தூத்துக்குடி, ஆக. 14- தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டியில் பழங்கால தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு சங்கு அறுக்கும் தொழிற்கூடம் இயங்கியது. எனவே கொற்கைக்கிணையான சங்க காலத்துறைமுக நகரமான வெள்ளப்பட்டியில் அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
தூத்துக்குடி அருகே பட்டணமருதூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதி இடைக்காலத்தில் சங்கு அறுத்து ஆபரணங்கள் செய்யும் முக்கியத் தொழில் கூடமாக விளங்கியது. பட்டணமருதூர் பண்பாட்டின் தொடர்ச்சியைத் தேடும் முயற்சியில், தருவைக்குளத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் அ.மிக்கேல் தினேஷ் ஜோயல், கா.கருப்பசாமி உதவியுடன் தருவைக்குளம் மற்றும் வெள்ளப்பட்டிக்கு இடையே உள்ள ‘ஓடை’ என்ற நீர்நிலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.
பட்டணமருதூரில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஓடையின் வடபகுதியில் இடைக்காலச் சான்றுகளும், தென்பகுதியில் சங்ககாலச் சான்றுகளும் பரவி இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அ.மிக்கேல் தினேஷ் ஜோயல் கூறியதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு தொல்லியல் தளங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறோம். பட்டணமருதூர் அகழாய்வின் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் தேடிய போது, ‘ஓடை’ பகுதியில் ஆய்வு செய்தோம். அப்போது சங்க காலம் முதல் இடைக்காலம் வரையிலான அரிய சான்றுகளும், பன்னாட்டு கடல் வர்த்தகத்துக்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இந்த தொல்லி யல் எச்சங்கள் பரவிக் கிடக் கின்றன.
இங்கு சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், கார்னிலியன் மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், சங்கு அறுத்த துண்டுகள், இரும்பு கழிவுகள், வெளிநாட்டு மண்பாண்டங்கள் மற்றும் இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற மண் பாண்டங்கள், கண்ணாடி பாசிகள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள், செப்புக் காசுகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் குழாய்கள், சோழிகள், வட்டச்சில்லுகள், சீன செலடன், பார்சிலோன் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
சங்ககாலத் துறைமுக நகரான கொற்கையைப் போலவே, வெள்ளப் பட்டியிலும் சங்கு அறுத்து ஆபரணங்கள் செய்யும் தொழிற்கூடம் இயங்கி உள்ளது. மேலும் இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் மற்றும் சங்கு தொழிற்கூடச்சான்றுகள் வழியாக, வெள்ளப்பட்டி பகுதியானது சங்க காலத்தில் புகழ் பெற்ற கொற்கை துறைமுகத்துக்கு இணையான முக்கியத் துவம் வாய்ந்த ஒரு வணிக மய்யமாகத் திகழ்ந்திருக்கக் கூடும் என்று அறிய முடிகிறது.
இந்த பகுதியை அகழாய்வு செய்வதன் மூலம் சங்ககாலப் பண்பாடு மற்றும் கடல்சார் வணிகத்தை உலகறியச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
