சென்னை, ஆக. 31- சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நாள்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதியத்துடன் வார விடுமுறை, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், பணியிடங்களில் கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தின் 11ஆவது நாளான நேற்று (30.8.2026) காலை முதலே ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டனர். குறிப்பாக பெண்கள் கருப்புச் சேலை அணிந்தும், ஆண்கள் கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அமர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
‘எங்கள் உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்’, ‘பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’, ‘தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் பிடித்திருந்தனர். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஒரே மாதிரியாக கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் அமர்ந்திருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தொடர் போராட்டம் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டபோதிலும், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்ட களத்திலிருந்து விலகப்போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முக்கிய கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், தங்களது பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்; முதலமைச்சர் தங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 11 நாட்களாக போராட்டம் நீடிக்கும் நிலையில், அடுத்தகட்டமாக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
