சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (1)

ிங்கப்பூர் நாட்டில் செம்மொழி தமிழுக்கும், அதே போன்று, மற்ற மூன்று மொழிகளான மலாய், சீனா, ஆங்கிலத்திற்கும் சமத் தகுதி, சம வாய்ப்பும்  உள்ளது. ஆட்சி நடைமுறைகளுக்கு ஆங்கிலம் என்பதும் – மூன்று இன மொழி மக்களுக்கும் பொதுவான சமனிய வசதி, வாய்ப்புகள் ஏற்பட வழிவகுப்பதும் ஆட்சிக் கொள்கை!

பெரும்பான்மையைக் கணக்கெடுத்தால் சீனமொழி அதில் 2, 3 முக்கிய பிரிவுகள் உண்டென்றாலும் மொத்தம் 70 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது என்பதால் அல்லது புராதன கலாச்சாரம் என்பதற்காக, அடுத்த மலாய் மொழியையே ஆட்சி மொழியாகத் திணிக்காத ஒரு நல்ல கொள்கை. அதற்கு நவீன நாடக்கிய அதன் நிர்மாணச் சிற்பி போற்றுதலுக்குரிய லீ குவான்  யூ அவர்கள்தான் நல்ல சிறந்த பாதையை வகுத்துத் தந்தார்.

அதற்காக நமது இந்திய நாட்டில் இல்லாத ஒரு வசதி – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஏறினால் ஆங்கிலத்திலும் மற்ற மொழி தெரியாத பயணிகள் பயன் பெறும் வண்ணம் நல்ல தமிழிலும் விளக்கும் வண்ணம் தமிழில் அறிவிப்பு வந்து நம் காதுகளில் தேன் பாய்ச்சும்!

பாரத நாட்டில் அதற்கோர் வாய்ப்பில்லை – அறிவு, ஆளுமைப் பஞ்சம்! செம்மொழி தமிழைத் ஊக்குவிக்க ஒவ்வொரு நாளிலும் அரசு ஆதரவுடன் தமிழ்மொழி வாரம், பண்பாட்டு மொழி வளர்ச்சிக்கான பல அமைப்புகள், அதனைப் பற்பல வழிகளில் ஊக்குவிக்கும் தகைமை மிக்க அந்த அரசின் விரிந்த பார்வையும், தனித்த உதவிகளும் வியக்க வைப்பன!

இலக்கிய ஆர்வலரும், தமிழவேள் கோ. சாரங்கபாணி நற்பணி மன்றத்தினை  தோற்றுவித்த நண்பருமான எம். இலியாஸ் அவர்கள், ‘செம்மொழி’ என்ற பெயரில் நல்ல தரமிக்க இதழைப் பொலிவுடன் தவறாது மூன்று திங்களுக்கு ஒரு முறை வெளிவரும்  இதழாகக் கொண்டு வந்து, தமிழ்த் தொண்டு புரிவதை, லாபம் கருதாமல் செய்து வருகின்றார் பல ஆண்டுகளாக!

அவ் வேட்டின் 2026 ஜனவரி  – மார்ச் இதழில் ‘சொல்வேந்தர்’ சுகி.சிவம் அவர்களைப் பேட்டி கண்டு (ஒரு நீண்ட பேட்டி என்றாலும் படிப்பதற்குச் சலிப்பின்றிச் செல்லும் பேட்டி) வெளி வந்துள்ளது.

பொதுவாகத் தமிழ்நாட்டு தற்காலத் தலை முறையினர் எதையும் விருப்பு வெறுப்பின்றி, துணிவாக ஆய்வுப் பார்வையுடன் பார்த்திட, ‘பக்குவமாக’ அதனை வெளியிட்டு ‘கனியிருக்க காய் கவரா’ வகையில் கூறும் அறிவு நாணயமிக்கப் பெரு மகன் ஆவார்! அதனை முழுவதும் படித்தேன்.

‘‘ புகழ்ந்தாலும்  எல்லையில்லை; இகழ்ந்தாலும் எல்லையில்லை’’ என்ற சில எழுத்துப் பெரு மக்களின் அணுகுமுறை அவரிடம் எப்போதும் கிடையாது! இதழ் ஆசிரியர் எம்.இலியாஸ் அவர்களது கேள்விகளுக்கு மதிப்புமிகு சுகிசிவம் அவர்களது விடை வலிவாகவும், உண்மைகளைக் கூறத் தயங்காத அவரது உணர்வும் வெளிப்படும் வகையில் உள்ளதும் பாராட்டத்தக்கது!

அதில் உள்ள சில முக்கிய பகுதிகள் நமது வாசக நேயர்களின் சிந்தனைக்காக முன் வைக்கிறோம். கற்க கசடு அற!

‘‘இன்றைய நிலையில் சமயம் குறித்த அறிவும், உணர்வும் ஏன் தேவை?

அதாவது மதப்பற்று இருக்கிறது. அதில் உணர்வும், உணர்ச்சியும் இருக்கிறது. ஆனால் மத அறிவு, மதத் தெளிவு, தன் சமயம் குறித்த உண்மையைக் கண்டறியக்கூடிய உள்நோக்கிய பயணம் இன்று மிகவும் குறைவாகவே இருக்கிறது. எந்த ஒரு தர்க்கமானாலும் தம் மத நூலில் இருந்து ஒன்றைத் தேடிக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேட்கைதான் மக்களிடம் மிகுதியாக இருக்கிறது.

அதில் இருக்கும் சிக்கல் என்னவெனில், எல்லா மதங்களுமே ஏதோ ஓரிடத்தில் நம்மை ஒரு குறிப்பிட்ட இடம் வரை நம்மைக் கூட்டிக் கொண்டே செல்லும். பிறகு ஒரு முட்டுச் சந்தில் நம்மை நிறுத்தி விடும். இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று நமக்கு தெரிய வேண்டும். இந்தக்  கூற்றை ஒத்துக் கொள்வதற்கு ஒரு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

அந்த உணர்வு தெரிவதற்கு சொந்தமான விழிப்புணர்வு தேவை. அதை enlightment என்று சொல்லலாம். என்லைட்மெண்ட் என்பது யாரோ ஒரு சாமியாருக்கு மரத்தடியில் ஏற்பட்டு, பின்னாடி பல்பு சுற்றுவது அல்ல. எல்லோருக்குமே எல்லா அம்சங்களிலும் என்லைட்மெண்ட் உண்டாக வேண்டும்.

நமது மத நூலிலேயே சொல்லப்பட்டு இருந்தாலும் கூட, இந்த இடம் எனக்கு சரியாகப் படவில்லை என்ற ஓர் உள் ஒளி, அதை ஏற்படுத்த மதங்கள் மறுக்கின்றன. நாங்கள் போடுவதே விளக்கு. நாங்கள் தரும் வெளிச்சத்தையே பார் என்றுதான் மதங்கள் கூறுகின்றனவே தவிர, அவரவரைச் சிந்திக்க விடுவதேயில்லை.

உலகம் முழுக்க சூரியஒளி பல்கிப் பரவி இருக்கலாம். ஆனால் என் கண் குருடாக இருந்தால் அதை எப்படி நான் பார்க்க முடியும்? தற்காலத்தில் யாருக்கும் உள் ஒளியே வெளிப்படுவதில்லை. அதனால் பல தவறுகள் புரிவதற்கு அதுவே காரணமாகிவிடுகிறது.

ஒருவன் தன் மதத்தில் உள்ள கடவுளைத் தெரிந்து கொள்வதற்கு முன், தன் மதத்தில் இருக்கும் பிழைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் சொல்ல வருகிறேன். அது பிழை என்று துணிந்து முடிவெடுக்கக்கூடிய ஒரு துணிச்சல் அவனுக்கு வர வேண்டும். அது இன்று மதங்களைத் தீவிரமாக பின்பற்றும் யாரிடமும் பெரும்பாலும் இல்லை.

எனவே மதங்களில் இருந்து நான் கொஞ்சம் தீவிரமாகவே அகன்றுதான் இருக்கிறேன். மதத்தின் வழியாகத்தான் நான் பயணப்பட்டேன். ஆனால் ஒரு எல்லையில் அது நின்று போய்விட்டது என்பதைக் கண்டறிந்தேன். உடனேயே பிற மத நூல்களையும், அவர்களின் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துப் படித்தேன். அவர்களும் அதே இடத்தில்தான் தடுமாறுகின்றனர் என்பதைப் பிறகு கண்டறிந்தேன்.

அதன் பிறகுதான் நாம் உண்மையை உண்மையாக உணர வேண்டும் என்று தீர்மானிததேன். அந்தத் தீர்மானம் எனக்கு வேறு வகையான சில செய்திகளையும், புரிதல்களையும் கொடுத்தது. அதன் பிறகு அவரவர் அவரவரது மத நம்பிக்கை, கோட்பாட்டின் அடிப்படையில் இருந்து விட்டுப் போகட்டும்; அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை; அதையும் தாண்டி ஓர் ஆகாயம் இருக்கிறது; அதை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *