நலத்தோடு வாழ்வோம்! நோயற்று வாழ்வோம்!!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ப

ுத்தகம் ஒன்றை எனக்கு அண்மையில் அளித்தார்கள்.  அந்த நூலின் தலைப்பு,   “An Operating Manual for the Human Body, Protocols ” – Andrew D.Huberman, Ph.D. – ‘with Jessica’!

மிக அற்புதமாக எளிய முறையில் அவர் களுடைய அனுபவத்தைப் பதிவு செய்து, எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில், அய்ந்து அம்சங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதைவிட அந்த முன்னுரையிலேயே Andrew D.Huberman அவர்கள் தெளிவாக, எளிமையாக வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு, நல்ல விளக்கங்கள் தருகிறார்.

நமக்கெல்லாம் தெரியும், படிக்கிறோமே தவிர, அதை வாழ்க்கையிலே கடைப்பிடித்து ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுவதில்லை. சிறு பிராயத்தில் இருந்து  ‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்ற வார்த்தையை பலமுறைப் படித்தவர்கள் தான், நாம். ஆனால், என்ன நடக்கிறது? அதை நடைமுறைப்படுத்துகிறோமா? அதைப் பற்றி கவலைப்படுகிறோமா? நாம் விதிகளிலிருந்து விலகும் போதும், நம்முடைய இஷ்டத்திற்கு, நம் விருப்பத்திற்கும், ஆசைக்கும் கட்டுப்பட்டு, நம்மை நாமே பாதிக்க வைத்துக் கொண்டிருக்கக்கூடிய நிலை  விரும்பத்தக்கதல்ல. பிற்காலத்தில் நோயை சுமந்து கொண்டு அவதிகள் பலவற்றிற்கு ஆளாகாமல், வாழ்க்கையை ஒழுங்குமுறையாக ஆக்கிக் கொள்வது சிறப்பானது. அதன் மூலமாக ‘‘வருமுன்னர் காப்போம்’’  என்ற அந்த சிறந்த தத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கலாம்.

எளிய முறையில், ஆறு அம்சங்களில் அதை விரிவாக்கி, விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. முதலாவது அவர் கொடுக்கிற முக்கியத்துவமே, ‘‘தூங்குங்கள், சிறப்பாக!’’ (‘Sleep well’) என்று சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் நாமெல்லாம் தூக்கத்தை  அலட்சியமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ‘‘நான் இரவெல்லாம் கண்விழித்தேன்’’ என்றெல்லாம் சொல்லுவதிருக்கிறதே, அது பயனற்றதாகவே ஆகும். அதுவே நம்முடைய வாழ்க்கைக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியமாகவும் ஆகிவிடும். தூக்கமில்லா இரவும், குறைந்த தூக்கமும், அதிக நேரம்  குறிப்பாக, தூங்கும் உரிய நேரத்தைத் தாண்டியிருப்பதும் மிகப்பெரிய கேடு என்பதை நன்றாக விளக்குகிறார்கள்.   உதாரணமாக, நம்மிலே பலர், ‘‘இரவெல்லாம் படித்துப் பிறகுதான் தூங்கினேன்’’ என்று சொன்னால், அவருடைய ஆயுளை அது பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனென்றால், அறிவியல் பூர்வமாக, மருத்துவவியல் பூர்வமாக ‘மெலட்டோனின்’ (Melatonin) என்று மூளையைப் பொறுத்தவரையில், சிறப்பாக உருவாகக் கூடியது. அதற்குத் தூக்கத்தின் மூலம், 2 மணிக்கு மேல் தான் அவை எல்லாம் தீவிரமாக ஆகிறது. அந்த நேரம் உச்சக்கட்டம். அதையெல்லாம் தாண்டி நாம் விழித்திருத்தல் என்பது அந்த மெலட்டோனின் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பு நமக்கு அதிகமாகக் கிடைக்க முடியாதாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, தூக்கத்தைக் குறைத்தால் அது எல்லா வகையிலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் சாதாரணமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்!

மருத்துவர்களிடம் சென்றால்கூட, ‘‘பசி எடுக்கிறதா? தூக்கம் வருகிறதா?’’ என்றுதான் அவர் முதல் கேள்வியாகக் கேட்பார். ஒன்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன்,  அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் சிறப்பாக உண்ண வேண்டும். “Eat clean, but not too much” அவ்வளவுதான். அதாவது, சுலபமாக நீங்கள் நல்ல உணவு – தூய உணவுகளைச் சாப்பிடுங்கள், விருப்பமாக. சாப்பிடும்போது அதிகமான அளவு, மூக்கைப் பிடிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடாதீர்கள். ‘‘மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டேன், ரொம்ப நிம்மதியா இருந்தது’’ என்றெல்லாம் பெருமையாகப் பேசிக் கொள்வதினாலே பயனில்லை. எப்பேர்ப்பட்ட விருந்தாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட சிறப்பு உணவாக, சுவை தரக்கூடிய உணவாக இருந்தாலும், திட்டமிட்ட ஒரு கட்டுப்பாடு நமக்குள்ளே ஏற்படுவது உடல் நலத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய ஆயுள் காப்பீடாகும்.  அதை நன்றாக நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எப்படி என்று சொல்வதற்கு ஒரு சின்ன உதாரணம்,  நல்ல உணவாக, சுவைமிக்க உணவாக இருந்தாலும் கூட 100 விழுக்காடு பசித்திருக்கிற இடத்திலே, வயிற்றிலே 80 விழுக்காடு வரையிலே சாப்பிடலாம். ஒரு 20 விழுக்காட்டை காலியாக விடுங்கள். பல்வேறு பிரச்சினைகள் ஏற்படாமல் நிகழ்காலத்திலும் பாதுகாப்பாகத் திகழும், வருங்காலத்திலும் அது நமக்கு மிக முக்கியப் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்தது, மூன்றாவது ஓர் எளிய முறையாக அவர் கூறுவது, “Stay hydrated” என்று. அதாவது குடிக்க வேண்டிய தண்ணீரை, நிறைய குடிக்க வேண்டும். பல பேர்,  தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். அது இன்றைய காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக, இப்போது ‘எல்–நினோ’ மற்றதெல்லாம் வரும்போது, வறட்சி என்றெல்லாம் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, போதிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, வயது மூத்தவர்கள், முதியவர்கள் நிறைய தண்ணீரைக் குடிக்கவேண்டும். இல்லையானால், அவர்களுக்கு அரிப்பு ஏற்படும்; அலர்ஜி என்று சொல்லக்கூடிய ஒவ்வாமை ஏற்படும். அதன் மூலமாக அவர்களுக்குப் பல சங்கடங்கள் வரும். தோல்கள் எல்லாம் காய்ந்து போனதாக இருக்கும். அதனால், பல்வேறு விதமான சங்கடங்களை உருவாக்கும்.  அவற்றைத் தடுப்பதற்கு உணவு முறை மூலமாகவே செய்வதற்கு எது சிறப்பானது என்று சொன்னால், தேவையான தண்ணீரை, அடிக்கடி தண்ணீரைக் குடிப்பது மிக முக்கியம்.

ஆனால், இதிலும்  மிகத் தேவையான கவனம் – ‘அதிகத் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்களே என்று நீரிழிவு நோயான சர்க்கரை நோய் இருக்கிறவர்கள் அதிகமாகத் தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதிகத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது பொது விதி. ஆகவே, நீரிழிவு மருத்துவப் பயனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுடைய மருத்துவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, அதன்படி நடந்துகொள்ளவேண்டும். சில பேருக்கு ஓரளவிற்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருக்கும்.

ஆகவே, இந்தப் பொது விதியை அதற்குப் பயன்படுத்தக் கூடாது.  ஆகவேதான், மருத்துவர்கள் குறிப்பாக சர்க்கரை வியாதிக்குச் சிகிச்சை கொடுக்கக்கூடிய அவரவருடைய மருத்துவர் இருப்பார்கள். இதிலே, அந்த மருத்துவருடைய யோசனைதான் மிக முக்கியமானது.

அதற்கு  அடுத்தது, இந்தப் புத்தகத்தின் அய்ந்தாவது பகுதியில் உடற்பயிற்சி.  ‘உடற்பயிற்சி’ ஒவ்வொருவருக்கும் தேவை. ஆனால், இந்த உடற்பயிற்சி என்பது, அது அவரவர்களுடைய வயதுக்கும், அவரவர்களுடைய உடல்நிலையைப் பொறுத்தும் செய்யப்பட வேண்டிய ஒன்று. அதுவும் மருத்துவர்களோடு கலந்தாலோசித்து செய்யவேண்டும் என்பது இருக்கிறதே, அது  மிக முக்கியமான ஒன்றாகும்.

நடைப்பயிற்சி என்பதும் உடற்பயிற்சிதான். அதே மாதிரி, ‘எல்லோரும் ஓடுகிறார்கள்; ஆகவே, நானும் ஓடுவேன்’ என்று வயதானவர் ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஆகவே, சகட்டுமேனிக்கு ஒரு விதியை நாம் பின்பற்ற முடியாது.   அதுபோலவே முதியவர்களுக்குக் கூட எளிய வகையிலே, நல்ல ஆய்வு முடிவுகள்பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மிகப் பாதுகாப்பான ஒன்று நடைப்பயிற்சி. எனவே, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடமாவது நடங்கள்! வாரத்தில் நான்கு நாள்களாவது நடங்கள்! நல்ல அளவிற்கு வேகமாக நடங்கள்! அதிவேகமாக நடப்பது என்பதெல்லாம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்ததாகும்.  அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், மற்ற சிகிச்சைக்கு உட்பட்டு இருப்பவர்களுக்கு மருத்துவர் என்ன  சொல்கிறாரோ, அதன்படி செய்வதுதான் நல்லது. அதைவிட்டுவிட்டு, பொத்தாம் பொதுவாக, ‘‘குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்’’ என்று கொள்ளத் தேவையில்லை.

ஆறாவது தலைப்பில்,  நண்பர்கள் மத்தியில், நாம் நாள்தோறும் புழங்கக்கூடியவர்கள் மத்தியில், சமூக உணர்ச்சியோடு, நல்ல மகிழ்ச்சியாகப் பழக வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். நாம் பெற வேண்டிய மகிழ்ச்சியைப்  பெறவேண்டும். மிகப்பெரிய  ஒரு நட்பு வட்டத்தை, நம்பிக்கைக்கு உரியவர்களை – அது பெரிய அளவில் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்பிக்கைக்கு உரியவர்கள், மனம் திறந்து பேசக்கூடியவர்கள், மற்றவர்கள் – அவர்களோடு நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தனிமையிலே, உங்களுடைய வாழ்க்கையைத் தனிமைச் சிறையில் அடைத்துக்கொள்வீர்களேயானால், அது உங்களுடைய சமூக உணர்வையும், மற்றவர் களையும் மிகப்பெரிய அளவிற்கு வளர்த்து விடாது.   ஆகவேதான், தனிமைத் தவிர்த்திட மிக முக்கிய மாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாம் நாம் பூர்த்தி செய்து விட்டோமேயானால், அன்றாட வாழ்க்கையில் எதையும் எளிமையாகச் செய்யலாம். ஒரு 10, 20 தடவைகள்  கைகளைத் தூக்குவது,  வயதானவர்கள் அந்த உடற்பயிற்சியைச் செய்வது; அதே மாதிரி  நாள்தோறும் கடைப்பிடித்தால், நல்ல தூக்கம், நல்ல அளவிற்கு உணவு, அளவோடு உணவு, மிதமான உணவு; அதுபோலவே, தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிப்பதும்!

ஒவ்வொரு நாளும் வாய்ப்பு இருக்கும்போது,  சூரிய வெளிச்சம் உங்கள் உடலில் படுமாறு நில்லுங்கள்.   சூரிய வெளிச்சத்தையும், காற்றோட்டத்தையும் சுவையுங்கள், ரசியுங்கள், அனுபவியுங்கள். அப்படி சுவைத்து வந்தால், நம்முடைய உடல்நிலை சிறப்பாக அமையும். ஆயுளும் நீளும்; மகிழ்ச்சியும் கூடும்!

‘இளமையில் கல்’ என்று சொல்லும் போது,  வயது எந்த வயதாக இருந்தாலும், இவையெல்லாம் பொதுவானவை. அது இளைஞனாக இருந்தாலும் சரி, முதியவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் அத்தனை பேரும் மிக முக்கியமாக இதைப் பின்பற்றினால், நலவாழ்வு நிச்சயம். நோயற்ற வாழ்வாக நம்முடைய வாழ்க்கை அமையும்.  அதுவே குறைவற்ற செல்வமாகவும் இருக்கும்.

‘மன இறுக்கம்’ (Stress) என்பதே கூட, மேலே சொன்னவற்றைக் கடைப்பிடித்தால், மறைந்தே போகும். நல்ல அளவுக்குத் தூங்கி எழல்வேண்டும். 8 மணி நேரத்துக்குக் குறைவாக தூக்கத்தை எப்போதும் குறைத்து விடக்கூடாது. தூக்கத்தை  ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாக ஆக்க வேண்டும்.

நன்றி, நலம் பெறுக!

நலத்தோடு வாழ்வோம்! நோயற்று வாழ்வோம்!! ‘‘நோயற்ற வாழ்வே நமக்குக் குறைவற்ற செல்வம்’’ என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

(பொறுப்புத் துறப்பு: புத்தகத்துக்குப் பதிப்புரிமை இருக்கும் காரணத்தால், அதற்குள் நாம் செல்லவில்லை. நம்முடைய கருத்தை மட்டுமே எழுதியுள்ளோம்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *