புதுடில்லி, அக்.13- டில்லி ஜந்தர் மந்தர் பகுதி கடந்த சில மாதங்களாக அரசியல் நீரோட்டத்தில் அதிகம் அடிபடும் பெயராக மாறிவிட்டது.
கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிஜேபி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என டில்லி காவல் துறையினர் அறிவித் துள்ளனர். போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்று இடங்கள் அறிவிப்பு
மேலும், டில்லியில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கிழக்கு டில்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகிய இடங்களில் இனி போராட்டம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜந்தர் மந்தர் பதிலாக, குடிமக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான உரிமைக்கு மாற்றான மற்றும் பொருத்தமான இடங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்திருந்தது.
அந்த வகையில் தற்போது குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் அனுமதி மறுப்பு – மூன்று காரணங்கள் – பாதுகாப்பு சார்ந்த கவலைகள்
பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங் களை இனி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பாக நடத்த இடவசதி போதாது என்பதை அதிகாரிகளும் நீதிமன்ற ஆய்வுகளும் சுட்டிக்காட்டி உள்ளன.
திடீரென பெருந்திரளான மக்கள் கூடும்போது, அவசரக் கால மீட்புப் பணிகள் சென்றடைவது, கூட்ட மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அப்பகுதியின் குறுகிய இட அமைப்பால் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.
போக்குவரத்து இடையூறு
முக்கிய அரசு அலுவகங்கள் அருகே உள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு வளைய மான லுட்யென்ஸ் பகுதியில் இது அமைந்திருப்பதால், இங்கு அடிக்கடி நடத்தப்பட்ட போராட்டங்கள் போக்குவரத்தை மிகக் கடுமையாக முடக்கின.
மத்திய டில்லி வழியே பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர் போக்குவரத்து இடையூறுகளை குறைக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீராக்கவும் இந்த இடம் போராட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் பதற்றங்கள்
காக்ரோச் ஜனதா கட்சி போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட முக்கியப் போராட்டங்கள் மற்றும் பெரிய அரசியல் கூட்டங்கள், பேரணிகள் காரணமாக இப்பகுதி அருகில் அதிக பாதுகாப்பு கொண்ட போர்க்களம் போல் காட்சியளித்து வந்தது.
அதீத பாதுகாப்புப் படை குவிப்பு, தடுப்பு வேலிகள், முன்னெச்சரிக்கை கைதுகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகப் பணிகளையும் பாதித்தன. இதனால், போராட்டங்களை இத்தகைய அதிஉயர் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த அதிகாரிகளைத் தூண்டியது. இந்த காரணங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும், இதன் காரணமாகவும் மாற்றப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது.
