பெண்கள்பற்றிப் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இரட்டை அர்த்தங்கள், நையாண்டிகள் எதிர்விளைவு களையே உருவாக்கும். தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்று (15.9.2026) அறிஞர் அண்ணா பிறந்த நாள். பொதுவாழ்வில் உள்ள எந்தக் கட்சி, இயக்கத்தவர்கள் ஆனாலும் பண்பாட்டைக் காப்பாற்றும் வகையில், ஓர் உறுதியை எடுத்துக் கொள்வது மிகவும் விரும்பத்தக்கது.
ஏற்கத்தக்கவை அல்ல
அரசியலில் கட்சிகள்பற்றியோ, கொள்கைகள் பற்றியோ யாரும் விமர்சிக்க உரிமை உண்டு. என்றாலும், விமர்சிக்கும்போது, மேடைப் பேச்சுகளிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ தரந்தாழ்ந்து, தனி மனிதத் தாக்குதல்கள், உள்நோக்கம் கொண்ட உடல் மொழிகள், பதில் கூறுகிறோம் என்ற வாய்ப்பில் தேவையின்றி அவர்கள் வீட்டுப் பெண்கள், பிறப்புப்பற்றி யார் எக்கட்சியினர் செய்தாலும், ‘ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகள்’ எவையானாலும் ஏற்கத்தக்கவை அல்ல.
தனது ஆதரவாளர்களின் கைதட்டல், மேஜை தட்டல் இவற்றைத் தாண்டி, அருவருத்து, முகம் சுளிக்கும் பொதுவானவர்கள் பலர் உள்ளனர்.
இப்படிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; பதிலுக்குப் பதில் என்பது போன்ற வீண் சர்ச்சைகள், சொல்ல வந்த உண்மைகளை மக்களிடம் மறைத்துவிடுவதோடு, அந்தக் கட்சிக்கும் மக்களின் வெறுப்புதான் மிஞ்சும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்!
பேசிவிட்டு, ‘உணர்ச்சியால்’ என்பது சரியான விளக்கமாகாது; உணர்வுடன் பேசலாம்; உணர்ச்சியால் எல்லை தாண்ட – அதுவும் அனுபவம் மிக்கவர்கள் பேசுவது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
பெண்கள்பற்றிப் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இரட்டை அர்த்தங்கள், நையாண்டிகள் எதிர்விளைவுகளையே உருவாக்கும். தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2026
