உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது!
இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்!
நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இனி இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவில் மட்டுமே இருக்கும், இந்து மதத்தின் கொடிய நோய்களான வர்ணாசிரமம் – ஜாதி அடிப்படையில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் சமூகநீதியைச் செயல்படுத்தக் கொண்டுவரப்பட்ட முறையே இடஒதுக்கீடு ஆகும்.
உண்மையில், எல்லா அதிகாரப் பதவிகளையும், கல்வியையும் தங்களுக்கென்றே ‘ஒதுக்கீடு’ செய்துகொண்டவர்கள் பார்ப்பன – உயர்ஜாதியினர். ‘இன்னாருக்கு இது தான்! இன்னின்னாருக்கு இந்த உரிமைகள் கிடையாது’ என்பது பார்ப்பனர்களின் மனுஸ்மிருதி இடஒதுக்கீட்டு முறை. அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்பட்ட மறு ஒதுக்கீட்டு முறை தானே இன்றைய சமூகநீதி இடஒதுக்கீட்டு முறை!
அதனைக் கொண்டுவருவதற்கான போராட்டம் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய சமஸ்தானங்களான கோல்ஹாப்பூரிலும் (1902), மைசூரிலும் (1921) பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர் 1928இல் தான் மதராஸ் மாகாணத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை செயல்படுத்தப்பட்டது. அதுவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலான பின்னர் 1950 இல் பார்ப்பனர்களின் பொய் வழக்கால் ரத்து செய்யப்பட்டது.
1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்!
பின்னர் தந்தை பெரியார் நடத்திய மாபெரும் ‘மக்கள் போராட்டம்’ தான் 1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவரக் காரணமாகியது. அப்போதும், மாநிலங்களில் இருந்த இடஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைத்ததே தவிர, ஒன்றிய அரசுப் பணிகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1993-லும், 2006-லும் தான் கதவு திறக்கப்பட்டது.
இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும், இன்னும் ஒன்றிய அளவிலான இடங்களில் ஒடுக்கப்பட்டோ ருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை என்பது தானே நிலைமை! புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கும் உண்மையும் அதுதானே!
ஒவ்வொரு காலத்திலும் சமூக நீதி என்னும் தேரை ஒவ்வோர் அடி முன் நகர்த்துவதற்கும், எத்தனை எத்தனை ஆண்டுகள்? எத்தனை எத்தனைப் போராட்டங்கள்? மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வூட்டி, அணி திரட்டி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் சட்டங்களைக் கொண்டுவந்தால், நீதிமன்றம் குறுக்கே வந்து நிற்கும்.
அங்கும் வாதாடி, போராடி, அவர்கள் ஏற்படுத்தும் குறுக்கீடுகளையும், தடைகளையும், சட்ட ரீதி யாக உடைத்து, இடைச்செருகல்கள் என்னும் வெட்டுகளையும், காயங்களையும் தாங்கிக் கொண்டு தான், இயன்றவரை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.
சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது, சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, அதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது. அப்போதே பொரு ளாதார அளவில் பிற்படுத்தப்பட்டோர் என்று சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது நிரந்தரமானதல்ல; இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சமநிலையற்ற தன்மைக்கு, பிறவி அடிப்படையிலான பேதமே காரணமாக இருக்கிறது என்பதற்காகத் தான், மிகச் சரியாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டது.
பொருளாதார அளவுகோல் தடையைக் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்!
ஆனால், மண்டல் ஆணைய அறிக்கை ஏற்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு, மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் ஏற்கப்பட்ட பின்னர், அது தொடர்பான இந்திரா சஹானி வழக்கில், இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்ற (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத) முட்டுக்கட்டையையும், பிற்படுத்தப்பட்டோரில் கிரிமீலேயருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற பொருளாதார அளவுகோல் தடையையும் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்.
மண்டல் அறிக்கையை அமல்படுத்தக் கோரி, நாம் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினோம். அது குறித்தெல்லாம் எந்தச் செய்தியும் வெளியிடாத ஊடகங்கள், இடஒதுக்கீட்டை எதிர்த்து வடநாட்டில் சில உயர்ஜாதியினர் நடத்திய போராட்டங்களுக்கு வானளாவ விளம்பரம் தந்தன. அதே போலத் தான் 2006 இல் கல்வித் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் 93 ஆம் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும், போராட்டங்களை நடத்தி இட ஒதுக்கீட்டை எதிர்த்தனர்.
பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன!
ஆனால், எந்தவிதப் போராட்டமும் இல்லாமல், காத்திருப்பும் இல்லாமல், அய்ந்தே நாள்களில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை (EWS), 103 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உடனடியாக நிறைவேற்றிக் கொண்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக்கே விரோதமான, அரசியலமைப்புச் சட்ட விவாதங்களின் போதே தூக்கி எறியப்பட்ட பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்து, அதையும் ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன. அதைவிட வேகமாக நிதி ஒதுக்கீடு ஒன்றிய அரசால்.
எவ்வளவு மோசமான மனநிலை!
எவ்வளவு மோசமான ஆதிக்கம்!
ரோகித் வேமுலா, பாயல் தத்வி போன்ற மாணவர்களால், கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தைக் கண்டித்து, 2019 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தந்த ஆணையின் படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில்தான் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத ரீதியான பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் யு,ஜி.சி.யின் வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டன. அதைக் கண்டித்து உயர்ஜாதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் பரபரத்தன. உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, பாகுபாடுகளைத் தடுக்க முயற்சி செய்யும் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உடனடியாகத் தடை வழங்கியது. பாகுபாட்டை, நிறுவனப் படுகொலைகளைத் தடுப்பது உயர்ஜாதி யினருக்கு வலிக்கிறது என்றால் எவ்வளவு மோசமான மனநிலை! எவ்வளவு மோசமான ஆதிக்கம்! இதுதானே இன்றைக்கும் இந்தியாவின் நிலை.
“இடஒதுக்கீடு இல்லாத இந்தியா”வாம்!
ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஜாதி ரீதியாக இன்றைக்கும் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகள், எதிர்கொள்ளும் தடைகள் ஏராளம், ஏராளம். ஆனால், அந்தக் கொடுமைகளைக் கடக்க உதவி செய்யும் சமூகநீதியை நசுக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றும் இன்றைக்கு ஓர் உயர்ஜாதிக் கூட்டம் “இடஒதுக்கீடு இல்லாத இந்தியா” என்ற ஆணவத்தோடு ஒரு புதுப் பெயரில் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒரே நாளில் ஊடக வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. சமூக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருப்பதை, பொருளாதார ரீதியாக என்று மாற்றி, அதன் மூலம் மீண்டும் உயர்ஜாதியினர்க்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு என்று கொண்டுவர வேண்டுமாம்!
முன்பு எப்படி மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் குறித்துத் தவறான கருத்தினை வடநாட்டு, தென்னாட்டுப் பார்ப்பன ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பியதோடு, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து அதுவரை ஆதரவு தந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற வலதுசாரிகள் வாபஸ் வாங்க, இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகளும், உரிய ஆதரவினைத் தரவில்லை.
அதற்குமுன் தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராக இருந்தபோது 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணை யைக் கொண்டு வந்தபோது, சி.பி.எம் (மார்க்சிஸ்ட்) கட்சி, இடஒதுக்கீட்டில் ‘பொருளாதார வரம்பு’ அல்லது கிரீமிலேயர் கோட்பாடு இருக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான தங்கள் கட்சியின் கொள்கை முடிவுக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் வருமான வரம்பு முடிவினை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது. பின்னணியில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் சி.பி.எம். ஆதரித்தது என்பதும் வரலாறு.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.) 9 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பு பிரச்சினையின்போதும், EWS சட்டத்தின்போதும் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட நிலையே முக்கியமானது எனக் கருதி, இந்த பொருளாதார வரம்பை எதிர்த்த திராவிடர் கழகம், தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றது.
அதே நிலைதான் மீண்டும் வடக்கே உள்ள பார்ப்பனர்களால் – பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின் ‘‘கண் ஜாடையோடு’’, பொல்லாத வாடைக்காற்றாக வீசி, உயர்ஜாதிகளின் ஆதரவோடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்க ளின் தேர்தல்களையே மனதில் கொண்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையற்று இருக்கிறார்கள்; அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையென சிதறிக் கிடக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஊட்டும் மதப் போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்ற மமதையில் உயர்ஜாதிப் பார்ப்பனக் கூட்டம் மீண்டும் தார்ப்பாச்சையை இறுக்கிக் கொண்டு முண்டிப் பார்க்கிறது!
அதை முளையிலேயே கிள்ளியெறிய, அத்துணை சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்களும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரளவேண்டும்.
தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி…
எச்சரிக்கையோடும், விழிப்போடும் அணுக வேண்டிய காலகட்டம் இது! சமூகநீதியால் பலன்பெற்ற மக்களிடமே, இடஒதுக்கீடு என்பது தரக் குறைவானது என்றும், இழிவானது என்றும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, தகுதி- திறமை என்னும் மாய, மோசடி வலைக்குள் சிக்கவைக்க அனைத்து வகை ஊடகங்களும், பிரச்சாரங்களும் நடந்திருக்கின்றன. தாங்கள் அனுபவித்தால் போதும், அடுத்தவருக்கு எதற்கு இந்த ஏணி என்று அதை எட்டி உதைக்கும் கோடரிக் காம்புகள் சிலவும் நம்மில் இருப்பதை நாம் அறிவோம். t
அனைவரையும் ஓரணியில் இணைத்துப்
போராட வேண்டியது அவசியம்!
அதை முறியடித்து, நமது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டி, நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூகநீதியைச் சிதைக்க நடந்திருக்கும் முயற்சிகளை, சூழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக்காட்டி, இன்று தொடங்கியிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் ஓரணியில் இணைத்துப் போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
‘‘ஜாதி ஒழிந்த இந்தியா’’
‘ஜாதி ஒழிந்த இந்தியா’வாகக் கொண்டு வர வேண்டும் என்பதே நமது உண்மையான போராட்டம்! அதை நோக்கி இளைஞர்கள் முன்வரவேண்டும்.
ஜாதி என்பது நோய்; பாகுபாடும், தீண்டாமையும் என்பது அதன் வெளிப்பாடுகள்! அதே கிருமிகளை ‘இன்ஜெக்ட்’ செய்து, ‘ஜாதி நோயை’ ஒழிக்கும் மருந்தே இட ஒதுக்கீடு! ஜாதி ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!
ஜாதி ஒழிப்பாளர்கள் போல் வேடம் போடும் இந்த ஆதிக்கவாத உயர்ஜாதியினர், ஜாதியை ஒழிக்கும் பணியில் ஈடுபட முன்வருவார்களா? மதத்திலும், சமூகத்திலும் அரசியலிலும் ஜாதி ஆதிக்கம் நிலவுவது குறித்து இந்தத் ‘திடீர் சமத்துவப்’ போராளிகளுக்கு எதிர்ப்பு உணர்ச்சி உண்டா?
‘ஜாதி இருக்கவேண்டும்; அதன் ஏற்றத் தாழ்வு இருக்கவேண்டும்; தங்களின் ஆதிக்கம் குறையக்கூடாது!’
ஆனால், ‘ஜாதி ரீதியான ‘இட ஒதுக்கீடு’ மட்டும் இருக்கக்கூடாது என்பது எவ்வளவு பெரிய மோசடி!
எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் உண்டா இந்நாட்டில்?
சமமான வாய்ப்புகளை, சமமான வசதிகளை, சம உரிமையை வழங்காமல் தகுதி, திறமை மட்டும் எப்படி சமமாக உருவாகும்? காணப்பட முடியும்?
இந்தப் புரட்டை அம்பலப்படுத்தினால்தானே நம்முடைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சமூகநீதி என்றால் என்னவென்று புரியும்! அதைச் செய்யவேண்டியது சமூகநீதியாளர்களின் முதன்மைக் கடமை அல்லவா?
அணியமாவோம்! அணி திரள்வோம்!
திராவிடர் கழகம் இதனை முன்னின்று முனைப்புடன் செயல்படுத்தும்! குறுகிய கால அரசியல் சூழல்களையெல்லாம் மறந்து, அனைவரும் திரள வேண்டியது அவசியம். நம் உரிமைகளைப் பறிக்க எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், ஈட்டிகள், குண்டுகள், சுனாமிகள், சுழற்காற்றுகள் என்று ‘சூப்பர் எல்நினோ’வாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் இந்தக் காலம் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்! உயிரைக் கொடுத்தும் உரிமையைப் பாதுகாப்போம்!
கட்சிகளைக் கடந்து, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அணிக்கு எதிராக, இட ஒதுக்கீடு எங்கள் உரிமை! எங்கள் தேவை! தேவை!! அதைப் பறிக்கும் முயற்சியை முறியடிக்க, மீண்டும் இரண்டாவது மண்டல் அறப்போர் பேருருக்(விஸ்வரூபம்) கொள்ளும், கொள்ள வைப்போம்!
இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதிக்கு ஆதரவான அணி; மற்றொன்று, சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி.
சமூகநீதிக்கு ஆதரவான அணியை வலுப்படுத்த வேண்டியது நமது முதல் பணி!
அணியமாவோம்! அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்! உரிமை வெல்வோம்! உரிமை வெல்வோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.8.2026
