ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியாவில் வலுவான பிறகு மதமாற்றம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஸநாதன தர்மத்திற்கு வேலி அமைத்துப் பாதுகாக்கவும், ஜாதியக் கொடுமையில் இருந்து விடுபட்டு சுயமரியாதையோடு உரிமையோடு வாழ பிற மதங்களுக்கு அடித்தட்டு மக்கள் செல்வதைத் தடுக்கவும், மக்களுக்கு மத மயக்க பிஸ்கட்டும் கொடுக்க கி.பி.1700-களுக்குப் பிறகு சில அமைப்புகள் தோன்றின. பிராமி இயக்கம், சரண் தாசி சம்பிரதாயம், ராம்சனேஹி சம்பிரதாயம், பாவுல் மற்றும் கார்த்தாபஜா இயக்கங்கள் போன்ற இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் முக்கிய நோக்கம் ஜாதியை ஒழிப்பது என்று வெளியே கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால் அந்தந்த ஜாதியினருக்கு ஜாதிப்பெருமை ஊட்டும் அமைப்புகளாக இவை இருந்தன. எடுத்துக்காட்டாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் பகுதிகளில் தோன்றிய சரண் தாசி சாம்பிரதாயம் அந்தந்த சமூக மக்கள் அவரவர் தொழிலைச் செய்வதே புனிதமானது என்று கூறி அதைக் கடவுளுக்குச் செய்யும் சேவை, அதைச் செய்பவர் நேராகக் கடவுளின் பாதத்தில் சென்று சேரலாம் என்று கூறியது. இறையவனின் பாதத்தில் சரணடைந்து அடிபணிவது (சரண் தாஸ்). இன்றும் இந்த அமைப்பு உள்ளது. அதாவது ஜாதிக்கொரு அமைப்பு, அப்படி உருவான ஒன்றுதான் ஸுவாமி நாராயண் சன்ஸா, குஜராத்தில் சஹஜானந்த் என்பவர் இந்த அமைப்பை உருவாக்கினார். இவரையே இவரது பக்தர்கள் உச்சகட்ட இறைவனான ‘பகவான் சுவாமிநாராயண்’ ஆக வழிபடுகிறார்கள்.
கோவாவில் செயல்படும் ஸநாதன் ஸன்ஸ்தா எப்படி கலாச்சாரப் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு பழைமைவாதத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கொல்லவேண்டும்” என்ற முனைப்போடு இருக்கிறதோ அதே போன்றதொரு நகல் அமைப்புதான் இந்த ஸ்வாமி நாராயண் ஸன்ஸ்தா.
கலாச்சாரப் பாதுகாவலன், தீவிரமான வேதக் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதுதான் இதன் மூலக் கொள்கை. மற்றவை எல்லாம் காலத்திற்கேற்ப உதட்டில் பேசும் சொற்கள் மட்டுமே,
வேதக் கோட்பாடுகள் என்றால் பகவத் கீதை, உபநிடதங்கள், பாகவத புராணம், மற்றும் வேத நூல்களை இவர்களை முதன்மைப் பிரமாணங்களாக ஏற்கிறார்கள். இந்த வேத நூல்கள் என்ன கூறுகின்றன என்பதைத்தான் 29.08.2026 அன்று வந்த ஞாயிறு மலரில் விரிவாகக் கொடுத்துள்ளோம்.

ஸ்வாமி நாராயண் ஸன்ஸ்தா “கருப்புப் பணக்காரர்களின் சுவர்க்கம்” என்று, மும்பை தலால் சாலையில் (பங்கு வர்த்தகம் நடைபெறும் சாலை) பேசிக்கொள்வார்கள்.
இவர்களின் கோவில்களில் சாமானியர்கள் செல்ல முடியாது. விலையுயர்ந்த காரில் வருபவர்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும்
இவர்கள் கட்டும் கோயில் எல்லாம் ரூ.300 கோடி ரூ.800 கோடி என்ற செலவில் தான் கட்டுவார்கள் 14.02.2024 அன்று அபுதாபியில் திறந்த கோவில் கட்டுமாணச் செலவு ரூ.900 கோடிகள் ஆகும் இதற்கு அந்த நாட்டு இளவரசர் 22 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுத்தார்.
அங்கும் தீண்டாமை எப்படி என்றால் கட்டுமானத்திற்காக அரபு நாடுகளில் இருந்து எதுவுமே வாங்கப்படவில்லை. எல்லாம் குஜராத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவையே! சிவப்பு நிற கல், வெண் கிரனைட் கல் மற்றும் கற்களை இணைக்க வேதிப்பொருள் கொண்டு சென்றனர். இதை அவர்களே பெருமையோடு குறிப்பிட்டுள்ளனர். அதே போல் வேலை செய்யும் நபர்களையும் மனுதர்ம முறைப்படித்தான் தேர்ந்தெடுப்பார்கள். கடுமையான உழைப்பிற்கு சூத்திரப் பிரிவைச் சேர்ந்த ஜாதியினரும், கணக்கு வழக்கு பார்க்க வைசிய ஜாதிப்பிரிவினரும், என பார்த்து பார்த்து வரவழைத்து வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் உடல் உழைப்பு உள்ள சூத்திர மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உணவும் உடையும் சொற்ப கூலியும் தான் கொடுத்துள்ளனர். அபுதாபி மற்றும் இந்தியாவில் இவர்களின் தீண்டாமை நடவடிக்கை மறைக்கப்பட்டது காரணம் அங்கு மக்களாட்சி இல்லை, ஊடகச் சுதந்திரம் அல்லது பேச்சுரிமையோ முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அங்கு என்ன நடந்தது என்பது உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டது.
இந்த அமைப்பு பிரான்ஸ் நாட்டிலும் கோவிலைக் கட்டியுள்ளது. அதன் திறப்புவிழாவிற்குச் செனற ஸ்வாமி நாராயண் ஸன்ஸ்தாவின் தற்போதைய மடத்தலைவர் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது தான் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க வரும் போது பெண்கள் யாரும் அங்கே இருக்கக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
இதில் என்ன அதிர்ச்சி என்றால் ஈபிள் கோபுரத்தை நிர்வாகிக்கும் தனியார் அமைப்பு இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு பெண்களை மட்டும் வேறு பகுதிக்கு அனுப்பி விட்டனர்.
ஈபிள் கோபுரம், வெறும் சுற்றுலாத் தளம் மட்டுமல்ல; அது ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கை களைப் பறைசாற்றும் உலகளாவிய குறியீடு அங்கே ஆண் பெண் பேதமில்லை, சமத்துவம் ஒன்றே அதன் உச்சபட்ச தத்துவம். அங்கே நடந்த பாலினப் பாகுபாடு பன்னாட்ட்ளவில் இந்தியாவிற்கு பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தி விட்டது. ஈபிள் கோபுரம் உலக வரலாற்றில் முதல் முதலாக பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி மூடப்பட்டது. ஆண்டுக்கு 70லட்சம் பார்வையாளர்கள் வரும் பகுதி அன்றாடம் உலகநாடுகளில் முக்கால் வாசிபேரால் பேசப்படும் வர்ணிக்கப்படும் கோபுரம் மூடப்பட்டது என்றால் அதிர்ச்சியான செய்திதானே. உலகின் அனைத்து செய்திகளிலும் முதல் பக்கத்தில் வந்தது.
மத ரீதியான சொந்த நம்பிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தனிப்பட்ட முறையில் பின்பற்றுவது அவரவர் உரிமை. ஆனால், ஒரு நாட்டின் பொது இடத்தில், அதுவும் வேறொரு நாட்டின் சட்டம் மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு மாறாகத் தன் பழமைவாத நம்பிக்கைகளைத் திணிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இந்த உத்தரவுக்கு எதிராக ஈபிள் கோபுர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதும், கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டதும், பிரெஞ்சு மேயர் மற்றும் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததும் நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. ஹிந்துத்துவ அமைப்பின் குறுகிய மனப்பான்மையால், உலகப் புகழ்பெற்ற ஒரு தளம் மூடப்படும் சூழல் உருவானது பன்னாட்டளவில் இந்தியாவின் கலாச்சாரப் பெருமைக்கு விழுந்த சம்மட்டி அடியாகும்.

மேலைநாடுகளில் இந்தியர்கள் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சாதனை படைத்து நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் வேளையில், இந்தியாவிலிருந்து செல்லும் இதுபோன்ற ஆன்மீக அமைப்புகளின் பழமைவாதப் போக்கும், சட்டவிரோத நடவடிக்கைகளும் நாட்டின் பிம்பத்தைச் சீர்குலைக்கின்றன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இந்த மண்ணின் தெற்கில் வாழ்ந்த கனியன் பூங்குன்றன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தைக் கூறிவிட்டார். ஆனால் இங்கிருந்து சென்ற மதாவத அமைப்பு இந்தியா போன்றிவந்த சமத்துவக் கொள்கையை வெளிநாட்டு மண்ணில் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
