புதுடில்லி, செப்.29 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என புகார் எழுந்தும் அவர் எப்படி பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்? என விளக்கமளிக்கவும் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் ராகேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் மற்ற இரு ஆணையர்களும் குறைந்தது 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆவது பிரிவின்படி ‘தேர்தல் ஆணையத்திற்கு கூட்டு முடிவெடுக்கும் அதிகாரம்தான் உள்ளது. அப்படியிருக்க, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தார்? அவர் எப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்?’ என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் நீதிப் பேராணை கோரப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் வரை தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை ஆணையம் அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
