ஒத்த கருத்துடையோரும், தமிழினப் பெருமக்களும், தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையில் ஓரணியில் திரளுக!

5 Min Read

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!

* அதைத் தமிழ்நாடு அரசே வாங்கினாலும் ஏற்புடைத்து!  4 படிப்படியாகத் தனியார் வசம் இந் நிறுவனத்தை விற்றுவிடக் கூடாது!

ஜூலை 7 ஆம் தேதி நெய்வேலியில் எனது
(கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லையெனில், அப் பங்குகள் அனைத்தையும் முழுதாகத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். படிப்படியாகத் தனியார் வசம் இந் நிறுவனத்தை விற்றுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் ஜூலை 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு நெய்வேலியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத்துடையோரும், தமிழினப் பெருமக்களும், தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையில் ஓரணியில் திரளுக! என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசு மீண்டும் தனது தனியார் மயமாக்கல் என்னும் அழிவாயுதத்தை நெய்வேலியில் எடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) ‘இந்தியாவின் நவரத்னா’ என்று புகழப் பெற்ற பொதுத் துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, உழைக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களைக் கொடுத்து, உருவாக்கப்பட்ட நிறுவனம்.

இதனைத் தனியார் மயப்படுத்திட, தொடர்ந்து பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள நிலைமையில், நேரடியாக ஒன்றிய அரசிடம் 69.51% (இதர நிறுவனங்களின் வாயிலாகச் சேர்த்து மொத்தம் 72.2%) பங்குகளே உள்ளன. அதிலும் 3% பங்குகளைத் தனியாருக்கு விற்கவிருப்பதாக கடந்த ஜூன் 8 அன்று ஒன்றிய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும் “முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை”யால் (DIPAM) அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

தனியாருக்குத் தாரை வார்ப்பதுபோல, விற்பதுதான் ‘‘மேலாண்மைத்’’ துறையா?

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால்,
2006 இல்  கைவிடப்பட்டது!

ஏற்கெனவே இத்தகைய முயற்சிகள் 2006 இல் செய்யப்பட்ட போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் அம் முடிவு கைவிடப்பட்டது. பின்னர் 2013 இல் 10% பங்குகளை விற்க முயற்சி செய்யப்பட்ட போது, அதில் 5% பங்குகளைத் தமிழ்நாடு அரசு கேட்டபோதும், முன்பே பல நிறுவனங்களுக்கு 6.44% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில், 3.56% பங்குகளைத் தமிழ்நாடு அரசே வாங்கியது.

தொடர்ச்சியாக இப்படி நடந்து வந்துள்ள நிலையில், தற்போது ஒன்றிய அரசிடமும், தமிழ்நாடு அரசின் சார்பில் சிப்காட், டிட்கோ போன்ற நிறுவனங்களிடமும் இருக்கும் பங்குகள் போக, நிப்பான் இந்தியா, எஸ்.பி.அய். லைஃப் இன்சூரன்ஸ், எல்.அய்.சி  உள்ளிட்ட நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுக்காக வைத்துள்ளன. தனியார் வசமும் பங்குகள் உள்ளன.

தனியாருக்கு விற்க வேண்டிய
அவசியம் என்ன?

இந்நிலையில் மேலும் மேலும் பங்குகளை ஒன்றிய அரசு விற்பது பொதுத் துறை நிறுவனத்தை முற்றிலும் கை கழுவும் வேலையாகும். சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே, மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் கொழித்துக் கொண்டிருக்கின்றன. முழுக்க அந்தத் துறையைத் தனியார் மயமாக்கி, அதன் மூலம் மறை முகமாகக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் ‘கைமாறு’ செய்கிறதா ஒன்றிய அரசு?

நாட்டில் அமைதியின்மையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

விமான நிலையங்களை அதானிக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டாவுக்கும், ஏனைய பல தொழில்களை அம்பானிக்கும் தாரை வார்த்தாகிவிட்டது. ரயில்வேயில் கூட தனியார் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி, தனியார் ரயில் நிலையப் பராமரிப்பு என்று எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி, பதிலுக்கு தேர்தல் நிதி என்ற பெயரால் பா.ஜ.க.வும், சி.எஸ்.ஆர். நிதிகள் மூலம் காவிகளின் என்.ஜி.ஓ.க்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதக் கலவரங்களுக்கும், வகுப்பு வாதத்துக்கும் அவற்றைப் பயன்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை அரங்கேற்றிக் கொண்டி ருக்கிறார்கள்!

நேரடியாகவே பங்கு விலக்கலுக்கு என்று அருண்ஷோரியை அமைச்சராக்கி, அதில் குறைந்தபட்ச நேர்மையைக்(!) கடைப்பிடித்தார் மேனாள் பா.ஜ.க. பிரதமர் வாஜ்பேயி! ஆனால், அதனை நிதி அமைச்ச கத்துக்குள்ளேயே ஒரு பிரிவாக்கி DIPAM என்று ஒரு துறையைக் கொண்டு, பொதுத் துறை நிறுவனங்களைப் பெருமுதலாளிகளுக்குக் காவு கொடுத்துக் கொண்டி ருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான
ஆர்.எஸ்.எஸ். –  பாஜக அரசு!

இதிலும் இரட்டை வேடம்!

ஜூலை 7 ஆம் தேதி நெய்வேலியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரும் இது தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிகிறது. அப்படி இல்லையெனில், அப் பங்குகள் அனைத்தையும் முழுதாகத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு அதனை உடனடியாக வாங்க வேண்டும்.  எக்காரணம் கொண்டும், படிப்படியாகத் தனியார் வசம் இந் நிறுவனத்தை விற்றுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் ஜூலை 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு  நெய்வேலியில் எனது (கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நெய்வேலி நிலக்கரிக்கும், நரிமணம் எரிபொரு ளுக்கும் ராயல்டி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்று கேட்டு, போராடி, அதனைப் பெறக் காரண மானது திராவிடர் கழகம். அந் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின், தொழிலாளர்களின் உரிமை காக்கப்படுவதற்காகப் போராடி வெற்றி கண்ட இயக்கம் திராவிடர் கழகம்.

பங்கு விற்பனை அறிவிப்பை எதிர்த்து, கடந்த 2006 ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் தேதி எனது தலைமையில் நெய்வேலியில் போராடி, கைதான வரலாறும் உண்டு.

மக்களின் சொத்தான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை ஒருபோதும் தனியாருக்கு விற்பதை அனுமதியோம்!

தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையில்
ஓரணியில் திரளுக!

ஒத்த கருத்துடையோரும், தமிழினப் பெருமக்களும், தமிழ்நாட்டின் இவ் உரிமைப் பிரச்சினையில் ஓரணியில் திரண்டு ஜூலை 7 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

30.6.2026        

பங்கேற்கும் மாவட்டங்கள்

கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய மாவட்டக் கழகத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *