுவதையோ ஊக்குவிக்கக் கூடாது.
வேலைவாய்ப்பும் –
பொருளாதார வளர்ச்சியும்
தொல்லியல் கல்வியானது, கள ஆவணப்படுத்தல், அருங்காட்சியக மேலாண்மை, மரபுச் சின்னங்களை விளக்குதல், எண்ம ஆவணக் காப்பகம், புவித் தகவல் அமைப்பு (GIS), பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பிற்கான வழிகளை உருவாக்கித் தரும். கல்விசார் கற்றலைத் தொழில்சார் வாய்ப்புகளுடன் இணைக்கும் வகையில், உரிய தொழிற்பயிற்சிகள், பயிற்சிப் பணிகள் (Internship) மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொறுப்புமிக்க மரபுசார் சுற்றுலா முன்னெடுப்புகள் வழியாக, உள்ளூர்க் கைவினைஞர்கள், மரபார்ந்த கலைஞர்கள், வழிகாட்டிகள், மகளிர் மற்றும் இளம் தொழில்முனைவோர் ஆகியோரும் பயனடைய முடியும். பாதுகாப்பு, தொழில்முறைத் தரங்கள் மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை உறுதி செய்தபடி, சமூகம் சார்ந்த சுற்றுலா, மரபார்ந்த கைவினைகள் மற்றும் பண்பாட்டு விளக்கங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு விளைவுகளும், திறன் தேவைகளும் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
அரசுக்கான
கொள்கைப் பரிந்துரைகள்
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, தொல்லியல் துறை, பல்கலைக்கழ கங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழ்நாடு தொல்லியல் கல்வி மற்றும் பண்பாட்டு மரபு விழிப்புணர்வு இயக்கம்’ ஒன்றை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கங்களாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வி வளங்களை உருவாக்குதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், மாவட்ட அளவில் வள மய்யங்களை நிறுவுதல், மேற்பார்வையுடன் கூடிய களப் பயணங்களை ஒருங்கிணைத்தல், எண்ம ஆவணப்படுத்தலுக்கு ஆதரவளித்தல் மற்றும் பல்துறை ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை அமைய வேண்டும். உட்கட்டமைப்புச் செலவு களைக் குறைக்கும் வகையில், ஏற்கெனவே உள்ள அருங்காட்சியகங்கள், கல்லூரிகள் மற்றும் நூலகங்க ளைக் கூடியவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனைச் செயல்படுத்துவதை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளலாம்: ஓராண்டுக்குள் தொடக்கநிலைப் பாடத்திட்ட மீளாய்வு மற்றும் முன்னோடித் திட்டங்கள்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் கல்வித் திட்டங்கள் மற்றும் நிறுவனக் கூட்டாண்மைகளை விரிவாக்குதல்; அய்ந்து ஆண்டுகளுக்குள் வெற்றி கரமான முன்னெடுப்புகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துதல். மாணவர் பங்கேற்பு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகள், நிறைவு செய்யப்பட்ட கள ஆய்வுகள், ஆவணப்படுத்தப்பட்ட மரபு வளங்கள் மற்றும் அது தொடர்பான வேலைவாய்ப்பு விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னேற்றம் அளவிடப்பட வேண்டும்.
அரசுக்கான
ஆக்கப்பூர்வப் பரிந்துரைகள்
- பள்ளிக் கல்வி நிலை
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை, வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தொல்லியல், கல்வெட்டு, நாணயவியல், அருங்காட்சியகம் குறித்த அலகுகளைச் சேர்த்தல். தமிழ்நாட்டுத் தொல்லியல் களங்களான கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்றவற்றைப் பாடப்பொருளாகக் கொண்டு, படங்களும் செயல்பாடுகளும் நிறைந்த துணைப்பாடங்களை உருவாக்குதல். ஒவ்வொரு பள்ளியிலும் பாரம்பரியக் கழகங்களை அமைத்தல்; ஆண்டுதோறும் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் களச் சுற்றுலாவை கல்வித் திட்டத்தில் சேர்த்தல். தமிழ்க் கல்வெட்டுகள், தமிழி (பிராமி) எழுத்துகள் குறித்த அடிப்படைப் பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குதல்.
- கல்லூரி நிலை
இளநிலைப் படிப்புகளில் தொல்லியல், கல்வெட்டியல், அருங்காட்சியகவியல், பாது காப்பியல், பாரம்பரியச் சுற்றுலா ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகவும் சான்றிதழ், பட்டயப் படிப்புகளாகவும் அறிமுகப்படுத்துதல். வரலாறு, புவியியல், கட்டடக்கலை, கணினி அறிவியல், சமூக அறிவியல் மாணவர்கள் இணைந்து பயிலும் பல்துறைப் பாடத்திட்டங்களையும் கற்றல் மதிப்பெண் (Credit) முறையையும் உருவாக்குதல். களப்பயிற்சி, அருங்காட்சியகப் பயிற்சி (Internship) ஆகியவற்றைக் கட்டாயக் கூறுகளாக்குதல்.
- பல்கலைக்கழக நிலை
தொல்லியலில் முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் படிப்புகளை விரிவுபடுத்துதல். GIS, தொலையுணர்வு, ட்ரோன் ஒளிப்பட அளவை யியல், தரையூடுருவும் ரேடார், அறிவியல் முறைக் காலக்கணிப்பு, செயற்கை நுண்ணறிவுத் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான பகிர்ந்து பயன்படுத்தும் மண்டல ஆய்வகங்களை நிறுவுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முன்னோடித் தொல்லியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யங்களை அமைத்து, மதிப்பீட்டுக்குப் பின் விரிவுபடுத்துதல். ஆய்வு உதவித்தொகை, ஆராய்ச்சி நிதி, வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டுறவுகளை ஊக்குவித்தல்.
- ஆசிரியர் மற்றும் பயிற்சி மேம்பாடு
தொல்லியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்குத் தொடர் பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்குதல். மாநிலத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றின் வல்லுநர்களை வருகைதரு விரிவுரையாளர்களாக ஈடுபடுத்துதல்.
- அருங்காட்சியகம் மற்றும் எண்ணிம வளங்கள்: பள்ளி–அருங்காட்சியகக் கூட்டுறவு, மாவட்டப் பாரம்பரிய வரைபடங்கள், இருமொழிக் களப்பணி கையேடுகள் ஆகியவற்றை உருவாக்குதல். மெய்நிகர் அருங்காட்சியகங்கள், எண்ணிமக் கண்காட்சிகள், திறந்த அணுகல் கொண்ட தொல்லியல் தரவுத்தளங்களை அமைத்துக் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல். களப்பணி அனைத்தும் சட்டங்கள், பாதுகாப்புத் தரநிலைகள், அனுமதி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுவதை உறுதிசெய்தல். நிறுவப்பட்ட சான்றுகளையும் அனுமானங்களையும் வேறுபடுத்தி அறியும் ஆய்வுநோக்கை மாணவர்களிடம் வளர்த்தல். அனுமதியற்ற அகழ்வு, தொல்பொருள் அகற்றல் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- நிதி, கண்காணிப்பு மற்றும் வேலைவாய்ப்பு
தொல்லியல் கல்விக்கெனத் தனி நிதி ஒதுக்கீடு செய்தல். மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை (கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகத் துறை உள்ளடக்கியது) அமைத்தல். சேர்க்கை எண்ணிக்கை, ஆய்வுக் கட்டுரைகள், பயிற்சி பெற்றோர், வேலைவாய்ப்பு போன்ற அளவிடத்தக்க குறிகாட்டிகளை நிர்ணயித்து ஆண்டுதோறும் மதிப்பீடு செய்தல். பட்டதாரிகளுக்குத் தொல்லியல், அருங்காட்சியகம், பாரம்பரிய மேலாண்மை, சுற்றுலா, எண்ணிம ஆவணப்படுத்தல் துறைகளில் வேலை வாய்ப்புப் பாதைகளை உருவாக்குதல்.
மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில், தொல்லி யல் கல்வியைத் தமிழ்நாட்டின் அறிவுசார், பண்பாட்டு, சமூக வளர்ச்சிக்கான நீண்டகால முதலீடாக அரசு கருத வேண்டும். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தொல்லியலை ஒருங்கிணைப்பதன் மூலம் அறிவியல் சிந்தனை, வரலாற்றுப் புரிதல், பாரம்பரியப் பாதுகாப்பு, தொழில்சார் திறன்கள் ஆகியவற்றை வளர்க்க இயலும். அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சி, சமூகப் பங்கேற்பு, அளவிடத்தக்க செயலாக்கம் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்நாடு தனது தொல்லியல் மரபைப் பாதுகாப்பதோடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கான வாய்ப்புகளையும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு உருவாக்கித் தரும் கல்வி மாதிரியை உருவாக்க முடியும்.
