ஜகார்த்தா, செப். 7- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து 6 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் வான் பரப்பில் பரவியதை அடுத்து, ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா பன்னாட்டு விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணி முதல் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் போன்ற பன்னாட்டு நகரங்களுக்கான சேவைகளும், பாலி, சுராபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. பயணிகள் விமான நிலையங்களில் தங்களின் பணத்தைத் திரும்பப் பெறவும், உடைமைகளை மீட்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து செயற்கைக்கோள் படங்களின் மூலம் இரு பெரிய சாம்பல் மேகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒரு சாம்பல் மேகம் சுமார் 20,000 அடி (6,100 மீட்டர்) உயரத்துக்கு எழும்பி ஜகார்த்தா, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதித்துள்ளது.மற்றொரு பெரிய சாம்பல் மேகம் சுமார் 50,000 அடி (15,200 மீட்டர்) உயரத்துக்கு மேல் எழும்பி, சுண்டா நீரிணை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மேல் பரவி வருகிறது.
புதிய உலக வரைபடம்:
அய்.நா. தீர்மானத்துக்கு
இந்தியா ஆதரவு; அமெரிக்கா எதிர்ப்பு!
ஜெனிவா, செப். 7- தற்போதைய உலக வரைபடத்தில் உள்ள தவறுகளைத் திருத்தி மிகத் துல்லியமான புதிய வரைபடம் வெளியிடக் கோரும் அய்.நா. பொதுச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
193 நாடுகளைக் கொண்ட அய்.நா. பொதுச் சபையில் டோகோ நாடு முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன.
எஸ்டோனியா, ஜார்ஜியா, லித்துவானியா, மால் டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டுமே வாக்களித்தது.
தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மெர்காதோர் என்ற புவியியலாளர் 16-ஆம் நூற்றாண்டில் கடல் வழிப் பயணங்களுக்காக உருவாக்கிய உலக வரைபடமே கல்வி, ஊடகம், எண்ம மற்றும் அதிகாரபூர்வப் பதிவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரைபடம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளை சிறியதாகவும், தொலைவில் உள்ள நாடுகளை மிகப் பெரிதாகவும் காட்டுகிறது.
இதனால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியப் பகுதிகளின் பரப்பளவு சிறியதாக காட்சியளித்து சமநிலையற்ற உலகப் பார்வையை ஏற்படுத்துகிறது. எனவே, பல்வேறு தவறுகளுடன் காட்சியளிக்கும் பழைய உலக வரைபடத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய வரைபடத்தை தயாரித்து வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானத்தை வரவேற்று அய்.நா.வுக்கான நிரந்தர இந்தியக் குழுவின் முதல் செயலர் ரகு புரி பேசியதாவது: உலக புவியியல் மற்றும் பிற நாடுகள் குறித்து சமூகம் புரிந்துகொள்வதில் வரைபடங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தீர்மானம் கண்டங்கள் மற்றும் நிலப்பகுதிகளின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும் சம பரப்பு வரைபடத்தை உருவாக்கவே கோருகிறது என்று இந்தியா நம்புகிறது.
புதிய வரைபடத்தால் நாடுகளின் வடிவம், திசை அல்லது தொலைவு ஆகிய அம்சங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும். எனவே, புதிய வரைபட வடிவமைப்பு தொழில்நுட்ப ரீதியாகவும், நடுநிலையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனடிப்படையில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கிறது என்றார்.
தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த அய்.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் அமெரிக்க துணைப் பிரதிநிதி யரீனா ஃபெரன்செவிச் பேசுகையில், ‘பன்னாட்டு அமைதி, வளமை, நல்லுறவு போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை மாற்றியமைப்பதில் அய்.நா.கவனம் செலுத்துவது ஏற்புடையதல்ல; அய்.நா. அமைப்பு மீதான நம்பகத் தன்மையை இழக்க இதுபோன்ற தீர்மானங்களே காரணம்’ என்றார்.
அமெரிக்காவில் இந்தியர் கைது:
பீட்சா கடையில் போதைப்பொருள் விற்பனை!
வாசிங்டன், செப். 7- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், டினுபா பகுதியில் பீட்சா கடை நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவல் ப்ரீத் சிங் என்பவர், உணவகத்தின் மறைவில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் பெருமளவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18-ஆம் தேதி, கவல் ப்ரீத் சிங்கின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 40 பவுண்டுக்கும் அதிகமான ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப்பொருள், 3 சட்டவிரோத துப்பாக்கிகள், 10,000 அமெரிக்க டாலர் ரொக்கப் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்காக அவருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், அவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடிக்கும் மேல்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
