இந்நாள் – அந்நாள்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கவியரசு முடியரசன் பிறந்தநாள் இன்று (07-10-1920)

தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர் கவியரசு முடியரசன். இவர் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாளில் பிறந்தார்.

‘வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்

தீத்திறக் காலை தெளிமருந்தே – மூத்த

முடியறச ரின்றி மொழிவனப்புச் செய்யும்

முடியரசன் செய்யுள் முறை’

என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவிஞர் முடியரசன்.

இவர் தொடக்கத்தில் காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார்.

இவருடைய  கவிதைகள் பல தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன. 1962 இல் திரைத்துறையிலும் ஈடுபட்டு ‘கண்ணாடிமாளிகை’ என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார்.

தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுக் கொள்கையும் கொண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் பாட்டுப் பறவை யாயக் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன்.

அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.

இவருடைய கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழ்நாடு அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது.

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பட்டம் அளித்துச் சிறப்பித்தார் அறிஞர் அண்ணா. 1950 இல், கோவையில் நிகழ்ந்த முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் இவர் பாடிய கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இவரது ‘முடியரசன் கவிதைகள்’ என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின் முதல்பரிசு கிடைத்தது. ‘வீரகாவியம்’ நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறப்புப்பரிசு கிடைத்தது. 1987 இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1988 இல் கலைஞர் மு. கருணாநிதி, என்.டி. ராமராவ் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் இவருக்கு ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது. ‘கவியரசு’ என்னும் பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கினார். ஆசிரியப் பணிக்காகத் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார். இலக்கியப் பங்களிப்புகளுக்காக தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றவராவார்.

இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளை சாகித்ய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பள்ளிப் பாட நூல்களிலும், சென்னை மாநிலக் கல்லூரி பாடத் திட்டத்திலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

கவியரசர் முடியரசனார் தமது 78ஆம் வயதில் 03.12.1998ஆம் நாளில் மறைவுற்றார்.

தகவல் :  பாணாவரம் பெ. வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *