இந்தியாவிற்கே சமூக நீதியில் முன்னோடி ‘‘தமிழ்நாடு’’ 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு (31சி) பெற்ற நாள் இன்று (19.07.1994)
தமிழ்நாட்டில் “கம்யூனல் ஜி.ஓ” எனப்படும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928 ஆம் ஆண்டி லிருந்தே இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த சமயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பி னருக்கும் இந்த கம்யூனல் ஜி.ஓ.வின் மூலம் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது.
அப்போது பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்களுக்கு 16%, முஸ்லிம்க ளுக்கு 16%, ஆங்கிலோ – இந்தியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு பார்ப்பன மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.
அதன்பிறகு அரசியலமைப்பின் பிரிவு 15 இல் முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடும் அமலுக்கு வந்தது.
முதலமைச்சர் கலைஞரிடம் “49 சதவீதம் வரை உயர்த்தலாமே – சட்டம் இடம் கொடுக்குமே” என்றார் தந்தை பெரியார்.
கலைஞர் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை அமைத்தார். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970 இல் அளித்தது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் ரூ. 9 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனறு உச்சவரம்பை அறிவித்துப் பொரு ளாதார அளவுகோலைப் புகுத்தினார்
எம்.ஜி.ஆர்.
திராவிடர் கழகம் கடுமையாகப் போராடியது – வருமான உச்சவரம்பு ஆணையை எரித்து, அதன் சாம்பலைத் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியது. தொடர்ந்து 1980 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இட ஒதுக்கீட்டிற்குப் பொருளாதார வரையறையை நிர்ணியித்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் எனக் கருதிய எம்.ஜி.ஆர். பொருளாதார வரம்பை நீக்கினார். அத்தோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்அளவை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். இத னால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 68 சதவீதமாக உயர்ந்தது.
1989 இல் கலைஞர் தலைமையி லான தி.மு.க. அரசு, 50 சதவீத பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டுருக்கும் என ஒதுக்கீடு செய்தது. நீதிமன்ற ஆணையின்படி, பழங்குடி யினருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாக உயர்ந்தது.
50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டது. அதனைப் பாதுகாக்க, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 31 சி பிரிவின் கீழ் மாநில அரசே சட்ட மசோதாவை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று – அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்தால், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை நீடிக்கும்; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, அதற்கான சட்ட முன் வடிவைத் தயாரித்துக் கொடுத்தார் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், இன்றைய தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதை ஏற்றுக் கொண்டார் அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா.
அதன்படி, 69 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நீடிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என நவம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் 26 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கூடிய சட்டப் பேரவை, இட ஒதுக்கீட்டிற்கான தனிச் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
1994 ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமை யில் பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, ஜூலை 14 ஆம் நாள் பல்வேறு அமைச்சகங்களுடன் பிரதமர் நரசிம்மராவ் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், 19.7.1994 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஒப்புதல் வழங்கினார். 9 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டு, தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் முழுமையான வழிகாட்டுதலில், இன்று வரை நாட்டிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ள முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
