வாசிங்டன், ஆக.27- அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) சேவைகள் உலகின் பல்வேறு இடங்களுக்கும் செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதி வழங்கி வருகின்றன.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா தொடுத்துள்ள போரில், அந்நாட்டின் தொலைத்தொடர்புகளுக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கும் இணையதள வசதி தேவைப் படுகிறது.
ஆனால், அத்தியாவசிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள தால் போர்க்காலத்தில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையவசதி உக்ரைனின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் சேவைகள் வழங்கப் பட்டு வருவதைப் பாராட்டி எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் “ஆர்டர் ஆஃப் பிரீடம்” (Order of Freedom) எனும் உயரிய விருதை வழங்கவுள்ளதாக, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து எலான் மஸ்க்கின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைகளைப் உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவதற்கு எலான் மஸ்க் அனுமதி அளித்துள்ள நிலையில், ரஷ்ய பகுதிகளிலும் ஸ்டார்லிங்க் சேவையைத் தங்களின் ராணுவம் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
