புதுடில்லி, செப்.4- நிறைவு செய்யப் படாத 40– உயர் சிறப்பு மருத்துவ இடங்களை மீண்டும் தமிழ்நாட்டிடமே ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அதை நிரப்பும் வகையில் கட் ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து முழுவதுமாக மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்கிய உயர் சிறப்பு மருத்துவப்படிப்புக்கான 40 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து 40 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து, அந்த இடங்களை தமிழ்நாட்டிடமே திரும்ப ஒப்படைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர் வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பட்டி ஆஜராகி, காலி யாக உள்ள 40 இடங்களை மீண்டும் தமிழ் நாட்டிமே ஒப்படைக்க முடிவெ டுத்துள்ளதாக தெரிவித்தார்.
‘‘கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதம் குறைப்பு தொடர்பாக முடிவு எடுக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? ” என ஒன்றிய அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பட்டி, வரும் 7-ஆம் தேதிக்குள் கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதம் குறைப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என உறுதிஅளித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், உயர் சிறப்பு மருத்துவப்படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதம் எவ்வளவு குறைக்கப்படுகிறது என்பது குறித்து முடிவெடுத்து அதனை நீதிமன் றத்தில் தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
