மகாராட்டிராவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, 10 நாள் வரை நடைபெறும் இதற்காக மும்பை, புனே உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைத்து, பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த ஆண்டு வரும் செப்., 14இல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, அரசின் விதிமுறைகளையும் மீறி பெரிய பெரிய சிலைகளை பந்தல்களுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் பணிகள் மும்பையில் நடக்கின்றன.
மும்பையின் புலேஷ்வரில் பகுதியில் உள்ள பந்தலுக்கு 22 அடி உயரசிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ‘ஜெய் அம்பே சவுக்’ என்ற பகுதிக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த சிலை திடீரென பக்தர்கள் மீது சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர்.
இரு குழந்தைகள் உட்பட அய்ந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கவுள்ள நிலையில், மும்பையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது சிலை சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்ததும், 5 பேர் படுகாயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் பண்டிகைகளைக் கொண்டாடும் போது ஏற்படும் அலட்சியமும், போதிய திட்டமிடல் இன்மையும் உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பது இது முதன்முறையல்ல. கடந்த காலங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் நமக்குத் தெளிவான பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன:
ஊர்வலத்தின் போது அதிக உயரம் கொண்ட சிலைகள் மின்சாரக் கம்பிகளில் உரசுவதால் மின்சாரம் தாக்கியும், கீழே சரிந்தும் பலர் உயிரிழந்த நிகழ்வுகள் இங்கே தொடர் கதையாகி வருகின்றன.
நடந்து முடித்த காவடியாத்திரையில் மீரட் பகுதியில் இசைநிகழ்ச்சி என்ற பெயரில் வாகனத்தில் மிகபெரிய அளவில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாது என்று அரசு எச்சரித்த நிலையிலும் பல அடி உயர பெரிய ஒலிபெருக்கிகளை வைத்து காவடியாத்திரையினரோடு ஊர்வலகமாகச் சென்ற டிஜே வாகனம் மீரட் சவுராகி என்ற பகுதியில் திருப்பம் ஒன்றில் சென்ற மின்சாரம் தாக்கி வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர், ஓட்டுநர் வாகனத்திலேயே இறந்துவிட குற்றுயிராய் கீழே விழுந்தவர்களை யாரும் காப்பாற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அவர்கள் முதலுதவியின்றி உயிரிழந்தனர்.
காவடி யாத்திரை நெருக்கடி காரணமாக காவல்துறையும் தீயணைப்புத்துறையும் வருவதற்கு தாமதமானதால் விபத்தில் சிக்கிய 5 பேருமே உயிரிழந்துவிட்ட்தாக மருத்துவமனை கூறியது
அதே போல் கடந்த ஆண்டு மத்தியப்பிரதேசம் இந்தூரில் ராமநவமி ஊர்வலத்தில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநவமியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் ஊர்வலப் பொருட்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட காவிக்கொடிகள் பொருத்தப்பட்ட இரும்புக்குழாய் ரயில் தண்டவாளத்தை ஊர்வலத்தில் உள்ளவர்கள் கடக்கும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது.
இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்வு இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மின்சார விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது மட்டுமல்லாமல், மிகப் பெரிய சிலைகள் மற்றும் தேர் போன்ற அமைப்புகளைத் தயாரிக்கும் போதும், அவற்றை வீதிகளில் கொண்டு செல்லும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் காகித அளவிலேயே நிற்கின்றன. சிலையை எந்தப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், சிலையின் உயரத்திற்கும் சாலை வசதிக்கும் உள்ள தொடர்பு, அவசர காலப் பாதுகாப்பு சாதனங்கள் என எதுவுமே முறையாகக் கணக்கிடப்படுவதில்லை.
பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளின் உயரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, எளிதில் நகர்த்தக்கூடிய எடைக் குறைந்த பொருட்களால் சிலைகளைத் தயாரிக்க வேண்டும்.
சிலைகளை எடுத்துச் செல்லும் பாதைகளை முன்கூட்டியே காவல் மற்றும் மின்சாரத் துறையினர் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.
ஊர்வலங்களின் போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல பிரத்யேக வழிகளை (அவசர வழித்தடங்கள்) உறுதி செய்ய வேண்டும் என்ற விதிகளை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை மதக்கிறுக்குப் பிடித்தவர்கள்.
பக்தியும், ஆன்மிகக் கொண்டாட்டங்களும் மனித உயிர்களை விட மேலானவை அல்ல. மும்பையில் நடந்த இந்த சோக நிகழ்வு அனைத்து மாநில அரசுகளுக்கும், விழா அமைப்பாளர்களுக்கும் ஒரு உரத்த ‘எச்சரிக்கை மணி’ என்பதில் அய்யமில்லை.
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டது எல்லாம் வெற்றுச் சொற்கள் தானா?
