தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல்
வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை அனைத்திலும் முறைகேடு!
உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை அனைத்திலும் முறைகேடு!
உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
- தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை அனைத்திலும் முறைகேடு! உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- தொடக்கம் முதலே நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்!
- ஹிந்துத்துவாவின் திட்டம் தவிடுபொடியாகும்!
- தேர்தல் ஆணையம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருக்க வேண்டும்!
- பச்சையான பார்ப்பனியம்!
- முன்பே நாம் எச்சரித்துள்ளோம்!
- உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே கூடக் கிடையாதே!
- போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை அனைத்திலும் முறைகேடு! உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை! இந்தியாவைக் காப்பதற்கான உண்மையான சுதந்திரப் போராட்டம் இது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவே கொதித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 10% பேரின் (13 கோடி வாக்காளர்களின்) வாக்குரிமையைப் பறித்துவிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தி யாவில் வசிக்கும் எல்லோரிடமிருந்தும், இந் நாட்டுக் குடிமக்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுவது, வயது வந்த ஒருவருக்கு இருக்கும் வாக்குரிமை தான். அதைப் பறித்திருக்கிறார்கள். வாக்குரிமை அற்ற இரண்டாம் தரக் குடிமக்களாக 13 கோடிப் பேர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இது எவ்வளவு பெரிய மோசடி?
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படிப்படியாக, தேர்தல் முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு சமயத்திலும் இது குறித்து எதிர்ப்புகள் எழுவதும், தேர்தல் முடிந்தபின் வேறு பிரச்சினைகளின் காரணமாக அடங்குவதுமாக இந்திய ஜனநாயகத்தின் உயிர்ப் போராட்டம் மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறது.
தொடக்கம் முதலே
நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்!
நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்!
இப்போது அதன் மூக்கை அழுத்திப் பிடித்து, ஒரே அடியாக மூச்சை நிறுத்தும் வேலையைத் தான் எஸ்.அய்.ஆர். என்ற பெயரால், ஒன்றிய பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. இது வெறும் தேர்தல் வெற்றி, தோல்வியைச் சார்ந்ததல்ல. இதன் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி ஒளிந்திருக்கிறது என்பதைத் தொடக்கம் முதலே நாம் சுட்டிக்காட்டி வருகிறோம்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காத அமைப்பு ஆர்.எஸ்.எஸ்! ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வாக்கு என்ற அரசியல் சமத்துவத்தை அது உருவாக்குகிறது. இந் நாட்டின் பன்மொழி, பல மதங்கள், பல கலாச்சாரங்கள் என்ற பன்மைத்துவத்தைப் பாதுகாக்கிறது. சமூகநீதிக்கு உத்தரவாதம் தரு கிறது. மதச் சார்பின்மையை முன்மொழிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, இறையாண்மை மிக்க, சமத்துவமான, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசை அமைக்க உறுதியளிக்கிறது. ஆனால், இவை எதுவும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஹிந்துத்துவத் தத்துவத்திற்கு உகந்தவை அல்ல.
ஹிந்துத்துவாவின் திட்டம் தவிடுபொடியாகும்!
வர்ணாசிரமம் கோலோச்சும், சமஸ்கிருத – ஸநாதன – பார்ப்பனிய ஆட்சியும், மதமும், பண்பாடும் தான் ஆர்.எஸ்.எஸ்.சின் இலக்கு! அதை உருவாக்குவது தான் ‘ஹிந்துராஷ்டிரா’ என்ற முழக்கத்தின் நோக்கம். அந்த ஆயுதங்களைக் கொண்டு போர் நடத்தி அவர்களால் வெல்ல முடியாது. இந்நாட்டின் 97 சதவிகித பார்ப்ப னரல்லாத, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால், ஹிந்துத்துவாவின் திட்டம் தவிடு பொடியாகும்.
மாறாக, தங்கள் இலக்கான வர்ணாசிரம ஹிந்துராஷ்டிரத்தை அடைய வேண்டுமானால், அதற்குத் தடையாக இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிக்க வேண்டும். அதற்குப் பதிலாக மனுஸ்மிருதியைக் கொண்டு வரவேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு ஆட்சியதிகாரம் வேண்டும். அதிலும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமானால், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் – அதுவும் மக்களவையிலும் வேண்டும்; மாநிலங்களவையிலும் வேண்டும்.
தேர்தல் ஆணையம்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருக்க வேண்டும்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருக்க வேண்டும்!
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் மூலம் மக்கள வையைப் பிடிக்கலாம்; ஆனால், எல்லா மாநிலங்கள் அல்லது பெரும்பான்மை கிடைப்பதற்கான எண்ணிக்கையில், பல மாநில சட்டமன்றங்களிலும் பெரும்பான்மை தேவை! இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் உடனடியாகப் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிடாது. எனவே, அதற்கேற்பத் தேர்தல்களை நடத்தத் திட்டமிட வேண்டும். அதற்குத் தேர்தல் ஆணையம் முழுக்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருக்க வேண்டும். சந்தேகங்கள் எழாத வண்ணம் இவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படிப்படியாகத் திட்டங்கள் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பச்சையான பார்ப்பனியம்!
இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாகத் தான் 2023 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் நியமன முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றமும், அதற்காக உருவாக்கப்பட்ட இச் சட்டமுமே அடிப்படை நியாய விரோதமான சட்டமாகும். தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் நடுநிலைமை ஏற்படா வண்ணம், வெளிப்படையாகவே 2:1 என்று முடிவை அறிவித்து விட்டு ஆடப்பட்ட ஆட்டம் அது. இந்தியப் பிரதமரும், ஒன்றிய அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் அடங்கிய மூவர் குழுவின் முடிவு என்னவாக இருக்க முடியும்? அதற்கு முன்பு, அக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பெயரை நீக்கிவிட்டுத்தானே அதற்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் என்று சட்டத்தில் சேர்த்தது பா.ஜ.க! எவ்வளவு வெளிப்படையான சார்புத் தன்மை! இதுதானே பச்சையான பார்ப்பனியம்!
மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் தேர்வு முறை யிலேயே ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு விட்டதே!
முன்பே நாம் எச்சரித்துள்ளோம்!
அது மட்டுமல்ல, அடுத்தடுத்து பல முறை கேடுகளைச் செய்யப் போகிறோம் என்பதை உறுதி செய்துகொண்டுதான், அச் சட்டமே வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்குத் தலைமையேற்கிற தேர்தல் ஆணையருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளார்கள் என்பதை அச் சட்டத்தைச் சுட்டிக்காட்டியே முன்பே நாம் எச்சரித்துள்ளோம்.
அச் சட்டத்தின் பிரிவு 16 என்ன சொல்கிறது?
“Notwithstanding anything contained in any other law for the time being in force, no Court shall entertain or continue any civil or criminal proceedings against any person who is or was a Chief Election Commissioner or an Election Commissioner for any act, thing or word, committed, done or spoken by him when, or in the course of acting or purporting to act in the discharge of his official duty or function.”
அதன் தமிழாக்கம்:
“தற்போது நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் என்னதான் கூறப்பட்டிருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையராகவோ அல்லது தேர்தல் ஆணையராகவோ பதவியில் இருப்பவர் அல்லது இருந்தவர் ஒருவர், தனது அலுவல்ரீதியான கடமை அல்லது பணியைச் செய்யும்போது அல்லது செய்ய முற்படும்போது செய்த செயல், நிகழ்வு அல்லது பேசிய வார்த்தை தொடர்பாக, அவர் மீது எந்தவொரு நீதிமன்றமும் சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அல்லது தொடரவோ கூடாது.”
தேர்தல் ஆணையராகத் தற்போது இருப்பவர் மட்டுமல்ல, இச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களும், தலைமைத் தேர்தல் ஆணையரும் ஓய்வு பெற்ற பின்னும், இப் பதவியில் இருக்கும் போது செய்த எவற்றுக்காகவும் சிவில் அல்லது குற்றவியல் நட வடிக்கைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்னும் ஆயுள்கால விலக்கை (Lifelong Immunity), சட்டரீதியான பாதுகாப்பை வழங்கியுள்ளது இச் சட்டம். (“who is or was a Chief Election Commissioner or an Election Commissioner”)
இவ்வளவு மோசடிகளைச் செய்ய வேண்டுமே, இதனால் பிற்காலத்தில் நான் மாட்டிக் கொண்டால் என்ன ஆவது என்று அஞ்சி, மோசடி செய்யத் தயங்கக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு பிரிவு அச் சட்டத்தில் இருக்கிறது என்றால், நாம் எதிர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் எத்தகைய சூழ்ச்சி மிகுந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே கூடக் கிடையாதே!
இத்தகைய இம்மியூனிட்டி, உச்சநீதிமன்ற நீதிபதி களுக்கே கூடக் கிடையாதே! அதைத் தானே நேற்று முன் தினம் (5.10.2026) இது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜோய்மாலா பாக்சி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘‘பதவியில் இருக்கும்போது வழங்கப்படும் பாதுகாப்பு என்பது இயல்பாகவே புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், அந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முன்பு பதவியில் இருந்தவர்’ (was) என்ற அம்சம், குடியரசுத் தலைவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய வகையிலான பாதுகாப்பாகத் தோன்றுகிறது. இது நீதிபதிகளுக்குக் கூட பொருந்தாது… ‘நீதிபதிகள் மீதான விசாரணைச் சட்டத்தை’ (Judges Inquiry Act) சற்று கவனியுங்கள்’’ என்று நீதிபதி பாக்சி குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினை தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் தொடர்பான பிரச்சினை அல்ல; இதற்குப் பின்னால் உள்ள ஆட்சி யாளர்களின் பங்கு மிகப் பெரியது ஆகும். வாக்குத் திருட்டுகள், வாக்குப் பறிப்புகள், தேர்தல் பத்திரங்கள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்று இந்தியாவின் தேர்தல் முறைகளிலேயே அப்பட்டமான முறைகேடுகள் அரங்கேறியுள்ளன.
இத்தகைய முறைகேடுகளின் வாயிலாக ஒன்றிய அரசு முதல் மாநில அரசுகளுக்கான தேர்தல் முடிவுகள் வரை மாற்றப்பட்டிருக்கின்றன. ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் தொலைநோக்கு ஹிந்துராஷ்டிரா திட்டங்களுக்குத் தேவைப்படும் வகையில் அமை வதற்கான வழிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவை தான் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் தேர்தல்களில் பா.ஜ.க.வின் கணக்குகள் வெற்றிபெற உதவியிருக்கின்றன.
போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை!
நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டங்கள்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற போராட்டம்! இந்தப் போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை! இந்தியாவின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைக் காக்கின்ற உண்மையான சுதந்திரப் போராட்டமாக அமையும் – அமையவும் வேண்டும்!
நீதிமன்றங்களில் எழும் கேள்விகளுக்கு, மக்கள் மன்றமே அடிப்படை! இது யாரோ சிலருக்கான பிரச்சினையல்ல – ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை என்பதைப் புரிந்து அனைவரும் கடமையாற்றவேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த வேறுபாடும் இல்லை – இருக்கவும் கூடாது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.10.2026
