புதுடில்லி, ஆக.19 முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய் தால், அதுதொடா்பாக சிபிஅய் விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தியது.
கடந்த ஜனவரியில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அய்-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அங்கு வந்த அப்போதைய மாநில முதலமைச்சர் மம்தா அத்துமீறி அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
அந்த மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மம்தா தலைமையி லான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனைகள் அளிக்கும் நிறுவனமாக அய்-பேக் செயல்பட்ட நிலையில், அக்கட்சியின் தோ்தல் வியூகங்கள் சார்ந்த ரகசிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன், அய்-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதாக திரிண மூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரம் தொடா்பாக மம்தாவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 18.8.2026 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, ‘மாநில முதலமைச்சராகவும் உள் துறை அமைச்சராகவும் பதவியில் உள்ளவா் குற்றம் செய்தால், அது தொடா்பாக சிபிஅய் விசாரிப்பது பொருத்தமானதா, இல்லையா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.2-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
