நீதித்துறை நியமனங்களும், நீதிபதிகளின் கருத்துகளும் வெளிப்படுத்தும் உண்மைகள்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நீதித் துறையில் பா.ஜ.க. அரசின் தலையீடு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆனால், நீதித் துறையை விமர்சிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் கருத்துச் சொன்ன ஒன்றிய அரசு தரப்பு தலைமை வழக்குரைஞருக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை இன்னும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா.

தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும்  தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என்று கடந்த 2023-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், அவ்வாண்டு இறுதியிலேயே இது தொடர்பாகச் சட்டம் இயற்றிய ஒன்றிய அரசு, இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, ஓர் ஒன்றிய அமைச்சர் அக் குழுவில் இடம்பெறுவார் என்றது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு  கடந்த வாரம், செப்டம்பர் 23 அன்று உச்சநீதிமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. அதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததால், அச் சட்ட விவகாரத்தை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்த தனது கருத்தைப் பதிவு செய்தார் நீதிபதி திபங்கர் தத்தா.

இவ் வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதித்துறை நியமனங்களில், கொலீஜியம் முறைப்படி, நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள் என்ற நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையர்களையும் நியமனம் செய்வதில் நிர்வாகத் துறை உறுப்பினர்களின் (பிரதமர், ஒன்றிய அமைச்சர்) ஆதிக்கம் கொண்ட குழுவை அமைப்பதில் தவறில்லை என்று வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி திபங்கர் தத்தா, “நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள்’ என்று சொல்லப்படுவது ஒரு கட்டுக்கதை. ஏனெனில், இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நிர்வாகத் துறைக்குக் கீழ்ப்படிந்தே, அதாவது இரண்டாம் நிலை வகிக்கும் நிலையிலேயே செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் பயன்படுத்தியுள்ள சொல்லாடல் “Judiciary plays second fiddle to govt in judges’ appointment” என்பதாகும். அதன் பொருள், “நீதிபதிகள் நியமனத்தில் அரசின் முடிவுக்கு நாங்கள் ஒத்து வாசிக்கிறோம்” என்பதுதான்.

‘நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கலாமா?’ என்று ஒரு கேள்வியைக் கொலீஜியம் முறைக்கு எதிராக நாம் எழுப்புவதுண்டு. ஆனால், இப்போது நீதித் துறைக்கும் மேலான ஓர் அமைப்பாக, அமர்ந்துகொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நீதிபதிகள் நியமனத்திற்குத் தனியாக தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்கி, அதை அரசியலமைப்புச் சட்டம் கூறும் நீதித் துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று கூறி நீதிமன்றம் ரத்துசெய்த பின்னர், வேறு வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன்னுடைய கரங்களை நீதித் துறையின் மீது நீட்டியது.

கொலீஜியம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பட்டியலை ஏற்காமல், தங்களுக்கு உவப்பில்லாதவர்கள் என்றோ, தங்கள் கருத்துக்கு மாறாக இருப்பார்கள் என்றோ ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு கருதுமேயானால், அவர்களை நியமிக்காமல் நிறுத்திவைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதைத் தான் நீதிபதி திபங்கர் தத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியான வேட்பாளர்களின் கோப்புகள் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட காலமாக முடக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறை நிர்வாகத் துறைக்குக் கீழ்ப்படிந்த நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகும், தேர்வு செய்யும் நிலையிலேயே நீதித் துறை அல்லாத ஒரு வெளி நபரை உள்ளே கொண்டுவருவதற்கான கோரிக்கை ஏன் இன்னும் வலுவாக எழுப்பப்படுகிறது?” என்று வியப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பே, மற்றொரு நடப்பு உச்சநீதிமன்ற நீதிபதியான உஜ்ஜல் புய்யான், “நீதிபதிகள் நியமனங்களும், தேர்வுகளும் வெளிப்படையானதாக இல்லை” என்று ஒரு பல்கலைக்கழக விழாவில் குற்றம் சாட்டியிருந்தார். முன்னாள் நீதிபதியான தீபக் குப்தா, “உயர்ஜாதியினரே பெரிதும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; எல்லா சமூகங்களுக்கும், மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை” என்ற குரலை ஒரு கட்டுரையின் வாயிலாக எழுப்பினார். இப்போது நீதிமன்றத்திலேயே நீதித் துறை நியமனங்களில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பதையும், கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் பெரும்பான்மையானவற்றை அரசு ஒப்புக்கொண்டாலும், குறைந்தது ஒரு பெயராவது ஒன்றிய அரசால் எப்போதும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதையும் நீதிபதி திபங்கர் தத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

“நீதித் துறை தன்னிச்சையாகச் செயல்படுகிறது என்று கருதப்படுவது உண்மையல்ல. இத்தகைய ஒரு பகுதி ஒப்புதல்களாலும், நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் நிலை என்னவாகும் என்பதைப் பொருட்படுத்தாமலும், நிர்வாகத்துடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் நோக்கில் கொலீஜியம் தொடர்ந்து செயல்படத் தீர்மானிக்கிறது; மேலும் நீதித் துறையை, அமைப்பை, தொடர்ந்து இயங்க வைப்பதே அதன் முன்னுள்ள வழியாக உள்ளது. இதன் மூலம் கொலீஜியம் ஓர் அரசியலமைப்பு நெருக்கடியைத் தவிர்க்கிறது” என்று நீதிபதி தத்தா கூறியுள்ளமை, நீதித் துறையின் மீது அரசு நடத்துவோர் கொடுக்கும் நெருக்கடியைப் பதிவு செய்துள்ளது.

நீதிபதிகள் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையும், நீதித்துறையின் சுதந்திரமும், அதே நேரத்தில் சமூகநீதியும் உறுதிசெய்யப்படுவது அவசியம். தொடர் சர்ச்சைகளையும், உயர்நீதித் துறையில் கருத்தியல் முறையிலோ, சமூக ரீதியாகவோ ஒரு சார்பான மேலாதிக்கத்தையும் தவிர்க்க அதுவே தீர்வாகும்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *