மின்சாரம்
‘முட்டாளுக்கு ஓரிடம், புத்திசாலிக்கு மூன்று இடம்’ என்பதுபோல, பி.ஜே.பி. நடந்துகொள்கிறது.
டில்லி கேவல் பார்க் பகுதியில் நடைபெற்ற ராம்லீலா விழாவில், டில்லி முதலமைச்சர் பங்கேற்று உரையாற்றுகையில் ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை அநீதி தொடரும் என்று பேசினார். அதாவது ‘ராவணன்’ என்பதற்குப் பதில், ‘ராம்’ என்று கூறிவிட்டார் என்று சமாளிக்கிறார்கள். நேரலையில் அவர் பேசியதை பா.ஜ.க.வினர் ஏஅய் மூலம் உருவாக்கப்பட்டது என்று கூறியதால், விவகாரம் பெரிய சர்ச்சைக்குரியதாகிவிட்டது.
டில்லி கேவல் பார்க் பகுதியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ராம்லீலா நிகழ்ச்சியில், டில்லி முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சமுதாயத்தில் தீமைகளை அழிப்பது குறித்துப் பேசுகையில், ‘‘ஒவ்வொரு ராவணனும் அழிக்கப்படும் வரை…’’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘‘ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை…’’ என்று பேசிவிட்டாராம்!
வைரலான காணொலியும்,
எழுந்துள்ள புகார்களும்!
நேரலையில் ஒளிபரப்பான இந்த உரையின் காணொ லித் துண்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே இணையதளங்களில் தீவிரமாகப் பரவத் தொடங்கியது.
‘ஆதர்ஷ் கலா கேந்திரா’ என்ற யூடியூப் சேனலில் இந்த நிகழ்ச்சி முழுமையாக நேரலை செய்யப்பட்டது. ஆனால், இந்தக் காணொலி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அரசியல் அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக அந்தச் சேனல் தனது நேரலைப் பதிவை யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டது.
முதலமைச்சர் அவ்வாறு பேசவே இல்லை என்றும், இணையத்தில் உலா வரும் அந்தக் காட்சிப் பதிவு முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் பாஜக தரப்பில் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக ஆர்வலர்கள் இந்த விளக்கத்தைக் கடுமை யாக விமர்சித்து வருகின்றனர். நேரலை செய்யப்பட்ட காணொலி சான்றாக இருக்கும்போது, அதை ஏஅய் போலி வீடியோ (காணொலி) எனக் கூறி திசைதிருப்புவது பொறுப்பற்ற செயல் என்றும், தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உண்மை என்னவென்றால், வாய்த் தவறி சொன்னாரோ இல்லையோ, அவர் கூறியதில் உண்மை இருக்கவே செய்கிறது.
வருண தர்மத்தைக் காத்தவன்தானே இராமன்? தவமிருந்த சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்ற வன்தானே இராமன்?
ஏதோ வாய்த் தவறி கூறிவிட்டார் என்று சமாதானம் கூறிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
காரணம், சம்பூகன் சூத்திரனாம்; கடவுள் அவதாரம் என்று கூறப்படும் இராமனுடைய மூளையிலே குடிகொண்டிருப்பது குரூரமான பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரமம்தானே!
நிறை மாதக் கர்ப்பிணியான மனைவியை, தீர விசாரிக்காமல், கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் கொண்டு போய் விட்டவன்தானே இராமன்.
மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வாலியைக் கொன்ற வஞ்சகப் புத்திக் கொண்ட கோழைதானே இராமன்.
இந்த நிலையில், பி.ஜே.பி.யைச் சேர்ந்த முதல மைச்சர், இராமனைப்பற்றிச் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது?
பி.ஜே.பி.யினர் இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்ப்பது, ‘முட்டாளுக்கு ஓரிடம், புத்தி சாலிக்கு மூன்று இடம்!’ என்று சொல்லப்படும் பழமொழியைத்தான் நினைவுப்படுத்துகிறது. ‘கொல்லப்பட வேண்டியவன் ராமன்’ என்ற செய்தி மேலும் மேலும் பரவுவதற்குக் காரணம்,
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சின் முட்டாள்தனமான அணுகுமுறையே!
