கடந்த சில நாட்களாக, ஒன்றிய அரசின் கேவிஎஸ் (கேந்திரிய வித்யாலாயா சங்கேதன்) பள்ளிகளுக்கும், என்விஎஸ் (நவோதயா வித்யாலாயா சமிதி) பள்ளிகளுக்குமான ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு, நவம்பர் 13, 2025-இல் வெளிவந்தது. விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாக திசம்பர் 4, 2025 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் டையர் 1 (Tier 1) என்னும் முதல் கட்டத் தேர்வு, டையர் 2 என்னும் இரண்டாம் கட்டத் தேர்வு, பின்பு 3-ஆம் கட்டமாக நேர்முகத்தேர்வு. இவற்றின் அடிப்படையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. டையர் 1 தேர்வு ஜனவரி 10, 2026 நடந்து, அதன் முடிவு பிப்ரவரி 28, 2026-இல் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு டையர் 2 தேர்வு, மார்ச் 29, 2026-இல் நடந்தது. டையர் 2வின் முடிவு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்குச் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்றது. மேற்கண்ட தேர்வுக்குத் திசம்பர் 4, 2025 ‘கட் ஆப் தேதி’, அதாவது இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது!
ஆனால், இதில் பங்கேற்போருக்குத் தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் கொடுக்கும் ஓபிசி சான்றிதழ் செல்லாது என்றும், ஒன்றிய அரசு கொடுத்திருக்கும் மாதிரிப் படிவத்தைப் பின்பற்றித்தான் சான்றிதழ் வாங்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்கள். அதுவும் ‘ஓபிசி சர்ட்டிகேட்’ கொடுத்த தேதி 1.1.2025 முதல் 04.12.2025 க்குள் இருந்தால்தான் நேர்முகத்தேர்வுக்கே அனுமதிப்போம், இல்லையெனில் அனுமதி இல்லை” என்று, இரண்டு தேர்வுகளுக்குக் கடினமாகப் படித்துத் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வுக்கு வந்த பிற்படுத்தப்பட்ட கல்வியியல் பட்டதாரிகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
வாரணாசியில், நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள், தங்களை அனுமதிக்கவேண்டும் என்று முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளார்கள். நீதி வேண்டும் என்று பிரதமர், ஒன்றியக் கல்வி அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஓபிசி சான்றிதழ் வாங்கி வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு போன்றவை நடப்பதைத் தடை செய்யக்கூடாது, அவர்கள் பணியில் சேரும்போது அப்போதைய நடப்பு ஓபிசி சான்றிதழ் கொடுத்தால் போதும் என்று 2016-ஆம் ஆண்டின் ஒன்றிய அரசின் ஆணையை (No. 36011/1/2012 DOPT Order Dated March 14, 2016, New Delhi) நடைமுறைப்படுத்தாமல், இந்தியா முழுக்க பல பகுதிகளிலிருந்தும், டில்லிக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களை, ‘நேர்முகத்தேர்வே உனக்குக் கிடையாது’ என்று திருப்பி அனுப்புவது சரியானதா?
‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) என்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்பதனைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகின்றார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் சேரக்கூடாது என்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக, பிற்படுத்தப்பட்டவர்களின் பெற்றோர் ஆண்டு வரு மானம் ஆண்டுக்கு ரூ 8 இலட்சம் என்று பல ஆண்டுகளுக்கு முன் னால் நிர்ணயக்கப்பட்டதே இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
04.12.2025 விண்ணப்பிக்க கடைசித் தேதி. விண்ணப்பித்து விட்டு, 06.12.2025 அன்று ஓபிசி சான்றிதழ் வாங்கியிருக்கும் கல்வியியல் பட்டதாரியை ‘நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளத் தகுதியில்லை’ என்று பேனாவில் எழுதி வெளியேற்றும் அதி காரத்தை கேந்திரிய வித்தியாலயா அலுவலர்களுக்குத் தந்தது யார்?
தேர்வு பற்றிய அறிவிப்பு வந்த 21 நாட்களுக்குள் விண்ணபித்து, இரண்டு கட்டத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பட்டதாரிகள், நடப்புத் தேதியில், நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிக்கு முன் வாங்கிய ஓபிசி சான்றிதழ் அளிப்பதில் என்ன முறைகேடு நிகழ்ந்து விடப்போகிறது.
ஓபிசி சான்றிதழ் தமிழ்நாட்டுக்குள் பயன்பாடற்றது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியல் உள்ளது. ஓபிசி சான்றிதழ்கள், ஒன்றிய அரசு தொடர்புடைய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு பெறுவதற்கு உள்ளவையே! அதற்காக மட்டுமே ஓபிசி சான்றிதழ் மாநில அரசால் வழங்கப்படுகிறது. பிறகு தனியாக ஒரு வடிவத்தில் வேண்டும் என்று ஒன்றிய அரசு கோருவதேன்? அல்லது ஒன்றிய அரசு கேட்கும் வடிவத்தில் மாநில அரசு வழங்குவதில்லையா? ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு வடிவத்தில் சான்றிதழ் கேட்குமா? இதற்கு அலைவதுதான் ஒரு மாணவரின், இளைஞரின் வேலையா? எடுத்துக்காட்டாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருமானத்தின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2026 வரைக்குமான ஓபிசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இவர் ஓபிசி என்சிஎல் (OBC NCL-Other Backward Class Non Creamy Layer) வகுப்பில் இருந்தார் என்று இன்றைய தேதியிட்டு சென்ற ஆண்டிற்கான வருமான வரிச்சான்றிதழ் அளிப்பது ஏன் செல்லாது? இப்படிக்கூட வாங்கிவந்து கொடுங்கள் என்று அவகாசம் ஏதும் கொடுக்காமல் அவர்களை விரட்டி அடிப்பது ஏன்? அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டைக்காய் போல இதர பிற்படுத்தப்பட்டவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள், அவர்களை என்ன செய்தாலும் கேட்பதற்கு இந்தியாவில் நாதியில்லை என்னும் எண்ணம்தான் இப்படி எல்லாம் ஒன்றிய அரசின் அதிகாரிகளை ஆட்டம் போடச்செய்கிறதா?
ஒன்றிய அரசின் 2016-ஆம் ஆண்டு ஆணையை ஒன்றிய அரசின் துறைகளே மதிக்கமாட்டார்களா? அல்லது அந்த ஆணை வெறும் கண் துடைப்புக்காகவா?
தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். இந்த கே.வி.எஸ் போன்ற பள்ளிகளில் எத்தனை சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் பணியில் இருக்கிறார்கள் என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடச் செய்ய வேண்டும். அரசு ஆணைக்கு முரணாக, கட் ஆப் தேதி என்னும் நெருக்கடிகளைத் தருவதை விடுத்து, சென்ற ஆண்டு அல்லது நடப்பு ஆண்டு ஓபிசி கிரிமிலேயர் அல்லாதவர் சான்றிதழ் (OBC- Non Creamylayer) வைத்திருப்பவர்களை அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி என்றால் கிள்ளுக் கீரையா?
