மும்பை, செப்.3 மகாராட்டிரத்தில் தனது மகள்களின் படிப்புச் செலவுக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் வெறுங்கால்களுடன் ஓடி முதல் பரிசை வென்றது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மகாராட்டிரத்தின் பீட் மாவட்டம் அம்பஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). கடும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், தனது இரண்டு மகள்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார. இதற்காக அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மய்யத்தில் சமையல் வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று மாரத்தான் போட்டி ஒன்றை அறிவித்தது. பல இளம் பெண்கள் டி-ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து பங்கேற்ற நிலையில், ரமாபாய் தான் வழக்கமாக அணியும் சேலையுடன் போட்டியில் கலந்துகொண்டார்.
பனிமூட்டம் அதிகம் இருந்த நிலையிலும், கற்கள் நிறைந்த பாதையிலும் அவர் செருப்பின்றி வெறுங்கால்களுடன் ஓடினார். போட்டியில் பல இள வயது போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் ஆளாக ஓட்டத்தை நிறைவு செய்து முதல் பரிசை வென்றார்.
இப்போட்டியில் வெறும் ரூ. 3,000 மட்டுமே பரிசுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், தன்னுடைய மகள்களுக்குப் புத்தகம் வாங்க இந்தத் தொகை உதவும் என்று கூறினார். மேலும், இவருடைய மகள் பூஜாவும் இந்தப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். மகள்களின் படிப்புக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் ஓடி வெற்றி பெற்ற இந்த நெகிழ்ச்சிச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன், பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
