போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நீதிபதி ஜி.பி.சிங் நினைவு நான்காவது சொற்பொழிவை நிகழ்த்திய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அவர்கள், சட்டத் துறை குறித்தும் தீர்ப்புகள் குறித்தும் பல்வேறு முக்கிய மான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “நீதித்துறை உட்பட அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்; தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகு, அவை விமர்சன ரீதியாக ஆராயப்பட வேண்டும்; தேவைப்பட்டால் விமர்சிக்கப்படவும் வேண்டும். ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பது அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை விமர்சிப்பதாகாது” என்றும் நீதிபதி பேசியிருப்பது அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகும்.
அப்படி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய தீர்ப்புக்கு எடுத்துக்காட்டாக அவர் கூறியிருப்பது, பொருளாதார அடிப்படையில், உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு (EWS) வழங்க வேண்டும் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பினைத்தான்!
“ஒரு சட்ட மாணவனாக உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படைப் பிழைகள் உள்ளன என்று நான் கூறுகிறேன். இது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தற்போதும் பணியில் இருக்கும் மாண்பமை நீதிபதி உஜ்ஜல் புய்யான் ஆற்றிய உரை, சமூகநீதிக்குச் சவாலாக ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க வேண்டிய தேவையைச் சட்ட மாணவர்களுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமூகரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (Socially, Educationally backward) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வரையறுத்தது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வாதத்தை, இந்திய அரசியலமைப்புச் சட்ட அவை, பல்வேறு விளக்கங்களை எடுத்துச் சொல்லி, அரசியலமைப்புச் சட்ட விவாதங்களின் போதே நிராகரித்துவிட்டது. காரணம், அது நிரந்தரமானதல்ல என்பதுடன், இந்தியாவில் பொருளாதாரப் பின் தங்கிய நிலை என்பது சமூகரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மையுடன் தான் பிணைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் இந் நாட்டில் செல்வங்களை அணுகக் கூடாதவர்களாக, வசதியான வாழ்க்கை வாழக் கூடாதவர்களாக ஒடுக்கப்பட்டிருந்தவர்கள். மேலும், இடஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தனி நபரையும் கணக்கெடுத்து வழங்கப்படுவதல்ல; அப்படி வழங்கவும் முடியாது. காலம் காலமாகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு, மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட நடைமுறை. அதில் பொருளாதார அளவுகோல் நுழைக்கப்படுவது, சமூகநீதியின் அடிப்படைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்திற்கும் விரோதமானது என்று தொடர்ந்து சமூகநீதியாளர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். உயர்ஜாதியி னருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டமே முறையானதல்ல; குறையுடையது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்துமாகும்.
இதனை, அந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய அன்றைய தலைமை நீதிபதி யு.யு. லலித், ரவீந்திர பட் ஆகிய இரு நீதிபதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால், அதில் பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். “இந்தியக் குடியரசின் எழுபதாண்டு கால வரலாற்றில், வெளிப்படையாகவே (உரிமைக்கு உரியவர்களை) விலக்கி வைக்கும், பாகுபாடு காட்டும் ஒரு கொள்கைக்கு இம்முறைதான் முதன்முறையாக இந்த நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறி தனது மாறுபட்ட தீர்ப்பைத் தொடங்கும்போது, நீதிபதி பட் எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தனது கருத்துகளைத் தெளிவாகப் பதிவு செய்தார்.
அதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 16(4), அரசு அதி காரத்தில், வேலைவாய்ப்பில் யாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லும்போது, “அரசின் சேவைத் துறைகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் (not adequately represented) பெறாதவர்களுக்கு” என்று இடஒதுக்கீட்டின் நோக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறது.
ஆனால், ‘நீதித் துறை, அதிகாரத் துறை என எல்லா அதிகார மட்டங்களிலும் உயர் பதவிகளிலும் இடம்பிடித்திருக்கும், உயர்ஜாதியினருக்கு எந்த அடிப்படையில் மேலும் இடஒதுக்கீடு வழங்குவது? அவர்களை உரிய பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் என்று எப்படிச் சொல்வது?’ என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட உயர்ஜாதி ஆதிக்கம் நிலைக்க வேண்டும் என்று நினைக்கும் எவரிடமிருந்தும் பதில் இல்லை.
தகுதி – திறமைக்கு முக்கியத்துவமில்லையா என்று அதுவரை பேசிய பார்ப்பனர்கள், தங்களுக்கு இடஒதுக்கீடு என்றதும், அப்படிப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். காரணம், அரிய வகை உயர்ஜாதி ஏழைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பெண்கள் எல்லாம், சராசரி தேர்ச்சி விகிதமான 35%க்கும் குறைவானவை. இவர்களால் காலம் முழுக்க ‘கோட்டாவில் வந்தவர்கள்’ என்று ஏகடியம் பேசப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை விட மிகக் குறைவான மதிப்பெண்கள் தாம், ‘பிறவி அறிவுஜீவி’களான பார்ப்பனர்களுக்கு வைக்கப்பட்ட தகுதி அளவுகோல்.
அது மட்டுமல்லாமல், ஏழைகள் என்பதற்கு வரம்பாக வைக்கப் பட்ட அளவுகோலும், ஏழைகளைக் கேலி செய்யும் ஒன்றாகும். 8 லட்சம் வருமானம் உடையோரை ஏழை என்று வரையறுத்தது பா.ஜ.க. அரசு. ஏழ்மைக்கான அளவுகோலிலும் வர்ணப் பாகுபாடா?
அதே போல, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்த நீதிமன்றங்கள், 50%க்கு அதிகமாக, திடீரென 10% கூடுதலாகக் கொடுக்க இசைந்தன; அது உயர்ஜாதிக்கு என்றதும் வியாக்கியானங்கள் எழுதின. அப்பப்பா… இந்தப் பார்ப்பனியத்துக்குத் தான் எத்தனை நாக்குகள்?
ஒரே சட்டத்தில் ஓராயிரம் ஓட்டைகள் என்று விடுகதை போடுவதற்குத் தகுதியான இந்த உயர்ஜாதியினருக்கு இடஒதுக் கீடு வழங்கும் சட்டம் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத்தான் விவாதிக்க வேண்டும்; விமர்சிக்கப்பட வேண்டும்; அது குறை யுடைய தீர்ப்பு என்று உடைத்துப் பேசியிருக்கிறார் நீதிபதி உஜ்ஜல் புய்யான். வரவேற்கத்தக்க அந்த நீதிபதியின் உரையை, உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி பரப்புரை நடந்து வரும் இந்தச் சூழலில் வெகுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது, நமது பரப்புரைக்கு வலுச் சேர்ப்பதாகும்.
