* உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை ‘‘பெரியார் அறிவுலகம்’’ என்ற நூலகத்தை உருவாக்கினார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் மு.கஸ்டாலின்!
* தொடங்கியபோதே பாராட்டினோம், இன்றும் பாராட்டுகிறோம்!
கோவையில், ‘‘பெரியார் அறிவுலகம்’’ என்ற 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கிப் பெருமை பெற்றார் மேனாள் முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின். அன்றைய முதலமைச்சர் நிறைவேற்றிய வரலாற்றுச் சின்னமாம் பெரியார் பெயரிலான நூலகத்தை இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் திறந்து வைத்தது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுப் பெருமைகளில் ஒன்றாக அமையும் ‘பெரியார் அறிவு உலகம்’ என்ற புதுமை பூத்துக் குலுங்கும் ஆய்வுக் களமாகவும், இளைய தலைமுறையினரும் எதையும் ஆர்வத்துடன் அறிந்துகொள்ள, அறிவு ஊற்றுப் பெருகிடும் ‘‘பெரியார் அறிவுலகம்’’ என்ற 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால்!
‘எல்லோருக்கும் அறிவு’ பரப்பிடும் வண்ணம்!
தந்தை பெரியார் பிறந்து, பொது வாழ்க்கையைத் தொடங்கிய கோவை மாவட்டத் தலைநகரில், நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வு உள்பட பல்வேறு வசதி வாய்ப்புகள் ‘எல்லோருக்கும் அறிவு’ என்று பரப்பிடும் வண்ணம் ‘திராவிட மாடல்’ ஆட்சி திட்டமிட்டது.
சாதனைச் சரித்திரம் படைத்தார்,
அன்றைய முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின்!
கோவையில் பெரியார் அறிவுலகம்,
மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம்,
திருச்சியில், கல்வி வள்ளல் காமராசர் பெயரில் நூலகம்,
நெல்லையில், காயிதே மில்லத் பெயரிலான நூலகம்,
சேலத்தில், பாரதிதாசன் அறிவுலகம்,
கடலூரில், 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என,
புரட்சிக்கவிஞர் அவர்கள் விரும்பியபடி,
‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு,
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’
என்பதை செயலாக்கி, சாதனைச் சரித்திரம் படைத்தார், அன்றைய முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
விக்டர் ஹியூகோ சொன்னார், ‘‘ஒரு நூலகத்தைத் திறப்பது பல சிறைச்சாலைகளை மூடுவதற்குச் சமம்’’ என்று.
நாம் நன்றி தெரிவித்து, பாராட்டி வரவேற்றோம்!
அந்த அறிவுப் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியபோதே நாம் நன்றி தெரிவித்து, பாராட்டி வரவேற்றோம்!
இன்று (16.10.2026) தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைக்கிறார் – வரவேற்கத்தக்கதுதான்.
அதுவும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைதான்!
பொதுவாக மக்களாட்சியில், ஒரு கட்சி முதலமைச்சர் கட்டி முடித்ததை அடுத்து வரும் முதலமைச்சர் திறப்பது வழமைதான் என்றாலும், ஓர் அடிப்படை உண்மை, மெட்ரோ ரயில் திட்டத்தை (ரூ.800 கோடிக்கு மேல் பெரிதும் மாநில அரசு நிதியின் சுமையிலேயே கட்டப்பட்டது) திறந்து வைத்தாலும், அதுவும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைதான்!
காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், மகளிர் உரிமைத் திட்டம் எல்லாம் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் என்கிறபோது, முந்தைய முதலமைச்சரையும், ஆட்சியையும் தரந்தாழ்ந்து அவதூறுகளை அள்ளி வீசி, திசை திருப்பல்கள் அரசியல் அறமாகாது!
இரண்டு அணிகளுக்கான போராட்டம்!
அனைவரும் கல்வி, அறிவு பெறக்கூடாது என்ற ஒரு மேல்ஜாதி (ஆரிய) அணிக்கும், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் மக்கள் நல கொள்கை அணிக்கும்தான் இன்றைய போராட்டம் – அரசியலும்கூட!
‘‘பெரியார் அறிவு உலகம்’’ என்ற தலைப்பே மிகவும் அற்புதத் தலைப்பு – மிகவும் தனித்தன்மையானது!
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றும், ‘‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை’’யென்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார்பற்றி ஆழ்ந்த பொருளோடு பாடியதற்கான எழில் வடிவம்தான் இந்தப் ‘‘பெரியார் அறிவுலகம்!’’
உலகெங்கும் உள்ள பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள், திராவிட உணர்வாளர்கள், ஆய்வாளர்கள், அத்துணைப் பேரும் மகிழ்ந்து பாராட்டுகின்றோம். இதற்கு வித்திட்டு முடித்து, தேர்தல் அறிவிப்பு காரணமாக தள்ளிப் போன நிலையில், தற்போது அது கம்பீரமாக எழுந்து நிற்கிறது!
‘‘திராவிட நாயகருக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் –
நன்றி, பாராட்டுப் பெருவிழா!’’
இதற்காக நவம்பர் முதல் வாரத்தில், சென்னையில் ‘‘திராவிட நாயகருக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் – நன்றி, பாராட்டுப் பெருவிழா!’’ என்று நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.
‘பெரியார் அறிவு உலகத்தினை’ இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர், அவரது அரசு, இந்த நூலகங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவிடுவது அரசின் தலையாய கடமையாகும்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16.10.2026
